தலையங்கம் – ஆகஸ்ட் 2022

Editorial_Aug_22

அன்புடையீர்!

வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து, வகுப்புவாத மதவெறிச் சக்திகளை முறியடித்து, மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்! நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை, இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீரவணக்கம் செலுத்துவோம்!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் 28/07/2022 துவங்கி, 09/08/2022 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் ‘பி’ பிரிவும், பெண்கள் அணியின் ‘ஏ’ பிரிவும் வெண்கலப்பரிசை வென்றுள்ளன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

இதுநாள் வரை சென்னையில் மட்டுமே, பெரியளவில் நடந்து வந்த புத்தகக்காட்சி, தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பரவலாக நடக்கத் துவங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம். அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த புத்தகக்காட்சிக்கு, மாணவர்கள் அதிகளவு வந்தார்கள் என்ற செய்தியறிந்து, மிக்க மகிழ்ச்சி. எல்லா ஊர்களிலும் புத்தக விற்பனை நன்றாக உள்ளது என்பதும், மகிழ்ச்சிதரும் செய்தி.

தற்காலத் தமிழகத்தில் சிறார் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி கண்கூடாகத் தெரிகின்றது. பல புதிய பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடத் துவங்கியுள்ளன. புதியவர்கள் பலர் சிறுவர்க்காக எழுத முன்வந்துள்ளனர்.  முக்கியமாகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் நூல்கள், இப்போது அதிகளவில் வெளிவருவது குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் மாணவர்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் ஆசிரியர்கள் வகுப்பறை, பள்ளிக்கல்வி, மாணவர்களின் உளவியல், மூன்றாம் வெளி ஆகியவை பற்றியெழுதும் நூல்கள், பள்ளிக்கல்வி குறித்த சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

சென்னை பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம், அண்மையில் நடந்த புத்தகக்காட்சிகளில், குழந்தைகளை வைத்தே 25 சிறுவர் நூல்களை வெளியிட வைத்துப் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றது. அந்நூல்களைப் பெற்றுக் கொள்பவர்களும் சிறுவர்களே! சிறுவர்களிடம் புதிதாக வெளியாகும் நூல்களைக் கொண்டு சேர்க்க, இது ஒரு நல்ல முயற்சி!

இக்காலக் குழந்தைகளின் சிந்தனைக்குத் தீனி போடும் விதத்தில் வெளிவரும் புதிய கதை நூல்களைப் பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து, வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளின் கற்பனை சக்தியைத் தூண்டி அவர்களின் படைப்பூக்கத்தை வெளிக்கொண்டு வருவதற்குக் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும். இதற்குப் பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு நிச்சயம் தேவை.

சிறுவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் பற்றிய பரிந்துரைகள், குழந்தைகளின் வயதுக்கேற்றபடி வெளியாகியுள்ளன. குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைப் பெற்றோர் அவர்களுக்கு வாங்கி வாசிக்கக் கொடுப்பது மிகவும் அவசியம்.

எங்கள் சுட்டி உலகம் காணொளிகளில் சிறுவர் பாடல்கள், குழந்தைகளைக் கவரும் விதத்தில் சிறப்பான அனிமேஷனுடன் அவ்வப்போது வெளியாகின்றன. நம் குழந்தைகள் தாய்மொழியைத் திருத்தமாகப் பேசுவதற்குத் தமிழில் பாடிப் பழகுதல் வேண்டும். எங்கள் காணொளிகளில் பிரபல சிறுவர் எழுத்தாளர்களின் கதைகளும், அவ்வப்போது வெளியாகின்றன. அவற்றையும் உங்கள் குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பியுங்கள்.

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: