சிறுவர்க்கான கதைப்போட்டி முடிவுகள்!

story_results

அனைவருக்கும் வணக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் 🎉!  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கதைப்போட்டி முடிவுகள் !

கதைப்போட்டி முடிவுகள் !

முதல் பரிசு காணாமல் போன சிறகுகள்🥇அனுக்ரஹா கார்த்திக் ₹1000-
இரண்டாம் பரிசுகிரீடம்🥈பூ.தனிக்‌ஷா பாரதி ₹750-
இரண்டாம் பரிசுஇளவரசர் வீரதேவன்🥈பா.பு.சரவண பாண்டியன் ₹750-
மூன்றாம் பரிசுதேவதையின் கதை🥉எஸ்.தனிஷ்கா ₹500-
மூன்றாம் பரிசுமாய மோதிரமும் மந்திரக்காரியும்🥉நானிலா மேபெல் ₹500-

ஊக்கப்பரிசுகள் [8] 

பைரவனின் பராக்கிரமம்🎖️ பி.கீ.ப்ரணவ்₹ 250-
மீனாவின் துணிச்சல்🎖️ பி.கீ.ப்ரணவி₹ 250-
செவ்வாயில் ஓர் சாகசம்🎖️ செ. அனந்தராஸ்ரீ₹ 250-
அனுபவம்🎖️ மா.கிருத்திக்₹ 250-
காலத்திற்கு ஏற்ப ஓடு🎖️ ச.ச.சுபவர்ஷினி₹ 250-
காணாமல் போன ஐந்து கரடிகள்🎖️ ஸ்ரீநிதா சீனிவாசன்₹ 250-
நண்பர்கள்🎖️ கதிர் கண்மணி₹ 250-
பூமித் தாயின் குமுறல்🎖️ ஜீ.மைத்ரேயி₹ 250-

சுட்டி உலகத்தில் பிரசுரம்

மரமும் கடலும்🎖️ கமல் சங்கர்  ₹ 100-

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் குழந்தைகள் தினம் (2021) ஆகியவற்றை முன்னிட்டு, கன்னிக்கோவில் இராஜா அவர்களின் லாலிபாப் சிறுவர் உலகத்துடன் இணைந்து சிறுவர்க்கான கதைப்போட்டியை கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி சுட்டி உலகத்தில் அறிவித்தோம்.

7 – 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் கலந்து கொள்ளும் இப்போட்டியில் குறைந்தபட்சம் 300 வார்த்தைகள் எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தோம்.

இருந்தாலும் குழந்தைகளால் அவ்வளவு வார்த்தைகள் எழுத முடியுமா என்ற சந்தேகம், முதலில் எங்களுக்கு இருந்தது. கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகத்தில், கதை எழுதப் பயிற்சி பெறும் பல குழந்தைகள் சிறப்பாக எழுதிவருவதை, அவர் வாயிலாக அறிந்தபோது எங்கள் சந்தேகம் தெளிந்தது.

சுட்டி உலகம்’ இணையதளம் ஆரம்பித்து, ஆறு மாதங்களே ஆன நிலையில், இந்தக் கதைப்போட்டியை நடத்த முடிவு செய்தபோது இத்தனைக் கதைகள் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. கதைப் போட்டியின் இறுதி நாளான அக்டோபர் 31 நள்ளிரவு வரை, எங்களுக்குக் கதைகள் வந்தவண்ணமிருந்தன.

முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குரிய கதைகள் தவிரவும் ஊக்கப்பரிசுக்கு சில கதைகளைத் தேர்வு செய்யவிருப்பதாக எங்கள் அறிவிப்பில் சொல்லியிருந்தோம். ஆச்சிரியப்படும் வகையில் பல கதைகள் சிறப்பாக இருந்தமையால், பரிசுக்குரிய 3 கதைகளை மட்டும் தேர்ந்தெடுப்பது, நடுவர்களுக்கு மிகவும் சிரமமான பணியாக இருந்தது, 

ஏற்கெனவே மூன்று பரிசுகள் மட்டுமே அறிவித்திருந்தோம்.  ஆனால் இப்போது ஐந்து பேருக்குப் பரிசுகள் தருவதென முடிவு செய்துள்ளோம்.     இரண்டாம் பரிசு பெறுபவர்கள் தலா ரூ 750 உம், மூன்றாம் பரிசு பெறுபவர்கள் தலா ரூ 500/-உம் பெறுவார்கள்.  அதாவது பரிசுத் தொகை இருவருக்குப் பிரித்தளிக்கப்படாமல், முழுவதுமாக வழங்கப்படும். மேலும் 8 கதைகள் ஒவ்வொன்றும் தலா ரூ 250/- ஊக்கப்பரிசு பெறுகின்றன. பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கு ரூ 100/- பரிசு! என்ன சுட்டிகளே! உங்களுக்கு மகிழ்ச்சி தானே?

தற்போது குழந்தைகள் தமிழில் வாசிப்பதும், எழுதுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலையில் அவர்களைத் தமிழில் எழுதவும் வாசிக்கவும் தூண்டும் வகையில் இப்போட்டி இருக்கும் என்று நம்பினோம். அதே சமயம் குழந்தைகளின் கற்பனைத்திறன், எழுத்துத்திறன், படைப்பாற்றல் இவற்றையும் ஊக்குவிக்க விரும்பினோம்.

கதைகளை வேர்டு டாகுமெண்டாக அனுப்பவேண்டும் என்பதால் பெற்றோர் உதவலாம் என்று தெரிவித்திருந்தோம். தமிழ் எழுதத் தெரியாத சிறுவர்களும், சிறு குழந்தைகளும் பெற்றோர் உதவியுடன் கதைகளை அனுப்பியிருந்தனர். (இதனால் சிலவற்றில் பெற்றோர் தலையீடும் தாக்கமும் சற்று அதிகமாக இருந்ததும் உண்மை) ஆனால் பல குழந்தைகள் சிறப்பாக எழுதியிருந்தனர்.

இந்தப் போட்டியில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, வாக்கியப்பிழை, சந்திப்பிழை, ஒற்றுப்பிழை என எந்தப் பிழையையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. கதையின் கரு, ஓட்டம், கற்பனைத்திறன் இவற்றுக்கே மதிப்பெண். முக்கியமாகக் குழந்தைகளின் கற்பனைத்திறனுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கப்பட்டது. குழந்தைகளின் கற்பனை மிக வித்தியாசமானது, விநோதமானது. சிறப்பான கற்பனைத்திறன் உள்ள கதைகள், தரவரிசையில் முந்திக்கொண்டன.

கதை வாசிப்பு என்பது குழந்தைகளுக்குக் கேளிக்கை (fun) அளிப்பதாக இருக்கவேண்டும். நீதிநெறியோடு கதையை முடிப்பதெல்லாம் பழைய பாணி. அதனாலேயே அவற்றைத் தவிர்க்குமாறு அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சில கதைகளில் அந்த அறிவிப்பு பின்பற்றப்படவில்லை.

அடுத்ததாகக் கதைக்கருவிலும் மிகுந்த கவனம் செலுத்தினோம். அறிவியல், சுற்றுச்சூழல், அனுபவம், மாயாஜாலம், சாகசம், சரித்திரம் எனப் பல்வேறு தலைப்புகளிலும், குழந்தைகளின் கற்பனைத்திறன் மிக அழகாக வெளிப்பட்டிருந்தது.

அறிவியல் கதைகளில் புனைவுகள் இருக்கலாம். ஆனால் அவை ஏற்புடையவையாக இருக்கவேண்டும். ஒளியின் வேகத்தில் பயணித்துச் செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமியை வந்தடைந்த ஒரு விண்கலன் பூமியிலுள்ள ஒரு அருவியைத் தாண்ட முடியாமல் திணறுவதாக எழுதியிருப்பது பெரும் தகவற்பிழை. அறிவியல் புனைகதைகளில் கூடுமானவரை, தகவற்பிழை இல்லாமல் எழுதுவது முக்கியம்.

தகுதிச் சுற்றில் நிராகரிக்கப்பட்ட சில கதைகளைப் பற்றியும், இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஒரு கதையில் வெள்ளை நிறமும், நீளமான முடியும்தான் ஒரு பெண்ணின் தோற்ற அழகுக்கான வரையறை என்ற கருத்து வெளிப்பட்டது.  வெள்ளை நிறம் தான் உசத்தி, கருப்பு மட்டம் என்ற எண்ணம், நம் குழந்தைகளின் மனதில் பதியவே கூடாது.  வளரும் குழந்தைகளின் மனதில் இது போன்ற தவறான கருத்துகள் பதிவது தவிர்க்கப்படவேண்டும் என்ற காரணத்தால், அக்கதை தேர்ந்தெடுக்கப் படவில்லை.

மற்றொரு கதை மிக சுவாரசியமாக இருந்தும், குறைந்தபட்ச எண்ணிக்கையை விடவும் மிகவும் குறைவான வரிகளைக் கொண்டிருந்த காரணத்தால் பரிசுக்குத் தேர்வாகவில்லை.

குழந்தைகளின் உண்மையான வயதை அறிந்து, போட்டியில் பங்கு பெறும் மிகவும் குறைந்த வயது குழந்தைகளுக்கு, போனஸ் மதிப்பெண் அளித்துச் சிறப்புப் பரிசு கொடுக்க நினைத்திருந்தோம்.  ஆனால் சிலர் பிறப்புச் சான்றிதழை இணைக்கவில்லை. இருப்பினும் இது எங்கள் முதல் கதைப்போட்டி என்பதால், விதிகளைச் சற்று தளர்த்தி, சிறந்த படைப்புகளைத் தெரிவு செய்துள்ளோம்.

இக்கதைகளின் மூலம் சிறார்களின் மாறுபட்ட கற்பனைத்திறனை வெளிக் கொணர முடிந்ததில் எங்களுக்குத் திருப்தி..  தமிழில் அவர்கள் தொடர்ந்து வாசித்து எழுதவும், பின்னாளில் கதைகளைப் படைத்துச் சிறந்த சிறார் எழுத்தாளராகத் திகழவும், இப்போட்டி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.  .

இந்த 5 பரிசு பெற்ற கதைகளுடன், 8 ஊக்கப்பரிசு பெறும் கதைகளையும் சேர்த்துப் புத்தகமாக வெளியிடும் பொறுப்பைச் சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் ஏற்றுள்ளார்.  ஜனவரி 2022 மாதத்தில் இதற்கான வேலை துவங்கும். அதில் பங்கு பெறும் கதை எழுதிய அத்தனை பேருக்கும், ஒரு பிரதி இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

வாரம் ஒன்றாகப் பரிசு பெறும் கதைகள், சுட்டி உலகத்தில் பிரசுரிக்கப்படும்.  குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள்.  அது உங்கள் குழந்தைகளின் எழுத்துத் திறனை மேம்படுத்தும்.  கற்பனையை விரிவடையச் செய்யும்.

சுட்டி உலகத்தில் ஏறக்குறைய 100 புத்தகங்கள் குறித்த அறிமுகம் உள்ளது.  உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். 

பரிசு பெறும் குழந்தைகளின் பெற்றோர், உங்கள் கணக்கு எண் விபரங்களை எங்கள் மெயில் முகவரிக்கு அனுப்பவும்.  உங்கள் குழந்தைகளின் கதை, சுட்டி உலகத்தில் வெளியான பிறகு, பரிசுத் தொகை உங்கள் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். 

போட்டிகளில் எப்போதும் விதிகளைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். கதைகளை வேர்டு (WORD DOCUMENT) டாகுமெண்டாக அனுப்பச் சொல்லியிருந்த போதும், பலர் பிடிஎப் (PDF) ஆக அனுப்பியிருந்தனர்.

பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கதைகளை, நாங்கள் அப்படியே வெளியிடமுடியாது.  அவற்றில் ஏராளமான பிழைகள் இருப்பதால் அவற்றைத் திருத்தியே வெளியிட முடியும். பிடிஎப் (PDF)வடிவத்தில் இருந்தால், திருத்துவது கடினம். 

எனவே மேலே கொடுத்துள்ள பரிசுக்குத் தேர்வானவர்கள் மட்டும், ஏற்கெனவே பிடிஎப் (PDF) ஆக அனுப்பியிருந்தால், உடனே வேர்டு (WORD) டாகுமெண்டாக மாற்றியனுப்பவும்.  அதற்குப் பிறகே சுட்டி உலகத்தில் அந்தக் கதை பிரசுரிக்கப்பட்டு, பரிசுத்தொகை அனுப்பப்படும்.

சுட்டி உலகத்தோடு பயணித்து, இக்கதைப் போட்டியைக் குழந்தைகளிடத்தில் கொண்டு செல்ல உதவிய கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கும், லாலிபாப் சிறுவர் உலகத்துக்கும், கதைப்போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த சுட்டிகளுக்கும், உதவிகரமாய் இருந்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி.

மறக்காமல் இப்போட்டியில் பங்கேற்ற உங்கள் குழந்தைகளின் அனுபவம் குறித்து எங்களுக்கு எழுதியனுப்புங்கள். 

எங்கள் மெயில் முகவரி:- team@chuttiulagam.com

நன்றியுடன்

சுட்டி உலகம் நடுவர் குழு.

Share this:

7 thoughts on “சிறுவர்க்கான கதைப்போட்டி முடிவுகள்!

  1. ஒரு மறக்க முடியாத அனுபவமும், அழகான நினைவுகளையும் குழந்தைகள் தினத்தன்று அளித்தமைக்கு “சுட்டி உலகத்திற்கு நன்றிகள்”. இந்நாளில் என் குழந்தைகள் மிக்க மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்து குதூகலிக்கின்றனர். இதற்கு வாய்ப்பு தந்த ஆசிரியர் , மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்.

    1. தங்கள் மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றிக்கும் எங்கள் நன்றி! உங்கள் குழந்தைகள் தொடர்ந்து எழுதி சிறார் இலக்கியத்தில் தடம் பதிக்க வாழ்த்துகள்!

  2. நன்றி. போட்டி முடிவுகள் கண்டு மகனுக்கு மகிழ்ச்சி. அவன் எழுத்தாற்றலை ஊக்கப்படுத்த பேருதவியாக இருந்தது இந்த நிகழ்வு. வரும் காலங்களில் தங்கள் குழுவின் அரும்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! தங்கள் மகனின் எழுத்தாற்றல் மேம்படவும், வருங்காலத்தில் சிறார் இலக்கிய எழுத்தாளராக மிளிரவும் எங்கள் வாழ்த்துகள்!

  3. வணக்கம்..இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்..இந்த போட்டியில்..மாயாஜாலம்,சாகச கதைகளை எழுத சொன்னதும்,பிள்ளைகளின் கற்பனை திறன் வெளிப்படுகிறது..என் மகனின் கதைக்கு பரிசு கிடைத்தது மிக்க மகிழ்ச்சிநல்வாய்ப்பிற்கு நன்றி

    1. தங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகள்! மென்மேலும் எழுதி வருங்காலத்தில் சிறந்த எழுத்தாளராகத் திகழ எங்கள் வாழ்த்துகள்!

Comments are closed.