எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், தமிழிலக்கிய சூழலில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த இவர், இரயில்வே துறையில் பணி செய்து, ஓய்வு பெற்றவர்.
இதுவரை 12 சிறுகதைத் தொகுப்பு, 5 கவிதைத் தொகுப்பு, ஒரு குறுநாவல், 6 கட்டுரை, 19 சிறார் இலக்கிய நூல்கள், ஆகியவற்றை வெளியிட்டியிருக்கிறார். இது மட்டுமின்றி, ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை மொழிபெயர்த்திருக்கின்றார்.
தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது, கலை இலக்கியப் பெருமன்றம் சிறுவர் இலக்கிய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது தமிழ்ப்பேராயம் அழ.வள்ளியப்பா விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கின்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் இவரைச் சுட்டி உலகத்துக்காகப் பேட்டி காண்பதில் மகிழ்கின்றோம்.
வணக்கம் அய்யா! சுட்டி உலகம் சார்பாக உங்களை வரவேற்கின்றோம். தமிழிலக்கியத்துக்குக் குறிப்பாகச் சிறார் இலக்கியத்துக்கு, உங்கள் கொடை அளப்பரியது. எழுத்துக்கு அடிப்படை வாசிப்பு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். சிறுவயதில் உங்களுக்கு வாசிப்புப் பழக்கம், எப்படி ஏற்பட்டது ?
சிறு வயதில் வாசிப்பின் மீது ஈடுபாடு ஏற்படுவதற்கு, என் அம்மா தான் முக்கிய காரணம். அவர்கள் கல்கண்டு, குமுதம் ஆகிய வார இதழ்களின் தீவிர வாசகி. வாரா வாரம் நான் தான் போய், அந்த இதழ்களை வாங்கி வருவேன். அவற்றை வீட்டுக்கு எடுத்து வரும் வழியிலேயே, கல்கண்டு இதழை வாசித்துக் கொண்டு வருவேன். அதில் சிறிய துணுக்குகளாக எல்லாமே நாலைந்து வரிகளில் எழுதியிருப்பார்கள். தமிழ்வாணன் சங்கர்லால் துப்பறிகிறார் என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார். பள்ளிப் பாடப்புத்தகத்தைத் தாண்டிய புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு முதலில் இப்படித் தான் எனக்கு ஏற்பட்டது.
எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில், அரசு பொது நூலகம் இருந்தது. நானும் என் நண்பர்களும் அங்குச் சென்று வாசிப்போம். அப்போதெல்லாம் அணில், வாண்டு மாமா, கோகுலம், பூந்தளிர், மாம்பழம் என ஏராளமான சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.. அப்போது நூலகர் தாம் எங்கள் தெய்வம் மாதிரி. அவரை அண்ணாச்சி என்றழைப்போம். அவருடைய தயவிருந்தால், எந்தப் புத்தகத்தையும் எடுத்து வாசிக்கலாம் என்பதால், முடிந்தபோதெல்லாம், அவருக்கு ஏதாவது சிறு உதவிகள் செய்வோம்.
என் வகுப்புத் தோழர் அணில் பத்திரிக்கையின் ஏஜண்டாக இருந்தார். அவரிடம் முத்து காமிக்ஸ், அணில் பத்திரிக்கை வாங்கிப் படிப்போம். இப்போது போல பெற்றோர், குழந்தைகளுடைய எல்லா விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். எங்களுக்கு நல்ல சுதந்திரம் இருந்தது. கடைக்குச் சென்று, எங்களுக்கு விருப்பமான சிறார் கதைப்புத்தகங்களைத் தேர்வு செய்து, வாங்கி வாசிப்பதற்குச் சுதந்திரம் இருந்தது. , .
பள்ளியிலும் வாரா வாரமிருந்த நீதி போதனை வகுப்பில், ஆசிரியர் கதை சொல்வார். பள்ளியில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் நூலக வகுப்பு இருக்கும். அப்போது எங்களை நூலகத்துக்கு அனுப்புவார்கள். நாங்கள் எங்களுக்குப் பிடித்த நூலை எடுத்து வாசித்துவிட்டு, வகுப்பு முடிந்தவுடன் அங்கேயே வைத்து விட்டு வருவோம்.. .
கல்லூரியில் எனக்கு அமைந்த நண்பர்கள் வட்டத்தின் மூலம், அபி, சிற்பி, புதுமைப்பித்தன், இன்குலாப், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி ஆகியோரின் எழுத்து அறிமுகமாகி, பிறகு உலக இலக்கியத்தை நோக்கிச் செல்ல வழியேற்பட்டது.
உங்கள் வாசிப்புப் பயணம் பற்றி, விரிவாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. உங்கள் எழுத்துப் பயணம், எப்போது ஆரம்பித்தது ?
முதலில் கவிதை தான் எழுதினேன். என் 17 வது வயதில், முதல் கவிதை வெளிவந்தது. சர்குலேஷன் குறைவாகக் கொண்ட சிறு பத்திரிக்கைகளில் தான் முதலில் எழுதினேன். என் முதல் சிறுகதை 1980-ல் வெளியானது. என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு ‘யாவர் வீட்டிலும்’ 1988 –ல் வெளியானது. எண்பதுகளில் கோவில்பட்டியில் 15 எழுத்தாள ஆளுமைகள் இருந்தார்கள். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏராக, கி.ரா இருந்தார். அவர்கள் எல்லோரிடமும் நிறையப்பேசி, விவாதித்து, ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாளி நீங்கள். கவிதை, சிறுகதை என எழுதிக் கொண்டிருந்த உங்கள் கவனம், சிறார் இலக்கியப் பக்கம், எப்போது, எப்படித் திரும்பியது?
1991 ல் என் மூத்த மகள் பிறந்தாள். என் சிறுவயதில் பள்ளியில் படித்த போது கவிமணி, அழ.வள்ளியப்பா, பெ. தூரன் பாடல்களை மனப்பாடமாகப் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை என் குழந்தைக்குப் பாடிக் காண்பித்தாலும், இப்போது புதிதாகப் பாடல்கள் ஏன் எழுதக்கூடாது என்ற சிந்தனை எனக்குத் தோன்றியது. எனவே முதலில் எளிய சந்தத்தில், குழந்தைப் பாடல்கள் தான் எழுதினேன். ஆனால் தொடர்ச்சியாக எழுதவில்லை. நான் எழுதிய மிகக் குறைந்த பாடல்களைக் “கேளு பாப்பா கேளு!” என்ற தலைப்பில், என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். இது தான் சிறார் இலக்கியத்தில் என்னுடைய முதல் வெளியீடு என்று சொல்லலாம்.
2000 க்கு பிறகு தான், சிறுவர் கதைகளை அதிகமாக எழுதத் துவங்கினேன். என் குழந்தைக்குக் கதை சொல்லத் துவங்கிய சமயத்தில், பழைய காலத்து அறநெறிக் கதைகளும், ராமாயண, மகாபாரதக் கதைகளும் மட்டுமே கிடைத்தன. ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும் தமிழ்ச்சூழலுக்குப் பொருத்தமாயில்லை. எனவே இக்காலச் சூழலுக்கேற்ற அறிவியல் பூர்வமான பகுத்தறிவைத் தூண்டுகிற கதைகள் இல்லை என்பது தான், நான் சிறுவர் நூல் எழுதத் துவங்கியதற்கு, முக்கிய காரணம்.
மலையாளத்திலிருந்து சிறார் நூல்களை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். மலையாளம் ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா? மொழிபெயர்ப்பு செய்வதற்காக, அம்மொழியைக் கற்றுக் கொண்டீர்களா ?
ஏற்கெனவே பஷீர், எம்.டி. வாசுதேவன் நாயர் போன்றோரின் படைப்புகளை தமிழில் வாசித்து, மலையாள இலக்கியத்தின் மீது, எனக்கு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. மலையாளம் கற்றுக் கொண்டால், அப்படைப்புகளை மூல மொழியிலேயே வாசிக்கலாம் என்பது தான், மலையாளம் கற்றுக்கொள்ள முக்கிய காரணம். திருவண்ணாமலைக்கு அருகில் வேளானந்தல் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக நான் பணி புரிந்தபோது, அங்கு ஏராளமான மலையாளிகள் என்னுடன் பணிபுரிந்தார்கள். இலக்கிய வாசிப்பின் மீது அவர்களுக்கிருந்த ஈடுபாடு, என்னை வியக்க வைத்தது. அவர்கள் மூலமாக நான் மலையாளம் கற்றுக் கொண்டேன். மலையாள நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், எனக்கு அவர்கள் ஊக்கமூட்டினார்கள். என்னுடன் பணிபுரிந்த தமிழர் ஒருவரிடம் புதுமைப்பித்தனைத் தெரியுமா என்றேன். அவர் சினிமா பாடலாசிரியர் புலமைப்பித்தனா? என்று திருப்பிக் கேட்டார். நம்மவர்களின் இலக்கிய அறிவு, இந்தளவில் தான் இருக்கின்றது!
முதல் மலையாள மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி…
வி. அபிமன்யு என்ற எட்டு வயது பையன், குழந்தைக்கான கதைப்புத்தகம் எழுதி, இந்திய அரசின் பரிசு பெற்றதாகவும், குழந்தை பத்திரிக்கையின் ஆசிரியராக இருப்பதாகவும், தினமணி சிறுவர் மணியில் ஒரு செய்தியை வாசித்தேன். உடனே அந்த நூலை வாங்கி, “வாயும் மனிதர்களும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து, என் செலவில் வெளியிட்டேன். 16 பக்கம் கொண்ட அந்த நூலில், பக்கத்துக்கு ஒரு கதை, அதிகபட்ச ஒரு கதையின் நீளம் 10 வரிகள் என்றிருந்தது. அபிமன்யுவின் கதைகள் ஒரு குழந்தையின் இயல்பான படைப்பூக்கம், கதைகளைச் சொல்வதில் எப்படி இயங்கும் என்பதற்கான லட்சிய ,மாதிரிகள் என்று சொல்லலாம்.
அப்போதெல்லாம் நவீன தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்த கவனம் அவ்வளவாக இல்லை. அதற்குப் பிறகே சிறுவர் நூல்களை வெளியிட பாரதி புத்தகாலயம் துவங்கினார்கள். 25 படக்கதைகள் கொண்ட புத்தகப் பூங்கா, 15 படக்கதைகள் கொண்ட புத்தகப் பரிசுப்பெட்டி போன்ற நூல்களை, என் மொழிபெயர்ப்பில் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டது. .அதற்குப் பிறகு, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
மலையாளச் சிறார் இலக்கிய சூழல், நம் தமிழ்ச் சிறார் இலக்கிய சூழலை விட, எந்தெந்த வகைகளில் மேம்பட்டுள்ளது ?
தமிழ்ச் சூழலை ஒப்பிடும் போது, மலையாளச் சிறார் இலக்கிய சூழல் மிகவும் சிறப்பாக உள்ளது. கேரள பால சாகித்ய இன்ஸ்டிடியூட் என்று தனியாக ஓர் அரசு நிறுவனம், அங்குச் செயல்படுகின்றது. எழுத்தாளரிடமிருந்து கதைகளை நேரிடையாக வாங்கி, 10000 பிரதிகள் வரை அச்சிட்டு, எல்லா நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் அனுப்பும் வேலையை அந்த நிறுவனமே செய்வதால், நூல்கள் குழந்தைகளிடம் நேரிடையாகப் போய்ச் சேருகின்றன.
மேலும் குழந்தைகளுக்கென்று, தனியாகப் புத்தகக் கண்காட்சிகள் அங்கு நடைபெறுகின்றன. நம் சென்னை புத்தகத் திருவிழாவின் போது கூட குழந்தைகளுக்காகத் தனி வரிசையோ, அரங்கங்களோ அமைப்பதில்லை. குழந்தைகளுக்கான நூல்களுடன், பெரியவர்களுக்கான நூல்களையும் சேர்த்தே காட்சிக்கு வைக்கிறார்கள்.
என்ன மாதிரியான நூல்களை மொழியாக்கத்துக்குத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ?
நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் இனிமேல் எழுதப்படவேண்டிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்துகிற விதமாக, புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். பேராசிரியர் சிவதாஸ், மாலி, சி.ஆர் தாஸ், சிப்பி பள்ளிபுரம், வைசாகன், போன்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும், சாதாரணமாக 100 நூல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் எனக்குத் தெரிந்த, என்னுடைய நண்பர்களின் நூல்களையே மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கிறேன். காப்பிரைட் விஷயத்தில் மலையாளிகள் மிகவும் கவனமாகயிருப்பார்கள். அவர்களுடைய அனுமதி பெறாமல் மொழிபெயர்த்தால், வழக்கு போட்டுவிடுவார்கள். அங்கு அவர்கள் எழுதி நிறைய சம்பாதிக்கிறார்கள். தமிழக நிலைமை பற்றி அவர்களுக்குத் தெரியாது. எட்டு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில், சிறார் நூலின் வெளியீட்டின் போது, பதிப்பகங்கள் முந்நூறு பிரதிகள் மட்டுமே போடுகிறார்கள். அதுவே விற்பனையாவதில்லை என்பது தான் வேதனையான உண்மை..
பேராசிரியர் சிவதாஸ் முழுக்க, முழுக்க இயற்கை குறித்த விஷயங்களை எழுதுகின்றார். இவருடைய ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என்ற முக்கியமான நூலை, யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார், சி.ஆர்.தாஸ் நேர மேலாண்மை குறித்துக் ‘காலக் கனவுகள்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இப்படிப் புதுப்புது விஷயங்களை, அவர்கள் சிறுவர்களுக்குச் சொல்கிறார்கள். அவற்றை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நான் அவற்றை மொழிபெயர்ப்பு செய்கின்றேன்.
தமிழ்ச் சிறார் இலக்கியச் சூழல் மேம்பட, நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் யாவை ?
கேரளா பால சாகித்ய நிறுவனம் போல், தமிழகத்திலும் ஓர் அரசு நிறுவனம் அமைத்துக் குறைவான செலவில், அதிக பிரதிகள் அச்சிட்டு நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் நவீன தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் புதிய நூல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும், நூலகங்கள் அமைக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் பழைய நூலகங்களைப் புதுப்பிக்க வேண்டும். பழைய காலம் போல், வாரத்துக்கு இரண்டு நூலக வகுப்பாவது ஒதுக்க வேண்டும்.
பள்ளி நூலகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகைக்கு, அப்பள்ளி ஆசிரியர்கள் புதிய நூல்களை வாங்குவதில்லை. அதிகக் கழிவு யார் கொடுக்கிறார்கள் என்று பார்த்து, உள்ளூர் புத்தகக்கடைக்குச் சென்று, அங்கிருக்கும் பழைய நீதிநெறி அறிவுரைக் கதைகள், பஞ்சதந்திரம், தெனாலிராமன், ராமாயணம், மகாபாரதம் புத்தகங்களையே வாங்கி, நூலக அலமாரிகளைப் பெயருக்கு நிரப்புகின்றனர்.
யாருக்கு நீதிநெறிகள் வேண்டும் என யோசித்தால், பெரியவர்களுக்குத் தாம் தேவைப்படுகின்றன. அவர்கள் எல்லா நீதிநெறிகளையும் தெரிந்து கொண்டே தான், இந்த உலகைச் சீரழித்து வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு வாசிப்பில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும். அறநெறி கருத்துகள் அவர்களுக்கு இந்தச் சின்ன வயதில் தேவையில்லை. அவர்களுக்கென்று ஒரு வயது வரும் போது, நீதி நெறி புத்தகங்களை அவர்களாகவே வாசித்துத் தெரிந்து கொள்வார்கள். நாம் அவர்கள் மீது திணிக்க வேண்டியதில்லை.
பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லாததால், நவீனச் சூழலில் வெளியாகியிருக்கும் புதிய நூல்கள் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், நூலகங்களுக்குப் பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களையே வாங்குகிறார்கள். எனவே எல்லாப் பள்ளி நூலகங்களிலும், குழந்தைகளுக்குத் தமிழ் நூல்கள் கிடைப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகம் அல்லாத பிற புத்தகங்களையும், சிறார் இதழ்களையும் வாங்கிக் கொடுப்பது, எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம்.
குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் ?
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் உடல் தேவையில் அதிக கவனமெடுத்து அவர்கள் விரும்பும் உடை, உணவு என எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளின் மனநலம் குறித்து, அவர்கள் சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தைகளின் உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி அளித்து அவர்களின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டக் கூடியவை புத்தகங்களே. எனவே பாடப்புத்தகங்கள் அல்லாத கதைப் புத்தகங்களைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் வாங்கிக் கொடுக்க வேண்டும். தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டும்.
என் சிறுவயதில் அணில், அணில் மாமா, மாம்பழம், பூந்தளிர் என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் இதழ்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது பெரிய நிறுவனங்களின் சுட்டிவிகடன், கோகுலம் இதழ்கள் கூட நின்றுவிட்டன. இதிலிருந்து என்ன தெரிகிறது? பாடப்புத்தகங்களைத் தவிர, வேறு எந்தச் சிறார் இதழையோ, சிறார் புத்தகங்களையோ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதில்லை. சிறார் இதழ்களையும், நூல்களையும் பெற்றோர் வாங்கினால் தான், பழைய காலம் போல் அதிக எண்ணிக்கையில் இதழ்களும், புதுப்புது நூல்களும் வெளிவரும். சிறார்க்காக எழுதுவதற்கு, அதிகளவில் புதிய எழுத்தாளர்கள் முன்வருவார்கள்.
சிறார் நூல்களுக்கு நூலக ஆணை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து..
உண்மை தான். இது மிகவும் வருந்தத் தக்க விஷயம். நூலக ஆணை பெறுவதற்குப் புத்தகங்கள் குறைந்த பட்சம் 64 பக்கங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பது அரசின் ஆணை.. சிறார் நூல்களுக்கு, இவ்விதி எப்படிப் பொருந்தும்? சில நூல்கள் பதினாறு பக்கத்திலிருக்கும்; சில நூறு பக்கங்கள் கூட இருக்கும். ஒவ்வொரு பக்கத்துக்கும் இத்தனை வரிகள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும், குழந்தை நூலுக்குப் பொருந்தாது. குழந்தை நூலில் பக்கமுழுக்க வண்ணப்படம் போட்டு, ஓரிரண்டு வரிகள் மட்டுமே இருக்கும்.
மேலும் எல்லாப் புத்தகங்களுக்குமான கொள்முதல் விலையை, 16 பக்கங்களுக்கு இவ்வளவு என அரசு தீர்மானித்துள்ளது. இதுவும் சிறார் புத்தகத்துக்குப் பொருந்தாது. சிறார் புத்தகங்களில் வண்ண ஓவியங்கள் இடம்பெறும். சில புத்தகங்கள் முழுமையும் வண்ணப்படக் கதையாயிருக்கும். ஓவியத்தையும், வண்ணப்படத்தையும் வெளியிட பதிப்பகத்துக்கு ஆகும் செலவு மிக அதிகம். எனவே அரசு நூலகத்துக்குச் சிறார் நூல்கள் வாங்குவதற்கு, அரசு விதித்துள்ள விதிமுறைகளை மாற்ற வேண்டும். கொள்முதல் விலையிலும், நிச்சயம் மாற்றம் தேவை.
சிறார் இலக்கியம் படைக்க விரும்பும் புதிய எழுத்தாளர்களுக்கு, நீங்கள் சொல்ல விரும்புவது ?
அழ.வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கம் துவங்கிய காலத்தில், அதில் 300 எழுத்தாளர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அச்சங்கம் 1975 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடிய சமயத்தில், 200 நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்காகக் காத்திரமாக எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் எந்நேரமும் குழந்தைகளுடனே இருந்து, அவர்களின் உளவியலை நன்கு புரிந்து வைத்துள்ள பெண்கள் எழுதுவது, மிக மிகக் குறைவாய் உள்ளது. எனவே பெண்கள் அதிக எண்ணிக்கையில், சிறார் நூல்கள் எழுத முன்வர வேண்டும்.
மேலும் சாகசம், ஃபாண்டசி, மர்மம், அறிவியல், வரலாறு, இளையோர்க்கானது என பல வகைமைகளிலும், சிறார் நூல்கள் எழுதப்பட வேண்டும். மாறிவரும் சூழலுக்கேற்றபடி அறிவியல்பூர்வமான, கற்பனை வளம் நிறைந்த, பகுத்தறிவைத் தூண்டுகிற, கதைகளை எழுத வேண்டும். நூல் வாசிப்பு குழந்தைகளின் மனதுக்குப் புத்துணர்வு அளித்து, மகிழ்ச்சி தரக் கூடியதாய் இருத்தல் அவசியம்.
சுட்டி உலகத்துக்காக நேரம் ஒதுக்கி பேட்டி கொடுத்தமைக்கு, மிக்க நன்றி ஐயா !