குழந்தைகள் மனதைக் கொள்ளை கொண்ட எரிக் கார்ல் (Eric Carle)

photo of writer Eric Carle

‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ (The Very Hungry Caterpillar) என்ற மிகப் பிரபலமான நூலை எழுதி, குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்த எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல் (Eric Carle) தம் 91 ஆம் வயதில் 23/05/2021 அன்று காலமானார்.

photo of the very hungry caterpillar book cover
The Very Hungry Caterpillar

1969 ஆம் வெளியான அப்புத்தகம், உலகமுழுக்க 55 மில்லியன் பிரதிகள் விற்றதோடு, 70 மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.  2003 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மதிப்புமிக்க Laura Ingalls Wilder Award என்ற விருது, இதற்குக் கிடைத்தது. குழந்தை இலக்கியத்தில் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடிய சிறப்பான பங்களிப்பு அளிக்கும் குழந்தை எழுத்தாளருக்கும், குழந்தை நூல் ஓவியர்களுக்கும் அளிக்கப்படும் விருது இது.

இந்த நூலில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது?  ஞாயிறன்று முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு கம்பளிப் புழுவிற்குக் காயசண்டிகைக்கு வந்தது போல், அகோரப் பசி வந்துவிடுகின்றது.  திங்கள் ஒரு ஆப்பிள், செவ்வாய் இரண்டு பியர்ஸ், புதன் மூன்று பிளம்ஸ், வியாழன் நாலு ஸ்டிராபெர்ரி, வெள்ளி ஐந்து ஆரஞ்சு எனத் தின்றும், அதன் பசி அடங்கவில்லை. சனியன்று ஒரு சாக்லேட் கேக் துண்டு, ஒரு கோன் ஐஸ்கிரீம்,  ஊறுகாய் கொஞ்சம், பாலாடைக்கட்டி ஒரு துண்டு, லாலிபாப், கப் கேக், தர்பூசணி என்று எக்கச்சக்கமாகத் தின்று தீர்க்கிறது.  மறுநாள் உடம்பு பெருத்த புழு, தன்னைச் சுற்றிக் கூட்டைக் கட்டிக் கொண்டு, இரண்டு வாரம் கழித்து அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருமாறி வெளிவருகின்றது.  224 வார்த்தைகளுடன், வண்ண ஓவியங்கள் கொண்ட எளிமையான கதை.  

“நான் சிறுவனாயிருந்த போது, என் தந்தை என்னை மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்கும், புல்வெளிகளுக்கும் அழைத்துப் போவார்.  அப்போது ஒரு கல்லை நகர்த்தியோ, ஒரு மரப்பட்டையை உரித்தோ, அதற்கடியில் ஓடும்  புழு பூச்சிகளைக் காண்பிப்பார்.   ஒரு சின்னப் பூச்சியை எடுத்து, அதன் வாழ்வு சுழற்சியை என்னிடம் விளக்கி விட்டு, மீண்டும் அதனை எடுத்த இடத்திலேயே விட்டுவிடுவார்.  அந்தச் சிறிய உயிர்களைப் பற்றி, என் நூல்களில் எழுதுவதன் மூலமாக, என் தந்தையைப் பெருமைப்படுத்துவதாக நினைக்கிறேன்.  அந்த மகிழ்ச்சியான பொழுதுகளை மீண்டும் மீட்டெடுப்பதாக உணர்கிறேன்” என்று ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார் எரிக் கார்ல்.

“இந்நூலை வெளியிட்டபோது, இந்தளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.  சிறு உயிர்களின் வாழ்க்கை, எனக்கு எப்போதுமே ஆச்சரியத்தைக் கொடுக்கும்.  அந்த ஆச்சரியங்கள் தான், என் நூல்களாக  வெளிவந்தன. உங்களைப் போல நாங்களும் படங்களை ‘கொலாஜ்’ செய்வோம் என்று குழந்தைகள் என்னிடம் சொல்லும்போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது” என்று இன்னொரு நேர்காணலின் போது அவர் சொன்னார்.

ஜெர்மனிலிருந்து அமெரிக்கா நியூயார்க் நகருக்கு இடம் பெயர்ந்த பெற்றோருக்கு, 1929 ஆம் ஆண்டு, எரிக் கார்ல் பிறந்தார்.  தந்தை பெயிண்டிக் கம்பெனியில் வேலை பார்த்தார். அவருக்கு ஆறு வயதான போது, அவர் அம்மாவுக்குப் பிறந்த நாட்டின் ஏக்கம் வரவே, அவர்கள்  ஜெர்மனியிலிருந்த சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.  அவர் தந்தை உலகப்போரின் போது, ஜெர்மன் இராணுவத்துக்குப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1947 ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகள் கழித்து, உடல்நலிவுற்று வெறும் 85 பவுண்டு எடையுடன், மனமுடைந்த நிலையில் வந்ததாக, எரிக் கார்ல் குறிப்பிட்டுள்ளார்.

எரிக் கார்ல் மீண்டும் 1952 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு திரும்பினார். எழுத்தாளரான பில் மார்டின் ஜூனியர் என்பவரது ‘பிரெளன் பியர், பிரெளன் பியர், வாட் டூ யு சீ’ என்ற புத்தகத்துக்கு முதன்முதலில் படங்கள் வரைந்து கொடுத்தார்.  1967 ஆம் ஆண்டு அப்புத்தகம் வெளிவந்தது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரே கதை எழுதியதுடன், படங்களும் வரைந்து, ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். 

முதல் திருமண முறிவுக்குப் பின்னர் பாபி என்றழைக்கப்பட்ட பார்பரா மோரிசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2002 ஆம் ஆண்டில், பாபியின் 64 வது பிறந்த நாளில், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரில், எரிக் கார்ல் ஓவிய புத்தகக் கலைக்கான அருங்காட்சியகம் (Eric Carle Museum of Picture Book Art) திறக்கப்பட்டது. இதுவரை அந்தக் காட்சியகத்துக்கு 750000 பேர் வருகை புரிந்திருக்கிறார்களாம்;  அதில் 50000 பேர் குழந்தைகள். 

photo of the eric carle museum
எரிக் கார்ல் ஓவிய புத்தகக் கலைக்கான அருங்காட்சியகம் (படம்)

2019 ஆம் ஆண்டு, ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’  நூலின் ஐம்பதாம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தருணத்தில், இப்புத்தகம் குழந்தைகளிடம் பிரபலமாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டபோது,

“இது நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய புத்தகம்;  குழந்தைகளுக்கு நம்பிக்கை தேவைப்படுகின்றது; ஒரு சாதாரண முக்கியத்துவமில்லாத ஒரு கம்பளிப்புழு, ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியாக உருமாறி, உலகெங்கும் திறமையோடு பறக்க முடியும் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு  இப்புத்தகம் அளிக்கின்றது”

என்றார் எரிக் கார்ல்.

ஆங்கில சிறார் இலக்கியத்தில் எரிக் கார்லுக்கு, என்றும் நிலையான இடம் உண்டு.

Share this:

One thought on “குழந்தைகள் மனதைக் கொள்ளை கொண்ட எரிக் கார்ல் (Eric Carle)

  1. எரிக் கார்ல் குறித்த அறிமுகம் சிறப்பு. கலை மேன்மை உணர்வுடன் குழந்தை மன உலகை வெல்ல முடியும் எனும் நம்பிக்கையை கொடுக்கிறது இவர் குறித்த அறிமுகம்

Comments are closed.