சிறகு விரிக்கும் சிறார் கதைகள்

சிறகு_விரிக்கும்_படம்

எழுத்தாளர் அம்பை ‘நிர்மலம்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதை, இதில் முதலாவதாக இடம் பெற்றுள்ளது. இக்கதை பாலினச்சமத்துவம், சாதிப்பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை அனுபவிக்கும் இக்காலத்தில் சிறார்க்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகக் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மகளான தேவி நாச்சியப்பன் ‘நம்பன் வம்பன் தும்பன்’ என்ற கதையை எழுதியிருக்கிறார்.

லைலா தேவி அம்மையார் எழுதிய ‘காடும் வீடும்,’ வீட்டில் கோபித்துக் கொண்டு காடு பதுங்கும் சிறுவனின் நடவடிக்கையை மிகவும் இயல்பாகவும், நகைச்சுவை கலந்தும் மிக எளிய மொழியில் விவரிக்கும் கதை.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத்தலைவரான பேராசிரியர் சோ.மோகனா, ‘என்ன பேரு வைக்கலாம்?’ என்ற அறிவியல் புனைகதையை எழுதியுள்ளார். ‘விலங்கு செல்லையும் தாவர செல்லையும் இணைத்தால் அதிலிருந்து வெளிவரும் உயிர் எப்படியிருக்கும்? அது தாவரம் போல் தானே உணவு தயாரிக்குமா? விலங்கு போல் நகருமா?’ என்ற புதுமையான கற்பனையில் உருவான கதையிது.

சாலை செல்வம் எழுதிய ‘பாவக்கா பேத்தி,’ பாகற்காய் பறிக்கும் பாட்டியையும், பேத்தியையும் கண்முன் நிறுத்தும் கிராமிய மணங்கமழும் கதை. சரிதா ஜோவின் ‘சாதித்த ஜோதி’ சாதிப்பிரச்சினையைப் பேசுவதோடு சாதிக்க நினைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உத்வேகம் ஊட்டும் கதையும்கூட. கார்த்திகா கவின் குமார் எழுதிய ‘சந்தனக்கூடு’ மதநல்லிணக்கத்தை வெளிப்படையான பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாகப் பேசுகிறது. 

அமுதா செல்வியின் ‘அழகி’ உருவகேலியால் பாதிக்கப்படும் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை நீக்கி உற்சாகமூட்டும் கதை. மருத்துவர் வித்யா செல்வம் எழுதிய ‘வெங்காயம் கேட்ட வரம்,’ வெங்காயம் நறுக்கும்போது கண் எரிவதற்கான சுவாரசியமான கற்பனைக் காரணத்தைச் சொல்கிறது.

ஈரோடு சர்மிளாவின் ‘அபியின் கேள்வி,’ “ஏன்? எதற்கு?” என்று குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. பிரியசகியின் ‘எது அழகு?’ கதையின் நிகழ்வுகளை வரிசை மாறாமல் நினைவில் வைப்பதன் மூலம் குழந்தைகளின் நினைவுத்திறனை ஊக்குவிக்கும் சங்கிலித்தொடர் கதை.

ஞா.குமுதம் எழுதிய ‘டாமி எங்கே?’ குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்குமான அன்பைப் பேசும் கதை. பூங்கொடி பாலமுருகனின் ‘பாறு அதைப் பாரு’ என்பது பிணந்தின்னிக்கழுகு என்று நாம் இழிவாக நினைக்கும் பாறுக் கழுகைப் பாதுகாக்க வேண்டிய சூழலியல் அவசியம் பற்றிப் பேசுகிறது.

பருவமடையும் போது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பயங்கலந்த குழப்ப மனநிலையைப் போக்கித் தைரியம் கொடுக்கும்விதமாக ராஜிலா ரிஜ்வான் ‘பெரிய மனுசி’ கதையை எழுதியிருக்கிறார். வ.விஜலட்சுமியின்  ‘டைனோசரும் புல்டோசரும்’ மெல்லிய நகைச்சுவை கலந்த கற்பனைக் கதை.

புவனா சந்திரசேகரனின் ‘சிரிப்புத் தேவதை குயிலி’ சிரிக்கவே தெரியாத பறக்கும் மனிதர்களைப் பற்றிய அதீத கற்பனையுடன் கூடிய புனைவு. அன்னபூரணி தண்டபாணியின் ‘கொரங்கு பெடல்’ குழந்தைகளுக்குச் சிறுவயதில் இயல்பாக ஏற்படக்கூடிய சைக்கிள் ஓட்டும் ஆசையையும், அதன் அனுபவத்தையும் சுவாரசியம் கலந்து விவரிக்கிறது.

பங்குனி ஆமைகள் என்று சொல்லப்படும் கடல் ஆமைகளைக் குறித்த செய்திகளை ‘வலசை வரும் ஆமைகள்,’ என்ற கதையில் சுவையாக விவரித்துள்ளார் இந்து கணேஷ். மருத்துவர் தேவி பிரபா எழுதிய ‘மரியாதை,’ ஆதிக்கச்சாதியினர் பிறரை மரியாதையின்றி நடத்தும் விதத்தை மிகநுட்பமாகப் பதிவுசெய்துள்ளது. பதிப்பாளர் தேவகி இராமலிங்கம் அவர்கள் எழுதிய ‘மாற்றம்,’ இக்காலக் குழந்தைகளின் துரித உணவுப்பழக்கம் குறித்துப் பேசி விழிப்புணர்வூட்டும் கதை. ஞா.கலையரசியின் ‘ஐஸ்கிரீம் மரம்’ மந்திரமும் மாயாஜாலமும் கலந்தது.  

கடைசி ஐந்து கதைகள் குழந்தைப் படைப்பாளர்கள் எழுதியவை. ரமணி எழுதிய ‘பூக்களின் நகரம்,’ மகாராஷ்டிரா மாநிலத் தமிழ்ப்பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதிலுள்ள ‘நிறம் என்பது ஒளியின் விளையாட்டு’ என்பது சிறப்பான கற்பனை. பிரவந்திகாவின் ‘ஒரு கதையின் கதை’ குழந்தைப் படைப்பாளரின் சிறப்பான கற்பனைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அனுக்ரஹா கார்த்திக் எழுதிய ‘காணாமல் போன சிறகுகள்’ மாயாஜாலத்துடன் மனிதநேயமும் கலந்த கதை. 

ஆர்.மிருதுளா எழுதிய ‘யானையும் வேட்டைக்காரரும்,’ ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்,’ என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கதை. சிந்துஜா எழுதிய ‘கரடியும் கிளியும் மேகமும்’ குழந்தைகளின் எல்லையில்லாக் கற்பனையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் கதை.

கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இத்தொகுப்பு, சிறார் விருப்பத்துடன் வாசிக்க மட்டுமின்றிச் சிறார் இலக்கியம் குறித்து ஆய்வு செய்வோர்க்கும் மிகவும் பயன்படும்.

வகைசிறார் கதைகள்
தொகுப்பாசிரியர்ஞா.கலையரசி
வெளியீடுநிவேதிதா பதிப்பகம், சென்னை-92. செல் 89393 87296.
விலைரூ 150/-.

Share this: