இந்நூலின் ஆசிரியரான கன்னிக்கோவில் இராஜா, சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்து, குழந்தைகளின் திறமையை ஊக்குவித்து வருகிறார்.
இத்தொகுப்பில், 12 கதைகள் உள்ளன. “பிடிங்க பிடிங்க மயில்முட்டையை பிடிங்க” என்ற முதலாவது கதையில், மலை மேட்டிலிருந்து உருண்டு ஓடும், தன் முட்டையைப் பிடிக்கச் சொல்லி நத்தை, மரவட்டை, அணில் ஆகியவற்றை ஒவ்வொன்றாக மயில் கெஞ்சுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தள்ளிக்கொண்டு முட்டை வேகமாக கீழே ஓடுகிறது
பாம்பு அந்த முட்டையைப் பிடித்துத் தின்ன நெருங்குகிறது. கடைசியாகக் காட்டுக்கோழியிடம் மயில் விபரத்தைச் சொல்கிறது; “நீயே பறந்து போய், அதை எடுத்திருக்கலாமே” என்று அது சொன்னவுடன், மயில் பறந்து சென்று முட்டையைக் காப்பாற்றுகிறது.
தன் கையே தன் உதவி, பதற்றம் நம் திறமையை மறக்கடிக்கச் செய்யும், பதற்றத்தில் நம் மூளை வேலை செய்யாது என்ற கருத்துகளைக் கொண்ட நல்ல சிறுவர் கதை இது.
‘வெயிலில் வாடிய அழுகிய தக்காளி’ கதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், நெகிழியின் தீமை குறித்தும் சொல்லும் கதை. ‘சிட்டுக்குருவிக்கு அரிசி வாங்கிய குருவி’, எல்லா உயிர்க்கும் அன்பு செய்ய வேண்டும் என்ற கருத்தைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும்.கதை.
‘முகக்கவசம் செய்த மனிதக்குரங்கு’ கொரோனா குறித்தும், சமூக இடைவெளி கொடுக்க வேண்டிய அவசியம் குறித்தும், கைகளை அலம்பி சுத்தம் பேணுவது குறித்தும், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை.
இந்த்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் இயற்கையையும், சூழலையும் பேணுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவை. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவை.
அவசியம் குழந்தைகளுக்கு இத்தொகுப்பை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | கன்னிக்கோவில் இராஜா |
வெளியீடு | லாலிபாப் சிறுவர் உலகம் சென்னை-18 (+91 8825769056) |
விலை | ₹ 100 |