பவளம் தந்த பரிசு

Pavalam_parisu_pic

ரேவதி என்ற புனைபெயரில் இந்நூலை எழுதிய எழுத்தாளரின் இயற்பெயர் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகும். ‘பவளம் தந்த பரிசு’ என்ற தலைப்பிலான, இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது கிடைத்தது.

முதலாவது இந்நூலின் தலைப்பான ‘பவளம் தந்த பரிசு’ என்ற கதை. மரத்தை யாரும் வெட்டக் கூடாது என்ற மேகநாட்டின் மன்னர் சந்திரபூபதியின் சட்டத்தை, அரண்மனை தலைமை வைத்தியர் மீறிவிடுகிறார். அதனால் அவருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கிடைக்கிறது. முன்பு ஒரு முறை குழந்தைகளின் பார்வையைப் பறிக்கக் கூடிய பயங்கரமான கண்நோய் பரவிய போது, சிறப்பான சேவை செய்து குணப்படுத்தியவர் அவரே.

தமக்குச் சலுகை காட்டாமல், சிறைத்தண்டனை அளித்த மன்னர் மீது கோபம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறிவிடுகின்றார் வைத்தியர். மீண்டும் அந்தக் கண்நோய் பரவிக் குழந்தைகளைப் பாதிக்கின்றது. அதற்கான வைத்தியம் தேவதத்தருக்கு மட்டுமே தெரியும் என்பதால், மன்னரும், அமைச்சரும் அவரைத் தேடிச் சென்று, வைத்தியம் பார்க்கக் கூப்பிடுகின்றனர். எவ்வளவோ கெஞ்சியும் அவர் வர மறுத்துவிடுகின்றார்.

தேவதத்தரின் பேத்தியான சிறுமி பவளம், தாத்தாவுக்கு அவருடைய தவறைப் புரிய வைத்துக் குழந்தைகளுக்கு வைத்தியம் செய்ய வைக்கின்றாள். கண் பாதிப்புற்ற குழந்தைகளுக்குப் பவளம் தந்த பரிசு இது. இத்தொகுப்பில் இதுவே மிகச் சிறந்த கதை.

நாட்டின் சட்டதிட்டங்கள் மக்களின் நலனுக்காகவே உள்ளன; சட்டத்துக்கு முன் யாவரும் சமம்; சட்டத்தை மதித்து நடப்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை, இக்கதை வலியுறுத்துகிறது. மேலும் காட்டின் வளமே நாட்டின் வளம்; காடழிந்தால் நாடழியும் என்ற இக்காலத்துக்கு மிகவும் தேவையான கருத்தையும், சிறுவர் மனதில் பதிய வைக்கிறது.

இரண்டாவது கதை ‘கண்மணி தந்த பரிசு’.

கனிவும் இரக்கமும் கொண்ட கண்மணிக்குத் துன்பப்படுவோர்க்கு உதவுவதே, வாழ்வின் இலட்சியம். குரங்கின் மூலம் கிடைத்த ஒரு மந்திர மண்குடுவையில் நிரம்பும் நீரை வைத்து, அவள் நோயாளிகளின் தீராத நோயைத் தீர்த்து வைக்கிறாள்.  முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்த புவனகிரி மன்னருக்கும், சிங்க நாட்டு மன்னருக்கும் சிகிச்சையளித்துக் குணமாக்குகிறாள். மேலும் தம் முன் யோசனையால் இரு மன்னர்களுக்கிடையே இருந்த பகைமையை நீக்கி, மீண்டும் நட்பு மலரச் செய்கிறாள்.

மூன்றாவது கதை ‘அம்பிகை தந்த பரிசு’.

விஜயபுரி மன்னர் விக்ரமன், மக்கள் பயன்படுத்தும் கிணற்று நீருக்கும், ஆற்று நீருக்கும் வரி விதிக்கிறார். ஆற்றில் குளித்த முனிவரிடம் மன்னர் வரி கேட்க, இருவருக்கும் சண்டை முற்றுகிறது. கோபமான முனிவர் ஒரு லட்சம் பொன் கொடுத்துவிட்டு, ஆற்றைத் தம் கமண்டலத்துக்குள் அடக்கிக் கொண்டு சென்று விடுகிறார்.

குடிக்க ஒரு குவளை நீர் கூட இல்லாமல் தவிக்கும் போது தான் மன்னனுக்குப் புத்தி வருகின்றது. அமைச்சரின் மகள் அம்பிகை சொன்ன யோசனையால், வறண்டுபோன நாடு மீண்டும் வளம் பெறுகின்றது. 

நான்காவது கதை – ‘கமலம் தந்த பரிசு’.

இளம் வயதிலேயே அரியணை ஏறிய காரணத்தால், அறிவுமுதிர்ச்சியின்றி கோமாளித்தனமாக நடந்து கொள்ளும் மங்களபுரி மன்னர்     பாடுபவர்களுக்கு வரி விதிக்கிறார். கமலம் என்பவள் மிகவும் புத்திசாலிப்பெண். வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த அவள், நாற்று நட்ட போது, பாடிய பாட்டுக்கு வரி கட்டச் சொல்கிறார் அரசர். அவள் தன் புத்திசாலித்தனத்தால், மன்னருக்குப் புத்தி புகட்டிச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்கிறாள்.

ஐந்தாவது கதை – ‘வாசுகி கேட்ட பரிசு‘.

வைரபுரி எல்லா வளங்களும் நிறைந்த நாடு. மேலும் மன்னன் சிவபாலனும் குடிமக்களின் நலனில் மிகுந்த அக்கறையுள்ள நேர்மையான ஆட்சியாளன்.

ஒரு மோதிரத்துக்கு இருவர் உரிமை கோரிய வழக்கு அவனிடம் வருகிறது. மந்திரக்காரியிடமிருந்து மோதிரத்தை வாங்கி அதற்குரியவளான பெண்ணிடம் ஒப்படைக்கிறான் சிவபாலன். இதனால் ஆத்திரமடைந்த மந்திரக்காரி, அவன் முகத்தை விகாரமாக்குகிறாள்.  மோதிரம் பெற்ற வாசுகி என்ற பெண்ணின் பார்வையும் மந்திரக்காரியின் சாபத்தால் பறிபோய்விடுகின்றது. மன்னனும், வாசுகியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நீதிதேவதையின் அருளால், இருவரும் பழைய நிலைமைக்குத் திரும்புகிறார்கள்.

இக்கதைகளில் இடம் பெற்றுள்ள ஐந்து பெண் கதாபாத்திரங்களுமே அறிவும்,முன்யோசனை உள்ளவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளமை சிறப்பு. அதிலும் நான்காவது கதையில் வரும் கமலம் என்பவள், வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண பெண் என்பது மிகவும் சிறப்பு.

இந்தக் கதைகள் நல்ல எண்ணங்களையும், சேவை மனப்பான்மையையும், சிறுவர் மனதில் பதிய வைப்பதாக அமைந்துள்ளன. அவசியம் சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்ரேவதி (டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)
வெளியீடுபழனியப்பா பிரதர்ஸ்,’கோனார் மாளிகை’, 25 பீட்டர்ஸ் சாலை சென்னை – 600014
விலைரூ 50-
Share this: