ஓரிகாமி-காகித மடிப்புக் கலையின் கதை

Origami_pic

இந்நூலின் ஆசிரியர் தியாகசேகர் ஓரிகாமி கலைஞர்.  இவர் ஓரிகாமி கலைக்கான முதல் பயிற்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.  தமிழில் ஓரிகாமி கலையின் வரலாற்றைக் கூறும், முதல் புத்தகமும் இதுவே.

ஓரிகாமி என்பது ஜப்பானிய சொல்.  ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம். தமிழில் இதைக் காகித மடிப்புக்கலை என்று சொல்லலாம். இந்தக் கலை ஜப்பானில் தோன்றி, உலகமுழுதும் பரவியதால், ஜப்பானிய மொழியிலேயே வழங்கப்படுகிறது.

ஓரிகாமி என்பது காகிதத்தில் உருவங்களை உருவாக்கும் அறிவியல் கலை; கணிதம் தொடர்புடைய காகிதப் பொறியியல் கலை; கத்தரிக்கோலோ, பசையோ, நூலோ இல்லாமல், எதையும் வெட்டி ஒட்டாமல்,  ஒரு உருவத்தை உருவாக்குவதே இதன் சிறப்பு.  இதனால் தான் காகித மடிப்புக்கலை எனத் தமிழில் அழைக்கின்றோம்; இதில் வண்ணத்துப்பூச்சியும் செய்யலாம்; டைனோசரும் செய்யலாம்.

1911 ஆம் ஆண்டு பிறந்த அகிராயூசிசவா, நவீன உலகின் ஓரிகாமி தந்தை எனப் போற்றப்படுகின்றார்.  இவர் தம் 4 ஆம் வயதில் விளையாட்டாகக் காகிதங்களை மடித்து உருவங்கள் செய்தார்.  பின்னர் இதுவே இவரின் அடையாளமாக மாறியது.

 ஓரிகாமி கலையில் தற்போது பிதாமகனாக விளங்குபவர் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ஜெ.லங் என்பவர். ஒரு சதுர காகித்த்தில் 500-1000 வரை மடிப்புகள் மடித்து மனிதர் முதல் பூச்சிகள் வரை பல உருவங்களை நேர்த்தியாகச் செய்யக் கூடிய அற்புதக் கலைஞர்.   

அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படுத்தும் வெறுமை, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து நம்மைத் தேற்றிக் கொள்ளவும், மீட்டெடுக்கவும் கலை இலக்கியங்கள் உதவுகின்றன.  எனவே ஒவ்வொருவரும் முக்கியமாக மாணவர்கள் அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

“ஓரிகாமியைக் கற்க வயது ஒரு தடையல்ல; தேவை விருப்பம் மட்டுமே” என்கிறார் ஆசிரியர்.  ஓரிகாமி கலை குறித்தும், இதன் வரலாறு குறித்தும் விரிவாக அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம்.

வகைகட்டுரை மின்னூல்
ஆசிரியர்தியாகசேகர்
வெளியீடு: அமேசான் இணைப்பு:-ஓங்கில் கூட்டம் அமைப்பு https://www.amazon.in/%20/dp/B09GTPTDDX
விலை₹ 49/-
Share this: