ம.லெ.தங்கப்பா (1934-2018)

Lenin_Thangappa_pic

ம.லெனின் தங்கப்பா அவர்களின் சொந்த ஊர், நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த பல கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுவையிலேயே தங்கிவிட்டார். இவர் தந்தை மதனபாண்டியன் தமிழாசிரியராகப் பணி செய்தமையால், இவருக்கும் இயல்பாகவே தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. தமிழுணர்வைப் பொறுத்தவரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் எண்ணங்கள் இவரைக் கவர்ந்தவை. 

இவர் தந்தைக்குப் பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் போய் வந்த பிறகு, குடியரசு இதழில் ரஷ்யா பற்றியும், லெனின் பற்றியும் எழுதினாராம். அதை வாசித்த இவர் தந்தை, இவருக்கு ‘லெனின் தங்கப்பா’ என்று பெயர் சூட்டியதாக ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார்.  இவர் தந்தை தமிழாசிரியராக இருந்த போதும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்ற முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தமையால், தங்கப்பாவும் பகுத்தறிவு எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்திருக்கிறார்.   

இவர் மரபுக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகத் திறன் கொண்டவர். சங்க இலக்கியப்பாடல்கள், முத்தொள்ளாயிரம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தூள்ளார். அது மட்டுமின்றிச் சிறார் இலக்கியத்திலும், இவர் மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளார்.  இயற்கை பற்றிய அறிவைக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துகின்ற விதமாகவும், குழந்தைகளுக்குக் கொண்டாட்ட மனநிலையை அளித்து மகிழ்ச்சியூட்டக் கூடியதாகவும், இவர் பாடல்கள் அமைந்துள்ளமை சிறப்பு.

‘சோளக் கொல்லை பொம்மை’ என்ற குழந்தைகளுக்கான பாடல் நூலுக்காக இவருக்கு 2010-ன் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.  ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ என்ற தமிழ்ச் சங்க இலக்கியக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்காக, 2012-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். 

‘எங்கள் வீட்டுச் சேய்கள்’, ‘மழலைப்பூக்கள்’, ‘இயற்கை விருந்து’ ஆகியவை இவர் இயற்றிய பிற சிறுவர் நூல்கள் ஆகும்.

Share this: