இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன.
குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. தோட்டத்துக்குச் சென்று கிளி, காக்கா, செம்போத்து,மைனா, சேவல் ஆகியவற்றிடம் பறக்க வழி கேட்கிறாள். அவை அதற்கான வழி தெரியாதென்று சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு சிறகை, அவளுக்குத் தருகின்றன. ஐந்து வண்ணச் சிறகுகளை ஒரு நூலில் கட்டி, அதை முதுகில் மாட்டிக் கொண்டு ‘நான் பறக்கிறேன்’ என்று மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டு, தோட்டத்தைச் சுற்றி ஓடுகிறாள்.
அவள் மண்டைக்குள் ஏராளமான கேள்விகள்! பச்சோந்தியிடம் அது நிறம் மாறும் அதிசயம் பற்றிக் கேட்கிறாள். ராமாயணத்தில் பச்சோந்தி ராமருக்கு நீருக்குப் பதிலாக மூத்திரம் கொடுத்த கதை பற்றிக் கேட்கிறாள். ‘ராமாயணமே ஒரு கட்டுக்கதை!’ என்று பச்சோந்தி மூலம், அறிந்து கொள்கிறாள்.
கட்டுவிரியன் பாம்புவிடம் வரிசையாகக் கேள்வி கேட்டுப் பதில்களைப் பெறுகின்றாள். ‘பாம்பு பாலைக் குடிக்க முடியாது; அதற்கான தொண்டை அமைப்பு அதற்கில்லை; அதனால் விழுங்க மட்டுமே முடியும்’ என்ற அறிவியல் உண்மையை அறிந்து கொள்கிறாள்.
காகம்,குயில், செம்போத்து, மைனா,கிளி, தவிட்டுக்குருவி, தேன்சிட்டு,கொண்டைக்குருவி,சிட்டுக்குருவி என நம்மூர்ப் பறவைகள் பலவற்றைக் குழந்தைகளுக்கு, இந்நூலில் அறிமுகம் செய்திருக்கிறார் ஆசிரியர்.
பல்லியிடம் அது சுவரில் நடக்கும் திறன் பற்றியும், பல்லி கத்தும் பலன் பற்றியும் கேட்டறிகிறாள். ‘ஜோஸ்யமே பொய்!’ என்கிறது பல்லி.
தவளையிடம் “அது நீரிலும், நிலத்திலும், வசிப்பது எப்படி?” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். ‘மரங்கள் இல்லையென்றால், பூமியில் உயிர்கள் வெகுநாட்கள் உயிரோடு வாழ முடியாது’ என்ற சூழலியல் உண்மையை ஆலமரத்தின் மூலம் தெரிந்து கொள்கிறாள்.
பூமி தோன்றிய கதையையும், அதில் படிப்படியாக உயிரினங்கள் தோன்றிய வரலாற்றையும் அப்பா விளக்குகிறார். இயற்கை, அறிவியல், சூழலியல் குறித்த உண்மைகளைக் கதை மூலம், குழந்தைகள் எளிதாக அறிந்து கொள்ள உதவும் நூல்.
வகை | சிறார் கதைகள் |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | சுவடு வெளியீடு, சேலையூர், சென்னை-73. செல் 9551065500, 9791916936 |
விலை | ரூ 100/- |