குட்டி இளவரசனின் குட்டிப்பூ

Kuttipoo_book

குட்டி இளவரசன் (The Little Prince) என்ற உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு சிறார் நாவலின் ஆசிரியர், அந்த்வான் து செந்த்-எக்சுபெரி ஆவார். இவரது ‘குட்டி இளவரசன்’ தான், இந்நாவலிலும் கதாநாயகன். 

சமகாலத்தில் அவன் பல்வேறு கோள்களுக்குப் பயணம் செய்தால், என்ன மாதிரியான வாழ்வியல் மற்றும், அரசியல் தளங்களை எதிர்கொள்வான்? என்ன மாதிரியான புதிய அனுபவங்களைப் பெறுவான் என்ற சிந்தனையே, இந்நாவலின் அடிப்படை..

இந்நாவலின் முதல் அத்தியாயத்தில்,  எழுத்தாளர் அந்துவானை ஒரு பாத்திரமாக அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.  இந்நாவல் முழுக்க அந்துவான் விண்கலம், குட்டி இளவரசனைச் சுமந்து கொண்டு பயணம் செய்கிறது.

குட்டிக்கோளான பி612ல் குட்டி இளவரசனும், அவனது குட்டிப்பூ மட்டுமே இருந்தார்கள்.  அவன் கனவுகளில் வாழும் ஒரு கற்பனாவாதி.  ஆனால் பூவோ யதார்த்தவாதி.  இரண்டு பேருக்கும் எப்போதும் சண்டை. ஒரு நாள் அவன் ஆடு ஒன்றை வரைந்து, அப்பூவை விழுங்க வைத்துவிடுகிறான்.   குட்டிப்பூ போனபிறகு, தனிமை அவனைப் பாடாய்ப் படுத்தியது.  அதனை நினைத்து உருகத் துவங்குபவன், அங்கிருந்து பல கோள்களுக்குப் பயணம் மேற்கொள்கிறான்.

முதலில் ‘கோ’ கோளுக்குப் போகிறான்.  குடிமக்களே இல்லாத அந்தக் கோளில் கோரா என்ற கோமாளி, தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்கிறான். 

அடுத்து அவன் இறங்கும் கோளில், (நம் பூமி தான்) காற்று சுத்தமாக இல்லை.  அந்தக் கோளில் கடைசியாகத் தோன்றிய மனித இனம், மற்ற உயிரினங்களைக் கொன்று குவித்து, உயிரே இல்லாத கோளாக மாற்றிவிட்ட அவலத்தை ஒரு தாத்தா மூலம் அறிகிறான்.  ஒரு தாளை எடுத்து எல்லாவற்றையும் வரைந்து, மீண்டும் அதனை உயிர்க்கோளாக மாற்றுகிறான். 

‘அங்காடிக்கோள்’ அத்தியாயம் முழுக்க முழுக்கத் தற்காலத்துப் பன்னாட்டுச் சந்தையையும், நுகர்வு கலாசாரத்தையும் கிண்டலுடன் சுவையாக விவரிக்கிறது.

 ‘அடிமைகளின் கோள்’ என்ற அத்தியாயம், மக்கள் அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களில்,  தங்கள் வாழ்வைத் தொலைக்கின்ற அவலத்தை எடுத்துரைக்கிறது.   மக்களின் கால்கள் அலைபேசித் திரையுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன. 

‘குடிக்கிறேன் அதனால் இருக்கிறேன்’ என்று சொல்லும் குடிகாரர்களின் கோளுக்கு அடுத்துப் பயணம் செய்கிறான் குட்டி இளவரசன். நடிகர், நடிகையர் ‘கட் அவுட்’டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது போன்ற சமகால வாழ்வியல் அபத்தங்களையும், பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பித்து, எளியோரை அடிமைகளாக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து வாழ்தல் போன்ற சமூக அநீதிகளையும் ஆசிரியர் இந்நாவலில் இளையோர்க்கு எடுத்துக்காட்டி விழிப்புணர்வூட்டத் தவறவில்லை.

இளையோர்க்குச் சமகால வாழ்வியலையும், அரசியலையும் புகட்டும் குட்டி இளவரசன் அன்பின் மகத்துவம் குறித்துத் தெளிவு பெற்று குட்டிப்பூவை மீண்டும் உயிர்ப்பிக்கிறான்.

அபத்தங்களும், சவால்களும் நிறைந்த வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இளையோர் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். சமகால அரசியல் மற்றும் வாழ்க்கை முறை பற்றி, இந்நாவல் பேசுவதால், பெரியவர்களும் வாசிக்கலாம். 

வகைசிறார் நாவல்
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுவானம் பதிப்பகம் சென்னை-89 (+91 91765 49991)
விலை₹ 100/-
Share this: