கயிறு

Kayiru_pic

இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன.  செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன் கையில் கட்டியிருக்கும் மஞ்சள் கயிறை அம்மாவிடம் மகிழ்ச்சியுடன் காட்டுகிறான். அம்மா அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

“அந்தக் கயிறு எங்கிருந்து கிடைத்தது?” என விசாரிக்கிறார். அவர்கள் தெரு கடைக்காரர், இலவசமாக மகன் கையில் கயிறு கட்டிய விபரத்தை அறிகிறார். செழியனுக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. மறுநாள் அவனைக் கேட்டு வரச் சொல்கிறார்.

“சும்மா அழகுக்குத் தான்!” என்கிறார் கடைகாரர். “நீல யூனிபார்முக்கு நீலக்கயிறு மேட்சாயிருக்கும்; அதைக் கேளு” என்று மகனிடம் சொல்லியனுப்புகிறார் அம்மா. “மஞ்சள் தான், நம் அடையாளம்” என்கிறார் கடைகாரர். மறுநாள் அம்மா சொன்னபடி, தன் நண்பன் அம்பேத்துக்கும், கடைகாரரிடம் மஞ்சள் கயிறு கேட்கிறான் செழியன்.

“நாம உயர்ந்த ஆளுங்க; அவன் நமக்குக் கீழ்; அவன் மஞ்சள் கயிறு கட்டக் கூடாது” என்று கடைகாரர் கோபமாகச் சத்தம் போடுகிறார். அப்போது தான், ‘இது மனிதருக்கிடையே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதத்தைக் கற்பிக்கும் கயிறு’ என்றவுண்மையைச் செழியன் அறிந்து கொள்கிறான்.

அம்பேத்துடனான தன் நட்பைப் பிரிக்கக் கூடிய கயிறு, தனக்குத் தேவையில்லை என்று செழியன் முடிவு செய்து, கயிறை அறுத்துக் கீழே போட்டுவிடுகிறான். அம்மா மகனுக்கு முத்தம் கொடுத்துத் தம் அன்பை வெளிப்படுத்துகிறார்.

இக்கதையில் சென்சிட்டிவ்வான சாதிப் பிரச்சினையைக் கருவாக எடுத்துக் கொண்டு, அதை மிகக் கவனமாகவும், நுட்பமாகவும் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். அம்மாவைப் புத்தகம் படிப்பவராகவும், சாதி பேதம் பார்க்காதவராகவும், புத்திசாலித்தனத்துடன் தம் மகனைச் சிறப்பாக வழி நடத்துபவராகவும் படைத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்! ‘பிறப்பின் அடிப்படையில், சாதி பேதம் பார்க்கக்கூடாது; அனைவரும் சமம்’ என்று மாணவர்க்கு விழிப்புணர்வூட்டும் சிறந்த கதை.

மாணவர்கள் அனைவரும், அவசியம் வாசிக்க வேண்டிய கதை.

வகைஇளையோர் சிறுகதை
ஆசிரியர்விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடுஓங்கில் கூட்டம்+புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18
விலைரூ 30/-
Share this: