அன்புடையீர்!
வணக்கம்.
அக்டோபர் 2, நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள்! அந்நாளில், அவர் நம் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்!
NCERT வரலாறு புத்தகத்தில், சுதந்திரப் போராட்டம் பாடத்தில், காந்தியின் பெயரை நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவைப் போராளியாகப் போற்றுகிறார்கள். மணிப்பூர் மே 2023 முதல் இனக்கலவரத்தால் பற்றியெரிகிறது. அங்குப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதும், பலர் கொல்லப்படுவதும், வீடுகள் தீக்கிரையாவதும், தொடர்ந்து நடக்கின்றது. இக்காலக் கட்டத்தில், காந்தி நமக்கு அதிகம் தேவைப்படுகின்றார்.
காந்தி போதித்த மத நல்லிணக்கம், அஹிம்சை, எளிமை ஆகியவற்றைப் பின்பற்றுவதே, நாம் அவருக்குச் செய்யும் சிறப்பான நினைவஞ்சலியாகும். காந்தியின் பெயரைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கினாலும், அவர் இல்லாமல், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு முழுமை பெறாது என்பது தான் உண்மை!
மதுரை புத்தகக் காட்சி அக்டோபர் 12 முதல் 22 வரை நடக்கவிருக்கிறது. உங்கள் வீட்டுக் குழந்தைகளை, அவசியம் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். எங்கள் சுட்டி உலகத்தில், சிறுவர்களின் வயதுக்கேற்ற புத்தகப் பரிந்துரைகள் 150க்கும் மேல் உள்ளன. சிறுவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, மிகவும் அவசியம்.
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா முதல், தற்காலச் சிறார் எழுத்தாளர்கள் வரை, அனைவரும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அற நூல்கள் சிறுவர்க்கானவை அல்ல என்று கூறியிருக்கிறார்கள். பெரியவர்கள் ஒரு நாளும் கடைபிடித்திராத நீதி நெறிகளைக் குழந்தைகளுக்குப் போதித்து, அவர்களை வாசிப்புக்கு அந்நியமாக்குவது தடுக்கப்படவேண்டும் என்பது, தற்காலச் சிறார் இலக்கியத்தின் முக்கிய நோக்கம்.
எனவே தற்காலச் சமூகச் சிந்தனைகளையும், அறிவியல், சூழலியல் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவரும், புதிய சிறுவர் நூல்களை வாங்கிக் கொடுத்து, குழந்தைகளுக்கு வாசிப்பில் நாட்டத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களின் அறிவுத்திறனையும் மேம்படுத்துங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.