அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2022

Children_book_day

International   Board on Books for Young people (IBBY) என்ற லாபநோக்கற்ற தன்னார்வல அமைப்பு, அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் (International Children’s Books Day-2022) கொண்டாடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.

ஒவ்வோராண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதன் பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டிலுள்ள ஓர் எழுத்தாளர் குழந்தைகளுக்கான செய்தியை வெளியிடுகின்றார். குழந்தைகள் நூல்களில் ஓவியம் வரைபவர் போஸ்டர் தயாரிக்கிறார். இந்தாண்டு இவ்வமைப்பின் கனடா நாட்டுக் கிளை இதை ‘ஸ்பான்சர்’ செய்துள்ளது.  2022 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான கனடா நாட்டின் எழுத்தாளரின் செய்தியும், போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளன.  

வாசிப்பின் மீதான நேசிப்பை ஊக்குவித்தலும், குழந்தைகள் நூல்கள் குறித்தான கவனத்தை மேம்படுத்துதலும், இந்நாள் கொண்டாடப்படுவதற்கு முக்கிய நோக்கங்கள் ஆகும்.

டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் நாள், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாக 1967 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது. 

இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களுள், நம்மிடையே மிகவும் பிரபலமானது ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) இவருடைய கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.

உலகெங்கிலும் வாசிப்பை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த கவனத்தை மேம்படுத்தவும், இந்தச் செய்தியடங்கிய போஸ்டர் மூலமாகவும் பல்வேறு நிகழ்வுகள் மூலமாகவும் பரப்புரை செய்யப் படுகின்றது.  பல்வேறு பள்ளிகளிலும் புத்தகக் கடைகளிலும் இந்த நாளையொட்டி சிறப்பான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன; நூலகங்களில் கதைகளைச் சொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர்.

இந்நாளில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்கள் அல்லாத கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்பை ஊக்குவிப்போம்!

Share this: