படம் நன்றி – (IBBY-Japan)
எல்லாக் குழந்தைகளுக்கும், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!
டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் நாள், 1967 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்களுள், நம்மிடையே மிகவும் பிரபலமானது ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.
‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் (International Children’s Books Day-2024) கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.
இந்தாண்டு இவ்வமைப்பின் ஜப்பான் நாடு, இதை ‘ஸ்பான்சர்’ செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான போஸ்டரைத் தயாரித்து வெளியிட்டு இருப்பவர், குழந்தைகளுக்கான படக்கதைகளை எழுதி வெளியிட்டுள்ள ஓவியக் கலைஞர் நானே ஃப்யூரியா(Nani Furiya) ஆவார்.
“உன் கற்பனைச் சிறகை விரித்துக் கடல்களைத் தாண்டு” (“Cross the Seas on the Wing of your Imagination”)என்பது, 2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள். இதில் ‘கற்பனை’ என்பது முக்கிய சொல் (key word).
புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஈக்கோ கடோனோ (Eiko Kadono) குழந்தைகளுக்காக இந்நாளை ஒட்டிச் செய்தி வெளியிட்டுள்ளார்.
1935 ஆம் ஆண்டு டோக்கியோவில் பிறந்த இவர், தம் ஐந்து வயதில் அம்மாவை இழந்தார். இவரது பத்தாவது வயதில், பசிபிக் போர் காரணமாக, வடக்கு ஜப்பானுக்கு இடம் பெயர்ந்தார். இளம் வயதிலேயே போரினால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டதால், தம் படைப்புகளில், உலக அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதுவரை 250 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவை 10க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழியாக்கம் பெற்றுள்ளன. 2018 ஆம் ஆண்டு, ஹான் ஆண்டர்சன் விருதைப் பெற்றுள்ளார்.
இவர் இந்நாளுக்காக எழுதியுள்ள செய்தியின் தமிழாக்கம் கீழே:-
“உங்கள் இதயம் மகிழ்ச்சியுடன் துடிப்பதைக் கேட்கும் ஆவலுடன், கதைகள் சிறகுகளை விரித்துப் பயணம் செய்கின்றன.
நான் பயணம் செய்யும் ஒரு கதை.
நான் எங்கு வேண்டுமானாலும் பறப்பேன்.
காற்றின் சிறகுகளில், அலைகளின் சிறகுகளில், சில சமயம் மணலின் குட்டிச் சிறகுகளில்…
நிச்சயமாக வலசை செல்லும் பறவைகள் சிறகுகளிலும்…
மேலும் ஜெட் விமானச் சிறகுகளிலேயும்..
உன் பக்கத்தில் அமர்கிறேன். பக்கங்களைத் திறந்தால், நீ கேட்க விரும்பும் கதையைச் சொல்கிறேன்.
வித்தியாசமான, அதிசயமான கதை உனக்குப் பிடிக்குமா?
அல்லது ஒரு சோகமான, ஒரு பயங்கரமான, ஒரு நகைச்சுவையான கதை?
இப்போது நீ கேட்க விரும்ப வில்லை என்றாலும், பரவாயில்லை. ஆனால் என்றோ ஒரு நாள், நீ கேட்க விரும்புவாய் என்று எனக்குத் தெரியும்.
நீ கேட்க விரும்பும் நாளில், “பயணம் செய்யும் கதையே வா! வந்து என் பக்கத்தில் உட்கார்” என்று கூப்பிடு.
நான் உடனே அங்கே பறந்து வருவேன்.
சொல்ல நிறைய கதைகள், என்னிடம் உள்ளன.
தனியே இருக்கும் ஒரு குட்டித் தீவு தனிமையில் வெறுப்புற்று, நீச்சல் கற்றுக் கொண்டு நண்பனைத் தேடிச் சென்ற கதையைச் சொல்லவா?
அல்லது இரண்டு நிலா தோன்றும், மர்மமான இரவின் கதை?
அல்லது கிறிஸ்துமஸ் தாத்தா, காணாமல் போன கதை?
ஓ! உன் இதயம் துடிப்பதை, என்னால் கேட்க முடிகிறது. அது வேகமாகத் துடிக்கிறது.
பயணம் செய்யும் கதை உள்ளே குதித்து, உன் இதயத்தை வேகமாக ஓட விட்டுள்ளது.
அடுத்து உன் சிறகை விரித்துப் பயணம் செய்ய, நீயே தயார் ஆவாய்!
எனவே இன்னொரு பயணம் செய்யும் கதை பிறக்கிறது”
உலகு எங்கிலும் வாசிப்பை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் புத்தகங்கள் குறித்த கவனத்தை மேம்படுத்தவும், புதிய போஸ்டர் மூலமாகவும் பல்வேறு நிகழ்வுகள் மூலமாகவும் பரப்புரை செய்யப்படுகின்றது. பல்வேறு பள்ளிகளிலும் புத்தகக் கடைகளிலும் இந்த நாளையொட்டி, சிறப்பான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன; நூலகங்களில் கதைகளைச் சொல்லிக் குழந்தைகளை மகிழ்விக்கின்றனர்.
இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:
குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;
உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;
தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);
குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;
சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியனவாகும்.
இந்நாளில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்கள் அல்லாத கதை நூல்கள் வாங்கிக் கொடுத்து, கற்பனை சிறகுகளை விரித்துக் கடல்களைத் தாண்ட ஊக்குவிப்போம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.