சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர் இலக்கியம்’ எனப் பெயரிட்டதாகச் சொல்கிறார்.
இதில் தமிழ், இயற்கை, அறிவு, சிறுகதைப்பாட்டு என்பது போன்ற, ஒன்பது தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. தமிழ் என்ற முதல் தலைப்பில் ஒன்பது பாடல்கள் உள்ளன.
இதில் தமிழ்மொழி-தமிழ்நாடு என்ற 4வது பாடல், என்னைக் கவர்ந்தது. அதிலிருந்து ஒரு பத்தி:-
“நாம்பே சுமொழி தமிழ் மொழி
நமது நாடு தமிழ்நாடு
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ்மொழி
வேம்பா நஞ்சா தமிழ் மொழி
விரும்பிக் கற்பது தமிழ் மொழி
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ்நாடு!”
இரண்டாவது ‘இயற்கை’ பகுதியில், சோலை,கடல்,கதிரவன் என இயற்கையழகை விவரித்துப் பாடியுள்ளார். அதிலிருந்து ‘நிலவு’ என்ற பாடல், நீங்களும் ரசிக்க:-
“சொக்க வெள்ளித்தட்டு – மிகத்
தூய வெண்ணெய்ப் பிட்டு
தெற்கத்தியார் சுட்டு – நல்ல
தேங்காய்ப் பாலும் விட்டு
வைக்கச் சொன்ன தோசை-அது
வயிர வட்ட மேசை
பக்க மீன்கள் பலவே – ஒரு
பட்டத் தரசு நிலவே”
‘அறிவு’ என்ற தலைப்பிட்ட மூன்றாம் பகுதியில், ‘நேர்பட ஒழுகு’, ‘இயல்பலாதன செயேல்’, ‘ஏமாற்றாதே’, ‘ஏமாறாதே’ போன்ற தலைப்புகளில் அறிவுரை கூறும் பாடல்களும், எண்கள், வாரம், கிழமைகள், திசை, உயிரெழுத்து,மெய்யெழுத்து,உயிர்மெய் ஆகியவை குறித்த பாடல்களும் உள்ளன.
‘ஊர்தி’ என்ற தலைப்பில், மாட்டுவண்டி, மிதிவண்டி, கப்பல், புகைவண்டி போன்ற ஊர்திகள் பற்றிய பாடல்கள் உள்ளன. ‘தொழில்’ பிரிவில் குயவர்,தட்டார்,கொத்தனார் போன்றோரைப் பற்றிய பாடல்களும், ‘உயிர்கள்’ பகுதியில் விலங்கு,பறவை,போன்ற உயிரினங்களைச் சிறுவர்க்கு அறிமுகம் செய்யும் பாடல்களும் உள்ளன. நூலின் பின்பகுதியில் தாலாட்டுப் பாடல்களும், சிறிய கதைப்பாடல்களும் உள்ளன.
வகை | பாடல்கள் |
ஆசிரியர் | புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் |
வெளியீடு | இணையம் |