தலையங்கம் நவம்பர் 2023

harryread_pic

09/11/2023 அன்று, டில்லியில் நடைபெற்ற விழாவில், ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறுவர் நாவலுக்காகப் பால புரஸ்கார் விருது பெற்ற, எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச் ‘சுட்டி உலகம்’ சார்பாக, வாழ்த்தி மகிழ்கிறோம்!

நவம்பர் 7 குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின், பிறந்த நாள்! சிறார் இலக்கியத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்த அவரையும் இம்மாதத்தில் நினைவு கூர்ந்து, அவர் நினைவைப் போற்ற வேண்டியது நம் கடமை!

அழ.வள்ளியப்பா காலம் தான், தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகின்றது. அவரது மறைவுக்குப் பிறகு, சிறார் இலக்கியம் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. பெற்றோர் தம் குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியைத் தேர்வு செய்தமையால், தமிழ் வாசிப்பு மிகவும் குறைந்து போனது. 50க்கும் மேற்பட்ட சிறுவர் இதழ்களும், வாங்க ஆளின்றி நின்று போயின.

பள்ளியின் தேர்வு மதிப்பெண்ணுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாகப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு, அறவே நின்றது. அப்படியே வாசித்தாலும், ஆங்கிலப் பயிற்றுமொழியின் காரணமாக, மாணவர்கள் ஆங்கிலப் புத்தகங்களையே வாங்கி வாசித்தனர்.

தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில், மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல பதிப்பகங்கள் சிறுவர் நூல்களை வெளியிட முன்வந்துள்ளன. புதிய எழுத்தாளர்களும் சிறார் இலக்கியம் படைக்க முற்பட்டுள்ளனர். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் சூழல் உருவாகியுள்ளது.

ஜனவரி 2024இல் சென்னை புத்தகக் காட்சி துவங்கவுள்ளது. பல புதிய சிறார் புத்தகங்கள், வெளிவரவிருக்கின்றன. பெற்றோர் தம் குழந்தைகளுக்குப் புதிய சிறார் நூல்களை வாங்கிக் கொடுத்து, வாசிக்க வையுங்கள். குழந்தைகளின் பன்முகத் திறன் பெருகப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு அவசியம்.

சுட்டி உலகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட, வயது வாரியான சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகம் உள்ளது. உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல்களைத் தேர்வு செய்து, வாங்கிக் கொடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகம் வாங்கிப் பரிசளிக்கும் பழக்கத்தைத் துவங்குங்கள்! ஒவ்வொரு வீட்டிலும், ஒரு நூலகம் இருப்பது அவசியம்!

‘சுட்டி உலகம்’ காணொளியில், சிறுவர் கதைகளும், பாடல்களும் உள்ளன. குழந்தைகளுக்குத் தமிழ் உச்சரிப்பு மேம்பட, பாடல்களைக் கற்றுக் கொடுங்கள். கதைகளைக் கேட்டு மகிழுங்கள்.

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: