கலிலீயோ – அறிவியலில் ஒரு புரட்சி

Galileo_pic

வழக்கமாக நாம் வாசிக்கும் அறிவியல் அறிஞர் குறித்த நூலில், அவரது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களே, முக்கிய இடம் பிடித்திருக்கும்.  ஆனால் இந்நூலில் கலிலீயோவின் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, அவர் கண்டுபிடித்துச் சொன்ன அறிவியல் உண்மைகளால், வாடிகனில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்துக்கும், அவருக்கும் ஏற்பட்ட சச்சரவுகளே, மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான அறிவியல் நூல் எனலாம். 

முதல் அத்தியாயத்தில் கலிலீயோவின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது.  இத்தாலியில் பைசா நகரத்தில் சாதாரண குடும்பத்தில் முதல் மகனாகப் பிறந்தவர் கலிலீயோ.  மகன் மருத்துவராக வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற பைசா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர், அப்படிப்பில் நாட்டமின்றி  நான்காண்டுகள் கழித்துப் பட்டம் வாங்காமல் திரும்பினார்.  ஆனால்  இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில், அவருக்கு அளவற்ற ஆர்வமிருந்தது. 

தேவாலயத்தில் ஆடிய (oscillation) மணியைத் தம் நாடித்துடிப்பினை வைத்துக் கணக்கிட்டுப் புதிய பெண்டுலம் (Simple pendulum) விதியைக் கண்டுபிடித்தாராம்.  திரவ சமநிலை (Hydrostatics) குறித்து ஆராய்ந்து, திரவ சமநிலை தராசு (Hydrostatic Balance) எனும் கருவியை உருவாக்கியிருக்கிறார். இயக்கவியலிலும், வானவியலிலும் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார். பால்வழி மண்டலம் (Milky way Galaxy) என்பது விண்மீன்களின் கூட்டம் என முதன்முதலாய்க் கண்டறிந்தவர் இவரே. இத்தனை கண்டுபிடிப்புகளுக்குக் காரணமான கலிலீயோ, அவர் வாழ்ந்த காலத்தில் போற்றப்படவில்லை என்பது தான், மிகப் பெரிய சோகம். 

அரிஸ்டாட்டிலின் அறிவியல் தத்துவங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தவறானவை எனக் கலிலீயோ நிரூபித்தார். கோப்பர்நிகஸின் சூரியனை மையமாகக் கொண்ட (Helio Centric) கோட்பாட்டுத் தத்துவத்தை இவர் ஆதரித்தார்.  சூரியன் பிரபஞ்சத்தின் மையம்; சூரியன் பூமியைச் சுற்றவில்லை; பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றுகிறது என்ற கோப்பர்நீகஸின் கருத்தை இவர் ஆதரித்ததிற்குத் தான், இவருக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது!

நவீன அறிவியலின் தந்தை எனப் போற்றப்படும் கலிலீயோ வாழ்வு குறித்துத் தெரிந்து கொள்ள, இளையோர் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

வகைஅறிவியல் அபுனைவு கட்டுரை
ஆசிரியர்பேரா வி.முருகன்
வெளியீடுபாரதி புத்தகாலயம், சென்னை.
விலை₹ 60/-
Share this: