தலையங்கம் – செப்டம்பர்-2023

Schoolread_pic

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்! செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்! இந்நாட்களில், நம் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த இந்த இரு தலைவர்கள் ஆற்றிய பணிகளை, நன்றியுடன் நினைவு கூர்வோம்!

இந்தியா முழுக்கச் சனாதனம் குறித்த பேச்சு அடிபடும், இந்த வேளையில்,  முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். ‘சனாதனம் என்றால் என்ன?’ என்பது குறித்துப் பலரும், பலவிதமாக விளக்கம் சொல்கிறார்கள். ‘எப்போதும் உள்ள தர்மம்’ என்று சிலர் சப்பைக்கட்டுக் கட்டினாலும், சனாதான தர்மம் என்பது, மனுவை அடிப்படையாகக் கொண்ட வர்ணாஸ்சிரம தர்மம் தான், என்பதில், சந்தேகம் ஏதுமில்லை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது, நம் வள்ளுவரின் வாய்மொழி.  ஆனால் சனாதான தர்மம் பிறப்பின் அடிப்படையில், மனிதருக்கிடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதத்தைக் கற்பிக்கிறது. கடந்த மாதம் நாங்குநேரி பள்ளியில் மாணவர்களே சாதியின் பெயரால், தம் சக வகுப்பு மாணவனையும், தடுத்த தங்கையையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சாதி பள்ளிக்குள்ளும் நுழைந்து விட்டது.

70 ஆண்டுகளுக்கு முன் ராஜாஜி கொண்டு வந்த, குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமையில், நம் தலைவர்கள் போராடிப் புதைகுழிக்கு அனுப்பினர். அதை இப்போது புதைகுழியிலிருந்து தோண்டியெடுத்து, ‘விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதுப்பெயரைச் சூட்டி, ஒன்றிய அரசு, நம் மீது திணிக்கப் பார்க்கிறது. செருப்புத் தைப்பவர் மகன், செருப்புத் தொழில் செய்ய வேண்டும்; சவரம் செய்பவர் மகன், முடி திருத்தும் தொழிலில் ஈடுபட வேண்டும்; இவர்களுடைய பிள்ளைகள் வேறு படிப்புப் படித்து வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்பதே, இவர்களின் திட்டம்.

இச்சூழ்நிலையில் தமிழர்களாகிய நாமனைவரும், சாதி,மதங் கடந்து இந்தச் சனாதானத்தை எதிர்த்து, ஒன்றுபட்டுப் போராட வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு நம் சமூக முன்னேற்றத்துக்கு உழைத்த பெரியார் பற்றியும், மற்ற தலைவர்கள் பற்றியும், எடுத்துச் சொல்வோம்! இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லும் புத்தகங்களை வாங்கி, வாசிக்கக் கொடுப்போம்!   

சுட்டி உலகத்தில் 150க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்கள் பற்றிய அறிமுகம் உள்ளது. வயதுக்கேற்ற கதை நூல்களையும், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். சிறுவர்கள் பாடப்புத்தகம் தாண்டிய புத்தகங்களை வாசிப்பது, மிகவும் அவசியம்!

குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் பன்முகத் திறமைகள் வெளிப்படவும், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தைப் புரிந்து கொண்ட, அறிவார்ந்த, மனித நேயமிக்க வருங்காலச் சமுதாயம் மலரவும், வாசிப்பு அவசியம்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: