சிறார் இலக்கியம்–ஒரு பார்வை (எழுத்தாளர் உதயசங்கர்)

childread_pic

1. குழந்தைகள் என்றாலோ, சிறார், என்றாலோ, பாலர் என்றாலோ, அது பதினெட்டு வயதுவரை உள்ள குழந்தைகளைக் குறிக்குமென்று நினைவில் கொள்க! ( கொள்ளைப்பேரு குழந்தைகள் என்றால் ஐந்து வயது முதல் பத்து வயதுவரை உள்ள குழந்தைகளென்ற கருத்துப்படத்தை நிரந்தரமாக மனதில் வைத்திருக்கின்றனர். )

2. கவிதைகளை மட்டும் வாசிப்பவர்கள், கவிதை நூல்களை அவரே தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். அவருடைய ரசனைக்கேற்ப பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறார். இது அனைத்து இலக்கிய வகைமைகளுக்கும் பொருந்தும்.

3. ஆனால் இன்று சிறார் இலக்கியத்தைப் பொறுத்தமட்டில், நேரிடையாகக் குழந்தைகள் தேர்ந்தெடுக்க முடியாது. முன்பு அப்படியில்லை. என்னுடைய குழந்தைப்பருவத்தில் காசு கொடுத்துப் புத்தகம் வாங்க முடியவில்லையே தவிர, வாசிக்கும் புத்தகங்களை நாங்களே தேர்ந்தெடுத்துப் படித்தோம்.

4. இப்போது குழந்தைகளிடம் இலக்கியம் போய்ச்சேர ஏகப்பட்ட தடைகளைத் தாண்ட வேண்டியதிருக்கிறது. முதலில் குழந்தைகள், ஆங்கிலவழிக்கல்வி மோகத்தினால், 99% சதவீதக் குழந்தைகளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. எனவே புரியாத மொழியில் வாசிக்க வைப்பது கடினம்

5. அடுத்தது பெற்றோர்கள், கதைப்புத்தகம் வாசிப்பது வேஸ்ட்…குழந்தைகள் என்றாலே பாடம், பள்ளிக்கூடம், மார்க்கு, ரேங்கு, இத்தியாதி….இது என்னுடைய குழந்தைப்பருவத்திலேயே, என்னுடைய அம்மா, “எப்ப பாரு கதைப்புத்தகம் படிச்சிக்கிட்டேயிருக்கான்” என்று, ஆசிரியரிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். அறுபது, எழுபதுகளிலேயே அப்படி என்றால் இப்போது கேட்கவே வேண்டாம்.

6. அப்படியே சில பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு எதை வாங்கிக் கொடுப்பது என்று தெரியாது. எதுக்கு வம்பு? காலங்காலமாகச் சொல்லப்படுகிற பஞ்சதந்திரம், தெனாலி ராமன், பீர்பால், முல்லா, அப்பாஜி, ராமாயணம், மகாபாரதம், புராணக்கதைகளை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

7. அடுத்தது ஆசிரியர்கள், கதையா கிலோ என்ன விலை? என்று கேட்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கும் சமகாலத்தில் யார் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? என்ன புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன? என்று தெரியாது.  தேவையுமில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் அதிகம். இப்போது மாற்றம் மெதுவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

8. அடுத்ததாகப் பதிப்பகங்கள், பெரியவர்களுக்கானப் புத்தகங்களைப் போடும் போது, பதிப்புக்குழு வைத்து அந்தப்பிரதியை நாலைந்து பேர் வாசித்து, சரி செய்து பதிப்பிப்பவர்கள், குழந்தைகளுக்கான இலக்கியம் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பணம் வாங்கிக் கொண்டும், வாங்காமலும், கண்டமானிக்குப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறார்கள். அவையெல்லாம் குழந்தைகளுக்கானதா? என்ன மாதிரியாக எழுதப்பட்டிருக்கிறது என்றெல்லாம், கவலையே படுவதில்லை.

9. இப்போது குழந்தைகள் காட்டில், மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. தாங்கள் சிறுவயதில் வாசித்தவை, ஆத்திச்சூடி, திருக்குறள், கொன்றை வேந்தன், வெற்றி வேந்தன், , நாலடியார், இவை மட்டும் தான் குழந்தை இலக்கியம் என்று சொல்லித் தருபவர்கள், அதிகமாவார்கள்.

‘குழந்தைகள் தானே! என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள்!’ என்ற மேலாண்மையில், அறிவியல் பூர்வமில்லாத, கலை நேர்த்தியில்லாத, கதை போன்ற கதைகளை எழுதுபவர்களும், சொல்பவர்களும் அதிகமாவார்கள்.

புதிய சந்தை, புதிய நுகர்வோர் என்று, சிறார் இலக்கியத்தின் மீது பாயத் தயாராகிக் கொண்டிருக்கிற பதிப்பகங்களும் அதிகமாகும்.

10. படைப்பவர்களுக்கும், வாசகர்களுக்குமிடையில் பாலமாக இருக்க வேண்டிய விமர்சகர்கள், நீதிபதிகளாக மாறி, எதுவுமே சரியில்லை என்று சொல்லி கொஞ்சநஞ்சம் வாசிப்பையும், தடுக்கிறவர்களாக மாறுகிறார்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி,  சிறார் இலக்கியம் தட்டுத் தடுமாறிக் குழந்தைகளிடம் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆமாம்! இதற்குக் குழந்தைகள் என்ன செய்ய முடியும்?

(எழுத்தாளர் உதயசங்கர் 15/09/2023 அன்று முகநூலில் எழுதிய பதிவை, அவர் அனுமதியுடன் இங்கு வெளியிட்டுள்ளோம்)

Share this: