அன்புடையீர்! வணக்கம்.
சுட்டி உலகம் துவங்கிய ஐந்து மாதங்களில் 6000 பார்வை (Views) பெற்றிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றோம்.
நவம்பர் 7 ஆம் தேதி குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு துவங்குகிறது. நவம்பர் 14 குழந்தைகள் தினம். இந்த இரண்டையும் முன்னிட்டுக் குழந்தைகளுக்கான கதைப்போட்டி ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். அதைப் பற்றிய அறிவிப்பு சுட்டி உலகத்தில் வெளியாகியிருக்கிறது.
இப்போட்டியைச் சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் லாலிபாப் சிறுவர் உலகமும் சேர்ந்து நடத்துகிறது. இப்போட்டியில் வயது 7 முதல் 15 வரை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனைவரும் கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
வாசிக்க வாசிக்கத் தான் எழுத்து மேம்படும். எனவே பரிசுத் தொகையில் பாதியைப் புத்தகமாகக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். சுட்டி உலகத்தில் பிரசுரத்துக்குத் தேர்வாகும் கதைகளுக்கும் புத்தகப்பரிசு உண்டு. போட்டியில் பங்கு கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!
இப்போட்டியில் ஆங்கிலத்தில் எழுதியனுப்பலாமா எனச் சிலர் சந்தேகம் கேட்கின்றார்கள். நம் தாய்மொழியான தமிழில் பேசவும், எழுதவும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காகவே இப்போட்டி நடக்கிறது. எனவே தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.
மேல் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறந்திருப்பதாகவும், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை, மிகக் குறைவாய் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். கொரோனா கால இடைவெளியில் வறுமையின் காரணமாக அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டது தான் முக்கிய காரணம். எனவே அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது சவாலான விஷயம். இதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.
கொரோனா குழந்தைகளுக்கு ஏற்படுத்திய மிகப் பெரிய பாதிப்பு மன அழுத்தம் தான். பள்ளி சென்று நண்பர்களைப் பார்க்க முடியாமல், அளவளாவ முடியாமல் வீட்டுக்குள்ளே அடைப்பட்டுக் கிடப்பது பெரிய கொடுமை. நேரத்தைப் பயனுள்ள வகையில் போக்கப் பெரிதும் துணை செய்வது புத்தகங்களே. ஒருவனுக்கு மிகச் சிறந்த நண்பன் புத்தகம் தான். எனவே குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
சுட்டி உலகத்தில் குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது. உங்கள் குழந்தை விரும்பும் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். சிறுவயதில் ஏற்படும் வாசிப்புப் பழக்கம், ஒருவருக்கு முதுமை வரை தனிமையைப் போக்க பெரிதும் கைகொடுக்கும்!
மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்!
அன்புடன்
ஆசிரியர்.