தலையங்கம் – நவம்பர் 2022

Adithi_Editorial_pic

அன்புடையீர்!

வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது.

கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி உலகத்தில் சிறுவர்க்கான கதைப்போட்டியை அறிவித்தோம். அதில் சிறுவர்கள் பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள். சிறப்பாக கதையெழுதிய 12 பேர்க்குப் பரிசு கொடுத்து ஊக்குவித்தோம். மேலும் பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்துக் ‘காணாமல் போன சிறகுகள்’ என்ற தலைப்பில், நூலாக வெளியிட்டோம்.

எங்கள் சுட்டி உலகம் காணொளியில் குழந்தைக்கவிஞரின் இனிய ஓசையுடைய தமிழ்ப் பாடல்களை அனிமேஷனுடன் கேட்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு இந்தக் காணொளிகளைப் போட்டுக்காட்டிப் பாடச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகள் தெரியாத தமிழ்ச்சொற்களைத் தெரிந்து கொள்ளவும், சரியான உச்சரிப்பைக் கற்றுக்கொள்ளவும் தமிழ்ப்பாடல்களைப் பாடுவது அவசியம்.

சிறுவர்க்கு வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டுப் பரங்கிப்பேட்டை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு வாசிப்புப் போட்டி ஒன்றை வைத்துள்ளோம். மாணவிகள் பலர் இதில் பங்கெடுத்துத் தங்கள் வாசிப்பனுவத்தைச் சிறப்பாக எழுதியுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்குப் புத்தகப்பரிசு அளிக்கப்படும். சுட்டி உலகத்துடன் இதை ஒருங்கிணைத்து நடத்தும் இப்பள்ளியின் ஆசிரியர் இளவரசி அவர்களுக்குச் சுட்டி உலகம் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்! மாணவர்களை வாசிக்க வைப்பதில், இவர் போன்ற ஆசிரியர்களின் பங்கு மகத்தானது! பரிசு பெறும் கட்டுரைகள் சுட்டி உலகத்தில் வெளியாகும்.

தமிழக அரசின் கல்வித்துறையும், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கமும் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்குக் கதைப்புத்தகங்கள் உருவாக்கும் படைப்புப் பணிமனை 29/10/2022 முதல் 31/10/2022 வரை சென்னை நந்தம்பாக்கம் இக்‌ஷா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறார் எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் கல்ந்து கொண்டனர். கல்வி சிந்தனையாளர்கள் வசந்தி தேவி, மாடசாமி ஐயா, ஜி.கிருஷ்ணமூர்த்தி இவர்களின் வழிகாட்டுதலோடு, இப்படைப்பாக்கப் பணிமனை நடைபெற்றது. இதில் கல்ந்து கொண்டவர்கள் 105 கதைகளைச் சமர்ப்பித்துள்ளனர். விரைவில் இவற்றில் தேர்வு செய்யப்படும் கதைகள், அரசுப்பள்ளி சிறுவர்கள் வாசிக்கக் கூடிய எளிய மொழியில், புத்தகங்களாக வெளியிடப்படும் வாய்ப்புள்ளது. அரசுப்பள்ளி குழந்தைகளிடம் வாசிப்பை ஊக்குவிக்கப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எடுக்கப்படும் இத்தகைய சிறந்த முன்னெடுப்புகள் போற்றிப் பாராட்டத்தக்கவை.

ஜனவரி 2022 ல் சென்னையில் துவங்க இருக்கின்ற உலகளவிலான புத்தக காட்சியின் சின்னத்தைப் பபாசி அண்மையில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு சுட்டி உலகத்தில் வெளியாகியுள்ள புத்தக அறிமுகங்கள், புத்தகக்காட்சியில் புத்தகங்களைத் தேர்வு செய்ய பெற்றோர்க்குதவும் என்று நம்புகின்றோம்.

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: