அன்புடையீர்! வணக்கம்.
குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்! இன்னும் ஒன்றரை மாதத்தில் 2021 ஆம் ஆண்டு முடிந்து, துவங்க இருக்கும் புத்தாண்டில், கொரோனா என்ற அழிவுசக்தியின் பிடியிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டு, ஒளிமயமான எதிர்காலம் எல்லோருக்கும் அமையும் என்று நம்பிக்கை கொள்வோம்!
சுட்டி உலகம் துவங்கி, இன்றுடன் 6 மாதம் முடிவடையும் நிலையில், ஏறக்குறைய 7000 பார்வைகளைப் பெற்றிருக்கின்றது என்பது மகிழ்ச்சியான செய்தி.
07/11/2021 அன்று குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு துவங்குவதை முன்னிட்டு, அவர் குறித்த சிறப்புப் பதிவு வெளியிட்டிருக்கிறோம். ‘தோசையம்மா தோசை’, ‘மாம்பழமாம் மாம்பழம்’ போன்ற நமக்கு நன்கு தெரிந்த பாடல்களை இயற்றியவர் அவர்.
குழந்தைகளுக்கு நன்கு தெரிந்ததும், உச்சரிக்க எளியதுமான சின்னச் சின்ன சொற்களைச் சந்த நயத்துடன் அமைத்து, அவர் எழுதிய பாடல்களை நாமும் நம் குழந்தைகளும் இரண்டு தலைமுறைகளாகப் பாடி மகிழ்ந்து வருகின்றோம். குழந்தைகளுக்காக ஏராளமான பாடல்களை இயற்றியதோடு, குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டவர் அவர். அவரை இந்நாளில் நன்றியோடு நினைவு கூர்வது நம் கடமை!
மழலை பேசும் குழந்தைகளுக்கு அவருடைய பாடல்களைச் சொல்லிக் கொடுத்தால், திருத்தமாகப் பேசவும், தமிழை நன்கு உச்சரிக்கவும், அவர்கள் எளிதில் கற்றுக் கொள்வார்கள். சுட்டி உலகம் காணொளியில் அவருடைய சில பாடல்களையும், கதைகளையும் கேட்டு மகிழலாம். மேலும் சுட்டி உலகம் காணொளியில், சிறந்த தமிழ்ப் பாடல்களையும், கதைகளையும் பதிவேற்றியுள்ளோம். குழந்தைகளுக்கு அவற்றைப் போட்டுக் காண்பித்து, அவர்களை மகிழச் செய்யுங்கள்.
குழந்தைக் கவிஞரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா அவர்களுடைய லாலிபாப் சிறுவர் உலகம் அமைப்புடன் இணைந்து, சுட்டி உலகம் சிறுவர்க்கான கதைப்போட்டி நடத்தியது, அனைவரும் அறிந்ததே.
நாங்களே சற்றும் எதிர்பாராத வகையில், குழந்தைகள் பலர் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். இக்கதைப்போட்டியின் முடிவுகள் குழந்தைகள் தினமான 14/11/2021 அன்று, சுட்டி உலகத்தில் வெளியிடப்படும். கதைப்போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த அத்தனை குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோர்க்கும், எங்கள் அன்பும் நன்றியும்!
கதைப்போட்டியில் பங்கேற்ற தங்கள் குழந்தைகளின் அனுபவங்களைச் சுட்டி உலகத்தில் பிரசுரிக்க, மறக்காமல் எங்களுக்கு எழுதியனுப்புங்கள். சுட்டி ஓவியம் பக்கத்தில் பிரசுரிக்க, உங்கள் குழந்தைகளின் ஓவியங்களையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:- team@chuttiulagam.com.
நன்றியுடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.