குழந்தைகள் திரைப்படம் – சொர்க்கத்தின் குழந்தைகள் (CHILDREN OF HEAVEN)

children of heaven frame

1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில், பாரசீக மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த குழந்தைகள் திரைப்படம்.  இதனை இயக்கியவர் மஜித் மஜித் (Majid Majidi) ஆவார். 1998 ஆம் ஆண்டு ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிக்கான அகாடமி விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.    

அலியும், சாராவும் தெற்கு டெஹ்ரானில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகள்.  தங்கை சாராவின் பிய்ந்த  ரோஸ் கலர் செருப்பை அண்ணன் அலி எடுத்துச் சென்று, செருப்பு தைப்பவரிடம் கொடுத்துத் தைப்பதில் படம் துவங்குகிறது.  இப்படத்தின் கதை, முழுக்க முழுக்க இச்செருப்பைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.

தைத்த செருப்பைக் காய்கறி கடை ஓரத்தில் வைத்துவிட்டு, அண்ணன் அலி உருளைக்கிழங்கு வாங்கிக் கொண்டிருக்க, குப்பை சேகரிப்பவர் அதையும் குப்பை என்று நினைத்துக் கொண்டு, எடுத்துக் கொண்டு போய்விடுவார். 

frame from children of heaven movie

காய் வாங்கி முடித்துவிட்டு வந்து தேடினால், வைத்த இடத்தில் செருப்பு இருக்காது. புதுச்செருப்பு வாங்க வசதியில்லாத குடும்பம். நோயாளியான அம்மா. செருப்பு தொலைந்துவிட்டது என்று சொன்னால், அப்பா திட்டுவார், புதுச்செருப்பு வாங்க அப்பாவிடம் பணமில்லை என்று தன் தங்கையிடம் கெஞ்சிக் கூத்தாடி, அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று அண்ணன் கெஞ்சுவான்.

செருப்பைத் தொலைத்துவிட்ட அண்ணன் மேல் கோபம் வந்தாலும்,வேறு வழியின்றி, அரை மனதோடு தங்கை சாராவும் ஒத்துக் கொள்வாள்.  பக்கத்தில் அம்மா இருப்பதனால், அவருக்குத் தெரியக் கூடாதென்று, வீட்டுப்பாடம் எழுதும் இருவரும், தாளில் மாற்றி மாற்றி எழுதி செய்திகளைப் பரிமாறிக்கொள்வது சிறப்பான காட்சி .

காலையில் தங்கை அண்ணனின் செருப்பைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போய்விட்டு மதியம் ஓடி வந்து கொடுக்க, வழியில் பையோடு தயாராக நிற்கும் அவன் அச்செருப்பைப் போட்டுக் கொண்டு மூச்சிரைக்க ஓடுவான்.  புதுச்செருப்பு வாங்க வழியில்லாத வறிய நிலையில் குழந்தைகள் இருவரும் மாற்றி மாற்றி, ஒரே செருப்பைப் போட்டுக் கொண்டு பள்ளிக்குத் தடதடவென ஓடும் சத்தம், படம் முடிந்து வெகு நேரம் ஆன பின்பும், நம் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும்! அத்தனை வலி மிகுந்த ஒலி அது!.

ஒரு நாள் தன் காலுக்குப் பெரிய அளவான அண்ணனின் செருப்பைப் போட்டுக் கொண்டு சாரா வீட்டுக்கு  ஓடி வரும் போது, வழியிலிருந்த சாக்கடையில் ஒரு செருப்பு விழுந்து விடும். சாக்கடை நீரில் அது வேகமாக ஓட, பதற்றத்துடன் அவளும் அதன் கூடவே வேகமாக ஓடி எடுக்கப் பாடுபடும் காட்சி, படம் பார்ப்பவர் அனைவரின் மனதையும் பதைபதைக்கச் செய்துவிடும்.

ஒரு கட்டைக்கு அடியில் செருப்பு மாட்டிக் கொண்டு, எடுக்க முடியாத நிலையில், அவள் கண்களில் தெரியும் அழுகை கலந்த சோகமும், வேதனையும்! அப்பப்பா! படம் பார்ப்பவர் அனைவரின் கண்களிலும் ஒரு சொட்டு கண்ணீராவது வராமல் இருக்காது.  நல்ல வேளையாக ஒரு முதியவரின் உதவியோடு, அவள் அதை எடுத்தவுடனே தான், நமக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்படும்.  

அவள் பள்ளியிலிருந்து ஓடி வந்து கொடுத்து, அதற்குப் பிறகு அலி பள்ளிக்கு ஓடும் போது, வகுப்பு துவங்கிவிடும். அடிக்கடி தாமதமாகச் சென்றதற்காகத் தலைமை ஆசிரியரிடம் மாட்டிக் கொள்வான்.  அதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் தவிப்பான். பள்ளியில் சேர்க்காமல் அப்பாவை அழைத்து வரச்சொல்லித் தலைமை ஆசிரியர் அவனைத் துரத்தும் போது, நல்லவேளையாக  நன்றாகப் படிக்கும் மாணவன் என்று சொல்லி வகுப்பாசிரியர் காப்பாற்றுவார்.

பள்ளியில் நடக்கும் மாரத்தான் போட்டியில் மூன்றாவது பரிசு செருப்பு என்றவுடன், ஆசிரியரிடம் கெஞ்சிக் கூத்தாடிப் போட்டியில் அலி கலந்து கொள்வான்.  மூன்றாம் பரிசு கிடைக்க வேண்டும் என அவன் எவ்வளவோ முயன்றும், கடைசியில் முதலாவதாக வந்துவிடுவான்.  

முதலாவதாக வந்தமைக்காக பள்ளியாசிரியர் உட்பட எல்லோரும் அவனைத் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் கூத்தாடும் போது, அவன் மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் காட்சி, கல் மனதையும் கரையச் செய்யும்.

போட்டி முடிந்து வரும் அண்ணன் கையில் செருப்பை எதிர்பார்க்கும்  சாராவின் முகத்தில் பயங்கர ஏமாற்றம்! பந்தயத்தில் ஓடியதால் ஏற்கெனவே பழையதாக இருந்த அவன் செருப்பு இன்னும் அதிகமாகக் கிழிந்துவிடும்.  ஓடியதால் காலில் ஏற்பட்ட கொப்புளங்களுடன், மீன் தொட்டியில் காலை  நனைத்தபடி அலி அமர்ந்திருக்க, மீன்கள் அவனது புண்களைக் கடித்துக் கொண்டிருக்கும்!

அண்ணன் அலி தன் தங்கை மீது காட்டும் பாசம், அந்தச் சின்ன வயதில் குடும்ப பொருளாதார நிலைமையை உணர்ந்து, அப்பாவுக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்ற பொறுப்புடன் தவிக்கும் தவிப்பு, முக பாவனைகள் எல்லாமே மிக அருமை. இருவருக்குமிடையே நிகழும் பார்வை பரிமாற்றங்கள் அவ்வளவு அழகு!

அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவர்கள் இருவருமே அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருமே அற்புதமான நடிப்பால் நம் மனதைக் கொள்ளைக் கொள்கிறார்கள்.  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய சிறந்த சிறுவர் படம்!

யூடியூப் காணொளியில் இப்படத்தைக் காணலாம்.

(செப்டம்பர் 2021 பொம்மி குழந்தைகள் மாத இதழில் எழுதியது)

Share this: