தலையங்கம் – மே 2023

Kayalread_pic

இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில், தொடர்ச்சியாகத் தமிழ்மொழிக் காணொளிகளை வெளியிடவிருக்கின்றோம் என்று அறிவிப்பதில் மகிழ்கின்றோம்!

தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறைகள் தமிழ் தெரியாமலே உருவாகியுள்ளன; நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியே அந்நியமாகிவிட்டது; எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரிகின்றது.

“தாய்மொழியே மனிதனின் சிந்தனைகளின் திறவுகோல்; குழந்தையின் படிப்படியான இயல்பான மூளை வளர்ச்சிக்கும், படைப்பாற்றலுக்கும் தாய்மொழி மிகவும் அவசியம்” எனப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு நேர்மாறாகத் தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற, பள்ளியின் முதல் வகுப்பிலிருந்து தமிழே படிக்காமல், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற பிற மொழிகளை எடுத்துப் படிக்கும் குழந்தைகளே அதிகம். தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில், 6 ஆம் வகுப்பு முதல் சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கட்டாயமாகப் படிக்க வேண்டுமாம்; வழக்கொழிந்து போன சம்ஸ்கிருதத்தைக் கட்டாயமாகக் குழந்தைகள் படிக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த அவலச் சூழ்நிலையில், தமிழை நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், சுட்டித்தமிழ்க் காணொளிகளை வெளியிடவிருக்கிறோம்.

இலக்கண சுத்தமான தூய தமிழைப் போதிப்பது, எங்கள் நோக்கமல்ல; தமிழே தெரியாமல் வளரும் இன்றைய குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக, இக்காணொளிகள் அமைந்திருக்கும். எனவே அன்றாடம் பேச்சுவழக்கில் நாம் பயன்படுத்தும் எளிய தமிழ்ச் சொற்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து, இதில் கொடுக்கவிருக்கிறோம். குழந்தைகள் மட்டுமன்றி, தமிழைக் கற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்கும், இக்காணொளிகள் பயனுள்ளதாயிருக்கும்.

இந்த இரண்டாண்டுகளில் தமிழில் வெளியாகியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் நூல்களை, சுட்டி உலகத்தில் அறிமுகம் செய்துள்ளோம். ‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறுவர் பாடல்களும், கதைகளும் வெளியாகின்றன. தமிழைத் திருத்தமாக உச்சரிக்க உதவும், நா பிறழ் பயிற்சி பாடல்களும் இதிலுண்டு.

குழந்தைகளுக்கு இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, நேசிக்கச் செய்ய வேண்டுமானால், மரம், விலங்கு, பறவை ஆகியவை குறித்து எங்கள் தளத்தில் வெளிவரும் தொடரை வாசிக்கச் செய்யுங்கள்.

சிறுவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிக்க, 07/11/2021 அன்று சிறுவர்களே எழுதும் கதைப் போட்டியொன்றை வைத்துப் பரிசுகள் கொடுத்ததோடு, அக்கதைகளைத் தொகுத்துக் ‘காணாமல் போன சிறகுகள்’ என்ற தலைப்பில், புத்தகமாகவும் வெளியிட்டுள்ளோம்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் குழந்தைகள் நாளைக் கொண்டாடும் விதமாகப் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, ‘நான் வாசித்த புத்தகம்’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி வைத்து, அதில் பங்கு கொண்ட மாணவிகளுக்குப் புத்தகப் பரிசுகள் அளித்துப் பாராட்டினோம்.

எதிர்காலத்தில் நம் குழந்தைகள் அறிவாளிகளாகவும், சிந்தனையாளர் களாகவும், மிளிர்வதற்குப் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு மிக அவசியம். எனவே இளம்வயதிலேயே வாசிப்பின் சுவையை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை.

குறைந்தது பத்துக் கதைப் புத்தகங்களாவது வாங்கி, வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமையுங்கள். புத்தகம் வாங்கச் செலவு செய்வது செலவல்ல; அது அறிவுக்கான முதலீடே! தொடர்ந்து பயணிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: