தலையங்கம் – ஜூன் 2022

Editorial_Kayal_pic

அன்புடையீர்!

வணக்கம்.  ‘சுட்டி உலகம்’ துவங்கி ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்!  முதலாண்டு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் நன்றி!  பார்வைகளின் எண்ணிக்கை 15000 ஐ தொட்டிருக்கிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்ச்சி!

கொரோனா காரணமாக இரண்டாண்டுகள் வீடுகளில் அடைபட்டுக் கிடந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் துவங்கியிருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.  இனி வரும் காலங்களில் கொரோனா முற்றிலும் ஒழிந்து, மனிதகுலம் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை கொள்வோம்! 

குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பை அறிமுகம் செய்யுங்கள்! அவர்களது படைப்பூக்கத்தை ஊக்குவிக்க, அவர்கள் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளின் போது, புத்தகங்களைப் பரிசு கொடுக்கும் பழக்கத்தைத் துவங்குங்கள். வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்!

மனிதன் பேராசை கொண்டு, இயற்கையை நாசம் செய்ததன் விளைவாகச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுக் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அளவுக்கு அதிகமாக வெப்பம் அதிகரித்துப் பனி உருகத் துவங்கியுள்ளது.  கோடையில் புயல் வீசுகின்றது. எதிர்பாராக் காலங்களில் மழை, வெள்ளம் என இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு, அவற்றின் மோசமான விளைவுகளை, நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயற்கையைப் பற்றியும், சூழலியல் மாசு குறித்தும், நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது நம் கடமை.  மேலும் இப்பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானது இல்லை; எல்லா உயிர்க்கும் சொந்தமானது என்றும், நம் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது அவசியம்.  பிற உயிர்களையும் தம் உயிர் போலக் குழந்தைகள் நேசிக்க வேண்டுமானால், இயற்கை குறித்தும், பிற உயிர்கள் குறித்தும் குழந்தைகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  எனவே இயற்கையைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி நேசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இம்மாத முதல், ‘சுட்டி உலக’த்தில் மூன்று தொடர்கள் துவங்குகின்றன.

இத்தொடர்களைச் சுட்டி உலகத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான, கீதா மதிவாணன் எழுதுகிறார்.  இயற்கையிலும், சூழலியலும் மிகுந்த ஈடுபாடும், அக்கறையும் கொண்ட இவர், ஆஸ்திரேலிய அதிசய விலங்குகள் குறித்தும், பறவைகள் குறித்தும், ஏற்கெனவே அமேஸானில் மூன்று மின்னூல்களை வெளியிட்டுள்ளார்.

இவர் இத்தொடர்களில் மாதம் ஒரு விலங்கு, ஒரு பறவை, ஒரு மரம் எனக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார். இவற்றில் பெரும்பாலானவை, நாம் ஏற்கெனவே கேள்விப்படாதவை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

விநோத விலங்குகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘மரம் மண்ணின் வரம்’ என்ற தலைப்புகளில், இவை வெளியாகின்றன.  இயற்கையின் அதிசய உண்மைகளை அறிந்து, இயற்கையை நேசிக்க அவசியம் குழந்தைகளை இத்தொடர்களை வாசிக்கச் சொல்லுங்கள்.  

சுட்டி உலகம் நடத்திய கதைப்போட்டியில், வெற்றி பெற்ற கதைகளைப் புத்தகமாக்கும் பணி முடியும் தறுவாயில் இருக்கிறது. புத்தகம் வெளிவந்தவுடன் அவரவர் முகவரிக்கு ஒரு பிரதி இலவசமாக அனுப்புவோம்!

எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்,

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: