தலையங்கம் டிசம்பர் 2022

Editorial_Dec_22

அன்புடையீர்! வணக்கம்.

எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்!

2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன. ஜனவரி 2023 ல் சென்னையில் நடக்கவிருக்கும் புத்தகக்காட்சிக்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. 45 ஆண்டுகளாக நடந்து வரும் சென்னை புத்தகக் காட்சி, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் பெருநிகழ்வு.

இம்முறை இக்காட்சி பன்னாட்டுப் புத்தகக்காட்சியாக (International Bookfair) நிகழவுள்ளது என்ற செய்தி, மகிழ்வுக்குரியது. இது பதிப்பாளர்க்கும், எழுத்தாளர்க்கும், வாசகர்க்கும், தொழில் திறனாளர்க்கும் பல்வேறு வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சிறப்பான நிகழ்வு. இதில் நூல் விற்பனை மட்டுமே முதன்மையானது அல்ல; பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் தங்கள் நூல்களின் காப்புரிமைகளை விற்கவும், வாங்கவும் ‘படைப்புரிமை மையம்’ அங்கே இருக்குமாம். மொழி பெயர்ப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமாம். எனவே தமிழின் சிறந்த ஆக்கங்கள் உலகின் பல்வேறு மொழிகளுக்குப் பெயர்க்கப்படவும், உலகின் பல்வேறு மொழிகளின் சிறந்த படைப்புகள், தமிழில் மொழியாக்கம் பெறவும், வாய்ப்புகள் உருவாக இந்நிகழ்வு உதவும். முதன்முறையாக இதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கும் தமிழ்நாட்டு அரசுக்குப் பாராட்டும், நன்றியும்.

கடந்த மாதம் நவம்பரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுப் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அவர்கள் வாசித்த புத்தகம் குறித்துக் கட்டுரை எழுதும் போட்டி ஒன்றைச் ‘சுட்டி உலகம்’ சார்பாக நடத்தினோம். இதற்கான முன்னெடுப்புகளை, அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் T.இளவரசி அவர்கள் எடுத்தார். அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவிகளுக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினோம். இப்போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும், இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த ஆசிரியர் T.இளவரசி அவர்களுக்கும், சுட்டி உலகம் சார்பாக அன்பும் நன்றியும்.

2022 ஆம் ஆண்டில் வெளியான சிறார் நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் சுட்டி உலகத்தில் உள்ளன. புத்தகக் காட்சிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் நூல்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள். பாடப்புத்தகம் அல்லாத புத்தக வாசிப்பைக் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.  உங்கள் குழந்தைகளின் பன்முகத்திறமையை வளர்க்கப் பாடப் புத்தகம் தாண்டிய வாசிப்பை ஊக்குவியுங்கள். தாய்மொழியான தமிழில் நம் குழந்தைகள் தேர்ச்சி பெறுவது மிகவும் அவசியம். நம் மொழி தான் நம் அடையாளம். எனவே ஆங்கில நூல்களோடு, தமிழில் வெளியாகும் தற்கால சிறார் நூல்களையும் வாங்கிக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள்.

புத்தகம் வாங்குவது செலவு அல்ல; அது அறிவை வளர்ப்பதற்கான முதலீடு. குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். நம் வருங்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக வளர, வாசிப்புப் பழக்கத்தை இப்போதே, இக்கணமே துவங்க வேண்டியது மிகவும் அவசியம்.

மீண்டும் அடுத்தமாதம் சந்திப்போம்,

வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: