வணக்கம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
‘சுட்டி உலகம்’ துவங்கி இம்மாதத்தோடு இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சிறார் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட எங்கள் சுட்டி உலகத்தில், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அண்மையில் தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான சிறுவர் நூல்களில் பெரும்பான்மையானவை, வயதுவாரியாக இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எங்கள் ‘சுட்டி உலகம்’ காணொளியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறோம். இக்காலச் சிந்தனைகளுடன் கூடிய சிறுவர் பாடல்களை, எங்கள் காணொளியில் கேட்டு மகிழலாம். பெரும்பாலான குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வி கற்பதனால், தமிழை உச்சரிப்பதற்கும், புதுப்புது சொற்களைக் கற்பதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பாடல்களைப் பாடிப் பழகினால், பல புதுத் தமிழ்ச் சொற்களை எளிதாகக் கற்பதுடன், திருத்தமாக உச்சரிக்கவும் முடியும்.
பாடல்கள் மட்டுமின்றி, கதைகளும் ‘சுட்டி உலகம்’ காணொளியில் வெளியாகின்றன. கதைகள் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, அவர்களது படைப்புத் திறனை ஊக்குவிக்கும் சக்தி படைத்தவையென்பதால், குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் கதைகளைக் கூறி, அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்துங்கள்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டிச் சிறுவர்க்குக் கதையெழுதும் போட்டி நடத்திப் பரிசுகள் கொடுத்தோடு, அவர்கள் எழுதிய கதைகளைத் தொகுத்துக் ‘காணாமல் போன சிறகுகள்’ என்ற தலைப்பில், புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
2022 ஆம் ஆண்டு நவம்பரில் குழந்தைகள் தினத்தையொட்டிப் பறங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, ‘நான் வாசித்த புத்தகம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்திப் புத்தகங்களைப் பரிசாக அளித்தோம். இதை அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி ஒருங்கிணைப்புச் செய்தார். அவருக்கு எங்கள் நன்றி.
சுட்டி உலகத்தில் சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெறுகின்றன. சில சிறுவர் திரைப்பட விமர்சனங்களும், சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளும், ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
மனிதர்கள் இயற்கையை அழித்ததன் காரணமாகச் சூழல் கெட்டு, காலமாற்றத்தின் மோசமான விளைவுகளை நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நம் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மாதமொரு மரம், விலங்கு, பறவை எனத் தொடர்ச்சியாகச் சுட்டி உலகத்தில் இயற்கையை அறிமுகம் செய்கின்றோம்.
ஏப்ரல், மே மாதங்களில், வெப்பம் அதிகரிப்பதால், நம் நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு காய்ந்துவிடும். எனவே குடிக்க நீரின்றிப் பறவைகள் இறக்க நேரிடும். எனவே மொட்டை மாடியிலோ, வாசலிலோ ஒரு மண் சட்டி அல்லது அகலமான பிளாஸ்டிக் கிண்ணத்தில் தினமும் நீர் நிரப்பி வைத்துப் பறவைகளைக் காப்பாற்றுங்கள்.
‘சுட்டி உலகம்’ மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மே மாதம், எங்கள் காணொளியில், புதிய வீடியோக்களை வெளியிட இருக்கின்றோம். அது என்ன வீடியோ என்று தெரிந்து கொள்ள விருப்பமா? மே 10 ஆம் தேதி வரை காத்திருங்கள்.
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்
சுட்டி உலகம்.