அனைவருக்கும் வணக்கம்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரலுடன், சுட்டி உலகம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுகின்றது; மே 10 ஆம் தேதி சுட்டி உலகத்தின் இரண்டாம் ஆண்டு துவங்குகிறது என்பதை, உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்கின்றோம். தற்சமயம் பார்வைகளின் எண்ணிக்கை, 13000 ஐ கடந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியான செய்தி.
சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும்; அதற்கான ஒரு வழிகாட்டியாகச் சுட்டி உலகம் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த வலைத்தளத்தைத் துவக்கினோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் நூல்கள் பற்றிய விமர்சனத்தை, இத்தளத்தில் வெளியிட்டுள்ளோம். பெற்றோர் தம் குழந்தைகளுக்கு வயது வாரியாக நூல்களைத் தேர்வு செய்வதற்கு, இந்தத் தளம் மிகவும் உதவியாக இருக்கும். எந்தெந்த பதிப்பகங்கள் தற்காலத்தில் சிறார் நூல்களை வெளியிடுகின்றன? இக்காலத்தில் சிறார்க்கு எழுதும் எழுத்தாளர்கள் யார் யார்? என்ற விபரங்களையும் இத்தளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதம் புத்தக வாசிப்புக்கு முக்கியமான மாதம். ஏப்ரல் 2 ஆம் நாள் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள். இது குறித்துச் சுட்டி உலகத்தில் ஒரு சிறப்புப் பதிவை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். வாசிப்பின் மீதான நேசிப்பை ஊக்குவித்தலும், குழந்தைகள் நூல்கள் குறித்தான கவனத்தை மேம்படுத்துதலும், இந்நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.
அடுத்து ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள். யுனெஸ்கோவால் கொண்டாடப்படும் இந்நாளும், புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நாளே! இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்தினால், அது வாழ்நாளின் பிற்பகுதியில் பலனுள்ள பொழுதுபோக்காக அமையும். நடுத்தர வயதில் வாசிப்பவர்கள் அனைவருமே, சிறுவயதில் வாசிக்கத் துவங்கியவர்கள் என்கிறது ஓர் ஆய்வு!
பெற்றோரும், ஆசிரியர்களும் வாசிப்பின் அவசியத்தைக் குழந்தைகளுக்குச் சிறுவயது முதலே வலியுறுத்த வேண்டியது அவசியம். சிறார் இலக்கியத்தின் பால், தற்போது பலரின் கவனம் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது.
ஏராளமான நல்ல சிறார் நூல்கள் இப்போது தமிழில் வெளியாகின்றன. பெற்றோர் அவசியம் தமிழில் தற்காலத்தில் வெளிவந்துள்ள சிறுவர் நூல்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்ய வேண்டும்.
குழந்தைகளின் பிறந்த நாளின் போது, புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள். அருகாமையில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை வாசிக்கச் சொல்லுங்கள். வீட்டில் சிறு நூலகம் அமைத்து, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துங்கள். நூல் வாங்குவதற்குச் செலவழிக்கும் பணம் உண்மையில் செலவு அல்ல; அது உங்கள் குழந்தையின் அறிவுக்கான முதலீடு!
முடிந்த போதெல்லாம் கதைகள் சொல்லி, அவர்கள் கற்பனையை விரிவு படுத்துங்கள். கதைகள் தாம் குழந்தைகளின் படைப்பூக்கத் திறனைத் தூண்டி, எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழக் காரணமாக அமைகின்றன.
சுட்டி உலகம் காணொளியில் குழந்தைகள் விரும்பிப் பார்ப்பதற்கேற்றவாறு, சிறந்த தமிழ்ப்பாடல்கள் ஒலி/ஒளி காட்சிகளுடன் வெளியாகின்றன. ஆங்கில நர்சரி பாடல்களை மட்டுமே பாடி வளரும் நம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பாடல்களைக் கற்றுக் கொடுத்துப் பாடச்சொல்லுங்கள். புதிய தமிழ்ச்சொற்களைக் கற்க அவை உதவும். மேலும் தமிழை நன்கு உச்சரிக்க நாக்குக்கு நல்ல பயிற்சியாகவும் இருக்கும். குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஆக்ஷனுடனும், வண்ணப் படங்களுடனும் இதில் கதைகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.
சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளைப் புத்தகமாக்கும் பணி துவங்கியிருக்கிறது. சிலரிடமிருந்து மிகவும் தாமதமாகக் குழந்தை எழுத்தாளர் குறிப்பும், படமும் வந்ததே, புத்தகத் தொகுப்புப்பணி தாமதமானதற்கு முக்கிய காரணம்.
எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்,
ஆசிரியர்.
சுட்டி உலகம்.