மட்டில்டா (Matilda)  (ஆங்கிலம்)

Matilda_movie_pic

இது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படம். பிரபல ஆங்கில எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) இதே பெயரில் எழுதிய சிறார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். டானி டெவிட்டோ (Danny DeVito) என்பவர், இப்படத்தின் இயக்குநர் ஆவார். இவரே இப்படத்தில் மட்டில்டாவின் தந்தையாகவும் நடித்திருக்கிறார்.

மட்டில்டா பிறவியிலேயே அற்புத மந்திரசக்தி வாய்க்கப் பெற்ற குழந்தை. மிகவும் புத்திசாலியும் கூட. ஆனால் அவளுடைய பெற்றோரும், அவள் அண்ணனும், அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல், உதாசீனப் படுத்துகிறார்கள்.

அம்மா எந்நேரமும் கிளப்பில் சீட்டு விளையாடுவதிலும், மேக்கப் பண்ணிக் கொள்வதிலும், தொலைக்காட்சிப் பார்ப்பதிலும் நேரத்தைக் கழிக்கிறார். மட்டில்டா இரண்டு வயது முதலே, தனக்கு வேண்டிய உணவைத் தானே சமைத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. 

வீட்டில் மட்டில்டாவைத் தவிர, மற்ற மூவரும் ஆர்வமுடன் தொலைக்காட்சி  பார்க்கிறார்கள்.  மாறாகப் புத்தகம் வாசிப்பதில் மட்டில்டாவுக்கு ஆர்வம் அதிகம்.  நூலகம் இருக்குமிடத்தைத் தானே கண்டுபிடித்து நடந்து சென்று, புத்தகங்களை வாசிக்கத் துவங்குகிறாள்.  நூலகத்திலிருந்து பல புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்து வாசிக்கிறாள்.

தன்னைப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி, அப்பாவிடம் கேட்கிறாள். அவர் மறுத்துவிடவே, கோபத்தில் அவர் முடிக்குத் தடவும் டானிக் தைலத்தில் பிளீச்சிங் பவுடரைக் கலந்து வைத்துவிடுகிறாள்.  தம் முடி வெளுத்துப் போனதைப் பார்த்து, அவர் அதிர்ச்சியாகிக் கத்தும் போது, அவளுக்குச் சிரிப்பு வருகின்றது.

பழைய கார்களை வாங்கி விற்றுக் கார் கம்பெனி நடத்தும் அப்பா திருட்டுத்தனம் செய்து,அதிக விலைக்கு வாடிக்கையாளரை ஏமாற்றிக் கார் விற்கிறார். இதை அறிந்த மட்டில்டா, “இது சட்ட விரோதம்” என்று அவரைக் கண்டிக்கிறாள். அவர் அவளைத் திட்டி விட்டுச் சட்டை செய்யாமல் நகரும் போது, அவர் தொப்பியில் பசையைத் தடவி வைத்துவிடுகின்றாள். தொப்பி அவர் தலையில் ஒட்டிக்கொண்டு அதை எடுக்க முடியாமல், ஹோட்டலில் அவள் அம்மாவும், அப்பாவும் படும் அவஸ்தைகளைக் கண்டு உள்ளுக்குள் ரசிக்கின்றாள்.

வீட்டில் அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கும்போது, மட்டில்டா மட்டும், புத்தக வாசிப்பில் ஆழ்ந்து போயிருக்கின்றாள். “நீயும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தானே?” எனக் கோபமாகக் கேட்கும் அப்பா, அவள் வாசித்த புத்தகத்தின் பக்கங்களைக் கோபத்துடன் கிழித்து விட்டெறிகிறார். 

அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, மட்டில்டாவின் தலையை அழுத்திப் பிடித்த வண்ணமிருக்கிறார்.  கோபத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியை உற்றுப் பார்க்கிறாள் மட்டில்டா.  சிறிது நேரத்தில் அப்பெட்டி வெடித்துத் தூள் தூளாகச் சிதறிவிடுகின்றது.

அகதா டிரன்ச்புல் (Agatha Trunchbull) ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியை.  சின்ன தப்புகளுக்குக் கூடக் குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் ராட்சஸ குணம் கொண்டவர்.  தலைமை ஆசிரியையைக் கண்டாலே, குழந்தைகள் பயந்து நடுங்குகிறார்கள். அகதாவிடம் ஒரு காரை விற்கும் மட்டில்டாவின் அப்பா, அவளை அப்பள்ளியில் சேர்க்கிறார்.

மட்டில்டாவின் ஆசிரியையாக வரும் ஜெனிபர் ஹனி, அவள் மீது மிகவும் அன்பாக இருக்கின்றார். தாம் கேட்கும் கணக்குக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களைச் சொல்லும் மட்டில்டாவைப் பார்த்து வியப்படைகிறார் ஹனி. நூலகத்தில் கணக்குப் புத்தகங்களை வாசித்துத் தெரிந்து கொண்டதாகப் பதில் கூறுகிறாள் மட்டில்டா. 

மட்டில்டாவுக்கு வயதுக்கு மீறிய அறிவிருப்பதால், அவளை மேல் வகுப்புக்கு அனுப்பச் சொல்லி. தலைமை ஆசிரியையிடம் பரிந்துரைக்கிறார் ஹனி. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிடுகின்றார்.

ஒரு நாள் புரூஸ் என்ற சிறுவனுக்குத் தண்டனையாக மிகப்பெரிய கேக்கை கொடுத்து, எல்லாக் குழந்தைகள் முன்னிலையிலும் தின்னச் சொல்கிறார் தலைமை ஆசிரியை அகதா.அவன் பாதிக்கு மேல் தின்ன முடியாமல் மிகவும் திணறுகிறான். அவன் பரிதாப நிலையைப் பார்க்கச் சகிக்காமல், மட்டில்டா முதல் ஆளாக எழுந்து நின்று, “உன்னால் முடியும் புரூஸ்” என்று கை தட்டி உற்சாகப்படுத்துகிறாள். 

உடனே எல்லாக் குழந்தைகளும் தொடர்ந்து ‘புருஸ், புருஸ்’ என்று சொல்லிக் கைதட்டி, அவனை உற்சாகமூட்டுகிறார்கள். அவனும் உற்சாகத்துடன் எழுந்து, வேக வேகமாக முழுவதையும் தின்றுமுடித்துக் கைதட்டல் வாங்குகிறான். இந்தச் சம்பவத்தினால், அகதாவின் கோபத்துக்கு ஆளாகிறாள் மட்டில்டா.

அகதா மாணவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் போது, மட்டில்டா, தன் கண் வழியே மந்திர சக்தியைச் செலுத்தி, அவர்களைக் காப்பாற்றுகிறாள்.  அகதா ஒரு பையனைத் தலைக்கு மேலே சுழற்றி ஜன்னல் வழியாகத் தூக்கி எறியும் போது, மட்டில்டா தன் சக்தியின் உதவியுடன் அவனைப் பறக்கச் செய்து அடி படாமல், பத்திரமாகத் தரையிறக்குகிறாள்.

ஒரு நாள் ஆசிரியை ஹனி, மட்டில்டாவிடம் தன் கதையைக் கூறுகின்றார். தமக்கு 2 வயதான போது, அம்மா இறந்துவிட்டார் என்றும், தன்னைக் கவனித்துக் கொள்ள அம்மாவின் தங்கையை (மாற்றாந்தாய் மகள்) அப்பா அழைத்து வந்தார் என்றும், சில ஆண்டுகள் கழித்து அப்பாவும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்.  அம்மாவின் மாற்றாந்தாயின் தங்கையாக வந்தவர், வேறு யாருமில்லை; தலைமையாசிரியை அகதா தான் என்ற உண்மையையும் சொல்கிறார்.

ஹனியின் வீட்டுக்குப் போகும் வழியில் இருவரும் அகதாவின் வீட்டைப் பார்க்கிறார்கள்.  அவர் காரில் எங்கோ வெளியில் கிளம்பிச் செல்கிறார். அது தான் ஹனிக்குச் சொந்தமான வீடு என்ற உண்மையை மட்டில்டா தெரிந்து கொள்கிறாள். 

அகதா வெளியில் சென்றிருப்பதால், வீட்டுக்கு உள்ளே போய்ப் பார்க்கலாம் என்று மட்டில்டா ஓடுகின்றாள். ஹனி தடுத்தும் கேட்காமல் மட்டில்டா வீட்டுக்கு உள்ளே சென்றுவிட்டதால், வேறு வழியின்றி ஹனியும் அவளைத் தொடர்ந்து செல்கிறாள்.  சுவரில் தம் தந்தையின் பெரிய படம் மாட்டியிருந்த இடத்தில், இப்போது அகதாவின் படம் இருப்பதை, ஹனி சுட்டிக்காட்டுகிறாள். 

வழியில் கார் ரிப்பேராகிவிடுவதால், அகதா தொடர்ந்து செல்லாமல் பாதியில் வீட்டுக்குத் திரும்பி வருகின்றார். சாக்லேட் டப்பா மூடி திறந்திருப்பதைப் பார்த்து வீட்டுக்குள் யாரோ வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து துரத்த ஆரம்பிக்கிறார். 

மட்டில்டாவும், ஹனியும் அகதா கையில் மாட்டாமல் இருக்க, ஒவ்வொரு இடமாக ஒளிந்து, ஓடுகின்றார்கள். எங்கே இருவரும் அகதாவிடம் மாட்டிக் கொள்வார்களோ எனப் படம் பார்ப்பவர்களுக்கு ‘திக் திக்’ என்று திகிலும், பதற்றமும் ஏற்படுத்தும் காட்சியிது! கடைசியில் நல்ல வேளையாக ஒரு ஜன்னல் வழியாக இருவரும் தப்பித்து, வெளியே வந்து விடுகின்றார்கள்.

மட்டில்டா மீண்டும் ஒரு முறை அகதா வீட்டுக்குச் சென்று, வெளியில் இருந்தபடியே தன் மந்திர சக்தியைப் பயன்படுத்தி, கடிகாரத்தின் நேரத்தை நள்ளிரவு 12 மணிக்கு மாற்றி ஒலிக்கச் செய்வதும், பொருட்களைப் பறக்கச் செய்வதுமாக அகதாவைப் பயந்து நடுங்கச் செய்கிறாள். ஆனால் மட்டில்டா அங்கே விட்டு வரும் ரிப்பனை வைத்து அவள் தான் வீட்டுக்கு வந்தவள் என அகதா தெரிந்து கொள்கிறார்.

மறுநாள் பள்ளியில், அகதா குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து, முதல்நாள் இந்த ரிப்பனுடன் தம் வீட்டுக்கு வந்தது யார் என்று கேட்டுப் பயங்கரமாக மிரட்டுகிறார். ஆனால் மட்டில்டா தன் மந்திர சக்தியால் ஒரு சாக்பீஸைப் பறக்க வைத்துக் கரும்பலகையில் எழுதச் செய்கிறாள்.  “

“வீட்டையும், சொத்தையும் என் பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு, ஊரை விட்டு ஓடிவிடு; இல்லையேல் நீ என்னைக் கொன்றது போல், நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று அந்தச் சாக்பீஸ் எழுதுகின்றது. மேலும் மட்டில்டாவின் மந்திர சக்தியால் நாலாப் பக்கத்திலிருந்தும் கற்கள் பறந்து வந்து அவர் தலையிலும் உடம்பிலும் மோதித் தாக்குகின்றது. 

நிலைகுலைந்து மயக்கமாகிக் கீழே விழும் அகதா, “தாம் கொன்ற ஹனியின் அப்பா மேக்னஸ் (MAGNUS) ஆவி தான்,தம்மைப் பழிவாங்குகிறது என்று பயந்து போய், ஊரை விட்டு ஓடிவிடுகின்றார்.  வீடும்,சொத்தும் ஹனிக்குத் திரும்பக் கிடைக்கிறது.

மட்டில்டா விருப்பப்படி ஆசிரியை ஹனி, அவளைத் தத்து எடுத்துக் கொள்கிறார்.  இருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைகின்றது.  அதற்குப் பிறகு மட்டில்டாவுக்கு, அந்த மந்திர சக்தியைப் பயன்படுத்த வேண்டிய தேவையே ஏற்படவில்லை.

மட்டில்டாவாக நடித்த சிறுமி மாரா வில்சன் நன்றாக நடித்திருக்கிறார்.  அவள் வீடு திரும்பி, பள்ளியைப் பற்றிச் சொல்ல வரும்போது, அவள் அம்மா காது கொடுத்துக் கேட்காமல், போன் பேசுவதும், பெற்றோர் வாசிப்பின் அருமை அறியாது, தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்துவதும் தவறு என்று பெரியவர்களுக்கான செய்தியும் இப்படத்தில் உள்ளது.

நூலகத்தைப் பயன்படுத்திப் புத்தகங்கள் வாசிப்பதால், மட்டில்டாவின் அறிவு விசாலமாகின்றது என்ற செய்தியும், குழந்தைகளுக்கு இதில் கிடைக்கின்றது.  கடுமையான தண்டனை கொடுக்கும் தலைமை ஆசிரியைக்கு ஏற்படும் பரிதாப முடிவும், சுபமான முடிவும் படம் பார்க்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகள் மிக விரும்பி பார்க்கக்கூடிய படம்.

(பிப்ரவரி 2022 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது)

Share this: