டிராகன் ஆக வேண்டுமா?

Dragonbk_pic

இதில் வித்தியாசமான கற்பனையுடன் கூடிய 12 அறிவியல் புனைகதைகள் உள்ளன. இவை ‘கோகுலம்’ இதழில் வெளிவந்தவை. இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைக்காரணம், விநோதமான கற்பனை தானே?

‘ஒரு பூ ஒரு பூமி’ என்ற முதல் கதையில், இயற்கை மனிதர்களுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யத் துவங்கிவிட்டது. அதனால் பூமியில் மனிதர்கள் வாழ முடியாமல்,செவ்வாய் கிரகத்துக்குக் கிளம்புகிறார்கள். டலிலா என்ற சிறுமி, ஒரு ரோஜாச்செடியின் மீது வைத்த அன்பை, இக்கதை பேசுகின்றது.

‘இயந்திர மனிதர்கள்’ என்ற கதையில், டைம் மெசினைக் கண்டுபிடித்த கார்ல் வெர்னெர் உயிருடன் வருகின்றார். தம் கண்டுபிடிப்பு வேலை செய்யும் விதம் கண்டு, அவருக்கு அதிருப்தி உண்டாகிறது. கடந்த காலத்துக்குப் போய்த் தம் டைம் மெஷினை நிறுத்தி வைக்கப் போவதாகக் கூறுகின்றார்.

‘ஒரு பறவையின் கதை’ 23 ஆம் நூற்றாண்டில் நடக்கின்றது. பல உயிரினங்கள் அழிந்துவிட்டன.  காடுகள் மறைந்துவிட்டன; பல கிரகங்களில் மனிதர் குடியேறிவிட்டனர். ஏராளமான ரோபோக்கள் பெருகிவிட்டன. ரோபோ எது? மனிதன் யார்? என்று வித்தியாசம் தெரியாமல், வானம்பாடி விழிக்கின்றது.

ஒரு கதையில் எழுத்தாளர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம், உயிர் பெற்று உலவுகின்றன. இன்னொரு கதையில் சிறுகதை, பாடல், நாவல் எல்லாம் உரையாடுகின்றன.

‘டிராகன் ஆக வேண்டுமா?’ என்ற கதையில், மிளா எடுத்து வந்த முட்டை உடைந்து டிராகன் வருகின்றது. அவளிடம் பேசுவதோடு, புத்தகங்களும் வாசிக்கின்றது; அதற்கு ஆயிரம் கம்ப்யூட்டருக்குச் சமமான அறிவு இருக்கின்றது. சிறிதளவு நெருப்பை அவளுக்குக் கொடுத்து டிராகன் ஆக்குகிறது. மிளா பள்ளி விழாவில் சிறப்பாக உரையாற்றி கைதட்டல் வாங்குகிறாள்.

‘நான் ரூமி பேசுகிறேன்’ என்ற கதையில், வேறு கிரகத்தில் பச்சை நிற சிறுமி கூண்டுக்குள் இருக்கிறாள். ‘பூமியிலுள்ள அம்மாவிடம் போக வேண்டும்’ என்று டோடூவிடம் சைகையில் பேசுகிறாள். டோடூ தன் அம்மாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறாள்.

விநோதமான கற்பனையும், அறிவியலும் கலந்த இந்தப் புனைகதைகள், வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன. இவை வாசிக்கும் குழந்தைகளின் கற்பனையைத் தூண்டி, படைப்பூக்கத்தை ஊக்குவிக்கத் துணை செய்பவை.  

வகைஅறிவியல் சிறுவர் கதைகள்
ஆசிரியர்மருதன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 9498002424
விலைரூ 50/-
Share this: