கோகோ (Coco) திரைப்படம் (ஆங்கிலம்)

Coco_movie_pic

கோகோ 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பிக்ஸர் ஸ்டூடியோ (Pixar Animation Studios) தயாரித்த வால்ட் டிஸ்னியின் படம். இதன் இயக்குநர்  லீ அன்கிரிச் (Lee Unkrich) ஆவார்.  இது மிகச் சிறப்பான அனிமேஷன் காட்சிகளுக்காக, உலகளவில் பல விருதுகளை வென்றது.

இக்கதை மெக்சிகோவில் நடக்கிறது,  இமல்டா ரெவேரா (Imelda Rivera) என்பவரின் கணவர், ஒரு கிடார் இசைக்கலைஞர்.  இவர்களுடைய மகள் கோகோ.  இசைத்துறையில் வாய்ப்பு தேடிச் செல்லும் இமல்டாவின் கணவர், தம் மகளையும், மனைவியையும் விட்டுவிட்டு, எங்கோ சென்று விடுகின்றார்.  அதிலிருந்து இமல்டாவின் குடும்பம், இசையை அடியோடு வெறுக்கிறது. 

இமல்டா தன் குடும்பத்தைக் காப்பாற்ற, செருப்புத் தயாரிக்கும் தொழிலைத் துவங்குகிறார்,  இவருடைய எள்ளுப் பேரன் (பேரனுக்குப் பேரன்) மிகெல் ரெவேரா (Miguel) Riviera எனும் 12 வயது சிறுவன். இவன் தான் இப்படத்தின் கதாநாயகன். இவன் குடும்பத்துடன் தான், தற்போது கோகோ பாட்டி வசிக்கிறார்.

இளம் வயதில் பாசமான அப்பாவின் திடீர் பிரிவு, கோகோவை  அதிர்ச்சிக்குள்ளாக்கி, நிலைகுலைய வைத்து விடுகின்றது,.  தற்போது மிகவும் வயதான நிலையில் சுயநினைவின்றி, எப்போதும் நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

மிகெலுக்குச் சிறு வயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருக்கின்றது.  ஆனால் இசையைக் கற்றுக்கொள்ள அவனுக்குத் தடை விதிக்கப் படுகின்றது.  அவன் மூதாதையர் செய்த தவறால், குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பும், இன்னல்களும், மிகெல் வாழ்வில் மீண்டும் நிகழாதிருக்க, அவன் இசை ஆர்வத்துக்குக் குடும்பத்தினர் முட்டுக்க்கட்டை போடுகின்றனர்.

பிரபல பாடலாசிரியரும், பாடகருமான எர்னெஸ்டோ (Ernesto de la Cruz) போல, தானும் ஒரு இசை மேதையாக வர வேண்டும் என மிகெல் விரும்புகின்றான். ஒரு நாள் அவன் வீட்டில் இருந்த ஒரு கண்ணாடிச்சட்டம் போட்ட புகைப்படத்தைத் தவறுதலாக உடைத்து விடுகிறான். 

அப்படத்தில் கோகோ பாட்டி குழந்தையாக, அம்மா இமல்டா மடியில் இருக்கிறார். , அவர் பக்கத்தில் நின்றவரின் முகம் மட்டும் கிழிக்கப் பட்டிருக்கின்றது.  அவர் கையில் எர்னெஸ்டோவின் புகழ் பெற்ற கிடார் இருக்கிறது.  எனவே கிழிக்கப் பட்டிருக்கும் முகம் எர்னெஸ்டோவினுடையது என்றும், அவர் தாம் தன்னுடைய மூதாதையர்  என்றும் முடிவுக்கு வருகிறான் மிகெல்.

நீத்தார் நினைவு தினத்தில், அவன் ஊரில் நடக்கும் இசைப்போட்டியில் பங்கேற்க எர்னெஸ்டோ சமாதியில் இருந்து கிடாரைத் திருடுகிறான் மிகெல்.  அவனைச் சிலர் துரத்தி வரும் போது, அங்கிருந்து தப்பி ஒரு பாலத்தைத் தாண்டி ஓடுகிறான். திடீரென்று இறந்தவரின் உலகத்துக்குள் நுழைந்து விடுகிறான். அவனுடன் அவன் நாயும் வருகிறது.அங்கு நிறைய எலும்புக் கூடுகள் நடமாடுகின்றன.  அங்கு ஹெக்டர் என்ற எலும்புக் கூட்டைச் சந்திக்கிறான்,  அது முன்னர் எர்னெஸ்டோவிடம் கிடார் வாசித்தவரின் எலும்புக்கூடு.  எர்னெஸ்டோவைச் சந்திக்க அவனுக்கு உதவுவதாகக் கூறி, மிகெல்லை ஹெக்டர் அழைத்துப் போகிறார்.

எர்னெஸ்டோவின் எலும்புக்கூடும், ஹெக்டரின் எலும்புக்கூடும் சந்தித்துப்  பேசும் போது தான், ஹெக்டரை விஷம் வைத்துக் கொன்றது எர்னெஸ்டோ என்ற உண்மை, மிகெல்லுக்குத் தெரிய வருகிறது.  அவர் ஹெக்டரின் பாடல்களைத் திருடிய விபரத்தையும், மிகெல் தெரிந்து கொள்கிறான்.   

மிகெல்லுக்கும், ஹெக்டருக்கும் உண்மை தெரிந்துவிட்டபடியால், எர்னெஸ்டோ  இருவரையும் ஒரு ஆழமான குழிக்குள் தள்ளி விடுகிறார்..  இருவரையும் பறக்கும் டிராகன் காப்பாற்றுகிறது.  சூரியன் உதிப்பதற்குள்  மிகெல் பூமிக்குத் திரும்பி, கோகோ பாட்டிக்கு அவர் அப்பா பற்றிய நினைவை மீட்க வேண்டும்; இல்லையேல் ஹெக்டர் இறந்தவர் உலகத்திலிருந்தும் முழுவதுமாக மறைந்து விடுவார். 

மேலும் மூத்தோர் நினைவு தினம் ஒரு நாள் மட்டுமே என்பதால், அடுத்த நாள் சூரிய உதயத்துக்கு முன்பு மிகெல் பூமிக்குத் திரும்பிவிட வேண்டும்.  இல்லையேல் அவன் இறந்தவர் உலகத்திலேயே தங்கிவிட நேரும்.

மிகெல் கோகோ பாட்டியிடம் ஓடி வந்து, அவர் குழந்தையாயிருந்த போது ஹெக்டர் பாடிய பாடலைப் பாடுகிறான்.  மெல்ல மெல்ல அவருக்கு அவர் அப்பாவின் நினைவு திரும்புகிறது. அவரும் மிகெல்லுடன் சேர்ந்து அப்பாடலைப் புன்முறுவலுடன் முணுமுணுக்கிறார். 

கோகோ மேசை டிராயரைத் திறந்து, ஒரு கிழிந்த பேப்பர் துண்டை எடுத்து பேரனிடம் கொடுக்கிறார்.  அதில் ஹெக்டரின் முகமிருக்கிறது.,  ஏற்கெனவே மிகெல் வைத்திருந்த புகைப்படத்தின் கிழிந்த பகுதி தான் அது.  அந்தக் கிடாரைப் பிடித்திருந்த கைகள் ஹெக்டருடையவை என்றும், அவர் தாம் தன்னுடைய மூதாதையர் என்றும் சிறுவன் தெரிந்து கொள்கிறான். 

கோகோவிற்கு அவர் அப்பா எழுதிய கடிதங்களை வைத்து, அப்பாடல்களை எழுதியவர் ஹெக்டர் தான் என்றும், உண்மையான புகழுக்கு உரியவர் அவர் தாம் என்றும் மிகெல் உலகத்துக்குத் தெரியப்படுத்துகிறான்.  இசையைக் கற்றுக் கொள்ள குடும்பத்தில் மிகெல்லுக்கு இருந்த தடை நீங்குகிறது.

படம் முழுக்க வரும் வண்ணமயமான அனிமேஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிப்பவை. அதிலும் பல வண்ணங்களில் விளக்கொளிகள் நிறைந்த இறந்தோரின் உலகத்தைக் காட்டும் அனிமேஷன் காட்சிகள், சிறுவர்களைக் கவரும் விதத்தில் மிக அழகாகவும், பிரம்மாண்டமாகவும் எடுக்கப் பட்டுள்ளன.  

இப்படத்தில் வரும் நீத்தார் நினைவு தினக் காட்சிகள் மெக்சிகோ கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை.  இக்கலாச்சாரத்தில் இறந்து போன உறவினர்களின் நினைவாக அனுசரிக்கும் நீத்தார் நினைவு நாள் மிகவும் முக்கியமானது..  இப்படத்தில் ஹெக்டர் தம் மகள் கோகோவிடம் பாடும், ‘என்னை நினைவில் கொள்’ (.”Remember Me”) என்பது, மிகவும் பிரபலமான பாடல். நெகிழ்ச்சியான பாடலும் கூட.

நம் ஒவ்வொருவருக்கும் குடும்பம் என்பது மிக முக்கியமானது; நமக்கு ஏதாவது துன்பம் நேரும் சமயத்தில், குடும்பம் நம்மைக் காப்பாற்றும்; மரணம் என்பது வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று; நாம் அன்பு செலுத்தும்  உறவுகள் உடலால் அழிந்தாலும், நம் நினைவில் அவர்கள் வாழும் வரை அவர்களுக்கு அழிவில்லை என்ற கருத்துகளைக் குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

முன்னோர் செய்த தவறுக்காகக் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே இருக்கக் கூடிய ஆர்வத்தையும், கனவையும் சிதைப்பது தவறு என்ற பெரியோர்க்கான செய்தியும் இதில் உள்ளது.  

குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான அனிமேஷன் படம்.

(நவம்பர் 2021 பொம்மி சிறுவர் இதழில் எழுதியது)

Share this: