கடந்த ஜூலை 2021 மாதம் இந்திய பென்குயின் பதிப்பகம் (Penguin Random House, India) கனடா நாட்டைச் சேர்ந்த கிரைசிஸ் நைட்(Chryseis Knight) என்ற மூன்று வயது சிறுமி எழுதிய ‘த கிரேட் பிக் லயன்’ (‘The Great Big Lion’) என்ற நூலை இந்தியாவில் வெளியிட்டது. வெளிநாட்டில் ஏற்கெனவே இது வெளியிடப்பட்டு விட்டாலும், இந்தியாவில் இப்போது தான் வெளியாகியிருக்கின்றது.
இப்போது ஏழு வயதாகும் சிறுமி கிரைசிஸ் நைட், மூன்று வயதில் நோட்டு ஒன்றில் இக்கதையை எழுதி முடித்துவிட்டாராம். இதில் உள்ள ஓவியங்கள் எல்லாமே, இவர் கைப்பட வரைந்தவை! இந்நூலை வெளியிட்டதன் மூலம், உலகின் மிக இளவயது எழுத்தாளர் பட்டியலில் இவரும் இடம்பிடித்துச் சாதனை படைத்திருக்கிறார்!
காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருக்கின்றது. டாம், லில்லி என்ற குழந்தைகள் இருவருக்கும், அந்தச் சிங்கத்தை மிகவும் பிடித்திருக்கின்றது. அது கர்ஜிப்பதை, மிகவும் விரும்பி ரசிக்கின்றனர். ஒரு நாள் திடீரென்று அந்தச் சிங்கம் காணாமல் போய்விடுகின்றது. அந்தச் சிங்கம் எங்கே? அது தான் மீதிக் கதை. குழந்தைகளுக்கும், சிங்கத்துமான நட்பு, இயற்கை & காட்டுயிர் பாதுகாப்பு ஆகியவை இக்கதையின் வழியாகச் சொல்லப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு மூன்று வயதில் சொந்தமாக ஒரு வாக்கியத்தை எழுதுவதே கஷ்டம்! எப்படி இவரால் இந்த இளம்வயதில், முழுக் கதையெழுதிச் சாதிக்க முடிந்தது?
சந்தேகமேயில்லாமல், வாசிப்பு தான். இவர் ஒரு வயதிலேயே வாசிக்கத் துவங்கிவிட்டாராம்! ஒரு வயதில் வாசிக்கத் துவங்கி, மூன்று வயதில் முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டார்!
உங்கள் குழந்தையும் இவர் போல் எழுத்தாளர் ஆக வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- குழந்தையிலேயே கதைகளை வாசிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்யுங்கள். அது தான் குழந்தையின் கற்பனையைத் தூண்டக் கூடிய அற்புத மந்திரச் சக்தி! கதை எழுத மட்டுமின்றிப் புதிய புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனையே ஆதாரம்!
- முடிந்த போதெல்லாம், அவர்களுக்குக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவர்களுடன் அமர்ந்து, குரலில் ஏற்ற இறக்கங்களோடு, கதைப் புத்தகங்களை வாசித்துக் காட்டுங்கள்.
- புத்தகக்காட்சிக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விரும்புகிற கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.
- அவர்கள் வயதுக்கேற்ற கதைப் புத்தகங்களைத் தேர்வு செய்வது முக்கியம். (ஐந்து வயது குழந்தைக்குப் பொன்னியின் செல்வன் வேண்டாம்!)
- .வாசிப்பின் துவக்க நிலையில், வண்ண ஓவியங்கள் அதிகமாகவும், எழுத்து குறைவாகவும் உள்ள நூல்களை அறிமுகப்படுத்துங்கள். வண்ண ஓவியங்கள் தாம், குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துக் கதையில் நாட்டம் ஏற்படுத்தக் கூடியவை.
- கதை சொல்லும் போது இடையில் நிறுத்தி, அதன் முடிவு எப்படியிருக்கும் என்று குழந்தையை யூகிக்கச் சொல்லலாம். அவர்கள் சொல்கின்ற முடிவு, வாசிக்கிற கதை முடிவை விடச் சிறந்ததாய் இருக்கலாம். அதை அடிப்படையாய் வைத்துப் புதுக்கதை எழுதச் சொல்லலாம்.
- படிக்க, எழுதத் தெரியாதென்றால், குழந்தையைச் சொல்லச் சொல்லி, தேதி போட்டு நீங்கள் நோட்டில் எழுதிப் பாதுகாத்து வைக்கலாம். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல், அப்படியே எழுதி வைப்பது நல்லது..
- அவர்கள் கதையில் வரும் கதாபாத்திரம் யார் என்று கேளுங்கள். அது யானை, பூனை, தேவதை, மந்திரவாதி என எதுவாகவும் இருக்கலாம்.
- கதையில் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு இருக்க வேண்டும் என்பதை ஏற்கெனவே அவர்கள் படித்த கதையை எடுத்துக் காட்டாகக் கூறி, எழுத ஊக்கம் கொடுங்கள். .
- முதலில் கதாபாத்திரம் யார் என்ற அறிமுகம்; நடுவில் அந்தப் பாத்திரத்துக்கு ஏதாவது ஒரு சிக்கலோ, துன்பமோ, சவாலோ வந்தால் சுவாரசியம் கூடும்.
- முடிவில் அந்தப் பிரச்சினையைக் கதாபாத்திரம் எப்படிக் கையாண்டது? அதிலிருந்து அது என்ன தெரிந்து கொண்டது? என்பதாகக் கதை முடிவு இருக்கலாம்.
- படங்கள் வரையக் கூடிய குழந்தையாயிருந்தால், படத்தைப் பற்றிக் கதை சொல்லச் சொல்லலாம்.
- அவர்கள் எழுதி முடிக்கும் வரை, இடையில் குறுக்கீடு செய்யாமல், எழுதி முடித்த பிறகு, உங்கள் ஆலோசனைகளைக் கூறலாம்.
அவர்கள் எழுதும் முதல் கதை, தொடக்கம், முடிவு,கதையம்சம் என எதுவுமின்றி, மிகவும் சாதாரணமானதாக இருந்தாலும், பாராட்டி மேலும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். துவக்கத்தில் அதிகமான எழுத்துப் பிழைகளும், வாக்கியப் பிழைகளும் இருக்கும். அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.
பாராட்டும், ஊக்கமும் குழந்தையைத் தொடர்ந்து எழுதத் தூண்டும். தொடர்ந்து எழுதினால், எழுத்து வசப்படும்.
- எழுதுவதால் குழந்தையின் கற்பனைத் திறனும்,படைப்பூக்கத்திறனும் ஊக்குவிக்கப் படுகின்றன.
- தேடல் அதிகமாகிச் சிந்தனைத் திறன் வளர்கிறது.
- புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதால், மொழியறிவு மேம்படுகின்றது.
- தங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் கோர்வையாக வெளிப்படுத்தக் கூடிய திறனும், எழுதக் கூடிய, திறனும் வளர்கின்றன. இது பள்ளித் தேர்வுகளிலும், அதிக மதிப்பெண் எடுக்க உதவும்.
நாளைக்கு உங்கள் குழந்தை, உலகம் போற்றும் எழுத்தாளராகலாம்! அதற்கு முதல் வேலையாக வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்!
“Read a thousand books and your words will flow like a river” – LISA SEE