The Room on the Roof

the room on the roof book cover

ஆசிரியர் ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய முதல் நாவல் இது.  அவருக்கு 17 வயதான போது எழுதியது என்பதால், அந்தப் பதின்ம வயதுக்குரிய சிறுவனின் உணர்வுகளையும், எண்ணப்போக்கையும் உயிரோட்டத்துடன்  எழுத்தில் வடித்திருக்கிறார் ஆசிரியர். இந்நாவலுக்கு இங்கிலாந்தின் பெருமைமிகு ‘John Llewellyn Rys’ நினைவுப் பரிசு கிடைத்தது.

இந்நாவலில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள், ஆசிரியர் தம் வாழ்வில் சந்தித்த உண்மையான நபர்களே; பெரும்பான்மையான நிகழ்வுகளும் உண்மையாக நடந்தவை என்பதால் ரஸ்டியின் அனுபவங்களையும், பலவித உணர்வுகளையும் வாசிக்கும்போது, நெகிழ்ச்சியாக இருக்கின்றது.        

பெற்றோரை இழந்து ஹாரிசன் எனும் கார்டியன் பாதுகாப்பில் வளரும் ரஸ்டி என்ற 17 வயது பதின்ம வயது சிறுவனின் கதை இது. பிரிட்டானிய வம்சாவளியில் பிறந்த ரஸ்டியை, இந்திய கடைத்தெருவுக்குப் போகக்கூடாது; இந்தியர்களுடன் கலந்து பழகக்கூடாது எனத் தடை விதிக்கிறார் ஹாரிசன்.  மீறினால் பிரம்படி கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த, அன்பில்லாத வீட்டுச் சூழ்நிலையில் வளரும் ரஸ்டிக்கு, வீடு என்றாலே வெறுப்பாக இருக்கின்றது;   நண்பர்களும் இல்லாமல், தனிமை அவனை வாட்டுகிறது.  

ரஸ்டி ஒரு நாள் நடந்து வர வெளியில் செல்லும் போது, சோமி என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகின்றது.  அவன் மூலமாக ரன்பீர் என்பவனின் நட்பும் கிடைக்கின்றது.   ரன்பீருடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியதற்காக, ரஸ்டிக்குப் பிரம்படி கிடைக்கின்றது.  ஆனால் இம்முறை ரஸ்டி பயப்படவில்லை.  வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துவிடுகின்றான்.  நண்பன் சோமியின் உதவியால், ஒரு சிறுவனுக்கு ஆங்கில டியூஷன் நடத்தும் வேலை கிடைக்கிறது.  அதே வீட்டில் மாடியில் ரஸ்டிக்குத் தங்கிக் கொள்ள ஒரு சின்ன அறையும் கிடைக்கின்றது.   

அதற்குப் பிறகு, அந்த அறை தான் அவனது உலகம்.  அதன் ஜன்னல் வழியாக அங்கிருக்கும் ஆலமரத்தைப் பார்க்கிறான்.  அணிலோடு உரையாடுகின்றான். மைனாவைப் பார்க்கின்றான்.  மனச்சோர்வுடனும், குழப்பத்துடனும் இருந்த ரஸ்டிக்கு, வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்படுகின்றது.  நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவழிக்கிறான். அதன் பிறகு ரஸ்டி வாழ்வில் ஏற்படுகின்ற திருப்பங்களும், அனுபவங்களும், அவனது உணர்வுகளும், தாம் கதை!  

எளிய ஆங்கில நடையில், அருமையான இயற்கை வர்ணனைகள் நிறைந்து, அன்பு, நட்பு ஆகியவற்றின் மகத்துவத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல்.

ஆங்கிலம் தெரிந்த பதின்ம வயதினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

வகை(ஆங்கில) சிறுவர் நாவல்
ஆசிரியர்(Ruskin Bond) ரஸ்கின் பாண்ட்
வெளியீடு(Puffin Books) பென்குயின் புக்ஸ் இந்தியா பி லிமிடெட், நியூ டெல்லி.
விலை₹ 250/-
The Room on the Roof
Share this: