ஒற்றைச் சிறகு ஓவியா

ottrai siragu oviya book cover
வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 110/-

நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக ஒத்திகை பார்க்கிறார்கள்.  திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்கின்றது.  ஓவியாவுக்கு ஒற்றை சிறகு முளைக்கிறது!  மற்றவர்களின் கண்கள் வழியாக அவர்கள் கனவுக்குள் போய், இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடைக்கின்றது.  அந்த அதிசயத்தையே கலைநிகழ்ச்சியாக நடத்தி, கலெக்டரை அசத்த நினைக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் நினைத்தது போல் செய்ய  முடியாமல் முக்கியமான பொருள் திருட்டு போகின்றது.  அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சில புதிர்களை விடுவித்தாக வேண்டும். அவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றதா? எனத் தெரிந்து கொள்ள, இந்நூலை வாசியுங்கள்.

அவர்களுடைய தேடலின் வழியாக, தமிழகத்தின் முக்கியமான அரசியல் பிரச்சினையையும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் பியூன் தாத்தா கதிரேசன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.  செயற்கை உரங்களைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கியதன் விளைவாக உழவரின் நண்பனான மண்புழு இல்லாமல் போய்விட்டது; குடிதண்ணீர் நிறம் மாறிக் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் போனதற்கு யார் காரணம்?  நிலத்தடி நீர் வெகு ஆழத்துக்கு ஏன் போனது? கார்பரேட் கம்பெனிகள் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிராக, மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதையெல்லாம், இந்த பேண்டசி நாவல் வழியாக வாசிக்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியிருப்பதற்குப் பாராட்டுகள்!

2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசை வென்றது, குறிப்பிடத்தக்கது. இயற்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஃபேண்டசி நாவல்.

Share this: