மலைப்பூ

malaipoo book cover

மாஞ்சாலை மலைக்கிராமத்தில் வசிக்கும் லட்சுமிக்குத் தினந்தினம் பள்ளிக்குப் போய் வருவதே, பெரிய பாடு தான்.  தொடக்கப் பள்ளி மட்டுமே, மலையில் உள்ளதால், ஆறாம் வகுப்பு முதல், பேருந்து பிடித்துச் சமவெளிக்கு இறங்க வேண்டும். அங்கிருந்து தோழியின் உதவியோடு சைக்கிளில் பயணம் செய்து, பள்ளிக்குச் செல்கிறாள். 

ஏழாம் வகுப்பில் படிக்கும் லட்சுமிக்குத் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிடைக்கின்றது.  அது மாணவர்களுக்கிடையே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விழா..  “அறிவியல் என்பது வானத்தில் இருந்து குதிப்பதல்ல; நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து துவங்க வேண்டும்” என்று அவளுடைய ஆசிரியை முத்துக்குமாரி, அவளை வழிநடத்துகிறார்.,

ஆங்கிலம் என்றாலே பயந்து சாகும் லட்சுமிக்கு, ஆசிரியை தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.  நாவலில் பனையைப் பற்றி வரும் குறிப்புகள், மாணவர்க்கு, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.  

இந்த அறிவியல் தேசிய விழா, அவளுக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கின்றது.  முதன்முதலாய்ச் சமவெளியில் தங்குகின்றாள்.  இது வரை பயன்படுத்தியிராத கழிப்பறைகளைப் பார்க்கிறாள்.  மாநிலத் தலைநகர் சென்னையைப் பார்க்கிறாள். பல அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்க்கிறாள்.  தொடர் வண்டியில் பயணம் செய்கிறாள்.  கடல் போல் ஆர்ப்பரிக்கும் கங்கையைப் பார்க்கிறாள். பல மாநிலங்களிலிருந்து விழாவில் பங்கேற்கும் தோழர்களின், நட்புக்குப் பாத்திரமாகிறாள். .  

பட்டிக்காட்டான் பட்டணத்தை முதன்முதலாய்ப் பார்க்கும்போது என்னென்ன உணர்வுகள் ஏற்படுமோ, அதே பிரமிப்பு இவளுக்கும் ஏற்படுகின்றது.  அந்தக் காட்சிகளை ஒரு மலைக்கிராமத்துச் சிறுமியின் கோணத்தில், ஆசிரியர் அழகாகப் படமாக்கியிருக்கிறார்.  நாமும் அவளுடன் காசிக்குச் சென்று வந்த, உணர்வு தோன்றுகிறது.

மேடையில் பிரதம மந்திரியைப் பார்த்து, அவள் இரண்டு கேள்விகளைக் கேட்கிறாள்.  அரங்கமே சில நிமிடங்கள், அதிர்ந்து, பயங்கர அமைதி நிலவுகின்றது.  பிறகு ஒட்டுமொத்த அரங்கமும், எழுந்து நின்று அவளைக் கைதட்டிப் பாராட்டுகின்றது/  அப்படியென்ன, அவள் கேட்டாள்?  தெரிந்து கொள்ள, அவசியம் கதையை வாசியுங்கள். 

விடுதலை பெற்று, இத்தனை ஆண்டுகள் ஆகியும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கூட பெறாத, நம் பள்ளிக்கூடங்களின் அவல நிலையை, அவளின் கேள்விகள், வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன..  எனவே அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமின்றி, பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும்,  ஏன்? எதற்கு? என்று ஆளும் அதிகார வர்க்கத்தினரிடம், நம் இளைய சமுதாயம் துணிச்சலுடன் கேள்வி கேட்பது அவசியம் என்ற் புரிதலை, வாசிப்போருக்கு ஏற்படுத்துகின்றது நாவல்.  .கேளுங்கள்! தரப்படும்!  

கதை புனைவென்றாலும், உண்மையான ஆளுமைகள் பலரை, ஆசிரியர் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  

குழந்தைகளுக்கு அறிவியலிலும், இயற்கையிலும் நாட்டம் ஏற்படுத்தும், சுவாரசியமான இளையோர் நாவல்.

வகைசிறுவர் நாவல்
ஆசிரியர்‘விழியன்’  (இயற்பெயர் உமாநாத் செல்வன்)
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 95/-
மலைப்பூ
Share this: