இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள். வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வரலாற்றைப் படித்துப் பார்த்தால், பெரும்பான்மையான அரசர்களும், அதிகாரத்தில் இருந்தவர்களும், நாட்டு மக்கள் நலனைப் புறக்கணித்து, சர்வாதிகாரிகளாகவும், அநியாயவரி வசூலித்து, அந்தப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, இன்பத்தில் திளைப்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்.
இக்கதைகளில் வரும் அரசர்கள் எல்லாருமே கோமாளிகளும், தூங்குமூஞ்சிகளும் ஆவர். அவர்களின் முட்டாள்தனத்தையும், உழைக்காமல் உண்டு வாழும் சோம்பேறித்தனத்தையும், ஆசிரியர் சகட்டுமேனிக்குப் பகடி செய்திருப்பதால், வாசிப்பதற்கு மிகுந்த நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியும் இருக்கின்றன.
குழந்தைகள் மீது, சிறு வயது முதலே பெற்றோர், ஆசிரியர், வயதில் மூத்தவர்கள் என எல்லோருமே, அதிகாரம் செலுத்துகின்றனர். அத்தகைய அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம்; பகடி செய்யலாம் என்ற விழிப்புணர்வை, இக்கதைகள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடியவை.
முதல் கதையான ‘புதிய அகராதி’யில் வரும் மண்டியா தேசத்து ராஜா சரியான மண்டு. எந்நேரமும் வயிறு புடைக்கத் தின்பதும், தூங்குவதும் தான், அவருடைய வேலைகள். மொழி அகராதியை மாற்றிவிட்டு, அவர் படுகிற அவஸ்தை, மிகவும் ரசிக்கும்படி இருக்கின்றது. இரண்டாவது கதையான ‘காற்றில் கரைந்த பூதம்’ என்பதில் எந்நேரமும் சாப்பிடுவதும், தூங்குவதுமாயிருந்த ராஜாவின் உடல் முழுக்க, கொழுப்புக் கட்டிகள் உண்டாகிவிட்டன. அதற்கு அரண்மனை வைத்தியர் சொன்ன சிகிச்சை என்ன என்று கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
புதிய வேளாண் கொள்கை என்ற பெயரில், விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்குக் குழி தோண்டிவிட்டு பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாற்றாகப் பன்னாட்டுக் கம்பெனி பொருட்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இக்கால அரசியலை, ‘ஜங்க் புட் தேசம்’ என்ற கதை, கிண்டல் செய்கிறது.
இந்நூலின் தலைப்பான ‘மாயக்கண்ணாடி’ கதையிலும், அரசர் எந்நேரமும் தின்று, தின்று குண்டாகிவிடுகிறார். ஒருநாள் தற்செயலாகக் கண்ணாடியில் தம்மைப் பார்த்த போது, பயந்து அலறுகிறார். அது தம் பிம்பம் தான் என்று தெரிந்த போது, கண்ணாடியை உடைத்து நொறுக்குவதோடு, அந்த நாட்டில் வேறு கண்ணாடியே இருக்கக் கூடாது என்றும் ஆணையிடுகிறார். அதனால் ஆண்கள் முகச்சவரம் செய்யமுடியாமலும், முடிவெட்ட முடியாமலும் காட்டுமிராண்டிகளைப் போலத் திரிகின்றனர். பெண்கள் ஒப்பனை செய்து கொள்ள முடியவில்லை. நாடு முழுக்க பெரும் குழப்பம் விளைவித்த இப்பிரச்சினை எப்படித் தீர்ந்தது? என்று தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள். மிகவும் சுவாரசியமான கதை. நூலின் முன்பக்க அட்டை நடுவில் கண்ணாடி பதித்திருக்கும் வடிவமைப்பு மிகவும் சிறப்பு.
.அரசியல் நையாண்டியில், இக்கால அரசியலும் கலந்திருப்பதால், சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் வாசித்து ரசிக்கக் கூடிய கதைகள்.
வகை | சிறுவர் கதைகள் |
ஆசிரியர் | உதயசங்கர் |
வெளியீடு | நூல்வனம், சென்னை. 9176549991 |
விலை | ₹ 70/- |