‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ வென்ற நூல் வரிசை-4

Pavalam_parisu_pic

பவளம் தந்த பரிசு

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமியின் பாலபுரஸ்கார் விருது எழுத்தாளர் ரேவதி எழுதிய இந்நூலுக்குக் கிடைத்தது. ‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன், சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “கொடி காட்ட வந்தவன்” என்ற நாவல் அந்நாளில் குழந்தைகளிடையே மிகவும் பிரபலம். இது ஒன்பது மொழிகளில் பெயர்க்கப்பட்டது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் சீடர் வரிசையில், சிறப்பான இடத்தைப் பெற்ற இவர், சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். இவர் ‘கோகுலம்’ சிறுவர் இதழின் ஆசிரியராகப் பதினொரு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அழ.வள்ளியப்பா துவங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்துச் அதனை நீண்ட காலம் சிறப்பாக வழிநடத்திய பெருமை இவருக்குண்டு.  ‘பூந்தளிர்’ சிறுவர் இதழில் வாண்டு மாமாவுக்கு உதவியாசிரியராக இருந்தார். 35 க்கும் மேற்பட்ட மத்திய, மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதில் ஐந்து சிறுவர் கதைகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் ஒரு பெண்ணின் பெயருடன் ‘பரிசு’ என்று முடிகின்றது.

முதலாவது இந்நூலின் தலைப்பானபவளம் தந்த பரிசு’ என்ற கதை.

மேகநாட்டின் மன்னர் சந்திரபூபதி காட்டுவளத்தைக் காப்பதற்காக, முன் அனுமதியின்றி மரத்தை யாரும் வெட்டக் கூடாது என்ற சட்டமியற்றுகிறார். அரண்மனை தலைமை வைத்தியரான தேவதத்தர், இச்சட்டத்தை மீறி, ஒரு மரத்தை வெட்டி விடுகிறார். முன்பு ஒரு முறை குழந்தைகளின் பார்வையைப் பறிக்கக் கூடிய பயங்கரமான கண்நோய் பரவிய போது, சிறப்பான சேவை செய்து குணப்படுத்தியவர் அவரே. ஆனாலும் சலுகை ஏதும் காட்டாமல், மன்னர் அவருக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கிறார்.  

இதனால் அவர் கோபித்துக் கோண்டு, மேக நாட்டை விட்டு வெளியேறிவிடுகின்றார். மீண்டும் அந்தக் கண்நோய் பரவிக் குழந்தைகளைப் பாதிக்கின்றது. அதற்கான வைத்தியம் தேவதத்தருக்கு மட்டுமே தெரியும் என்பதால், மன்னரும், அமைச்சரும் அவரைத் தேடிச் சென்று, வைத்தியம் பார்க்கக் கூப்பிடுகின்றனர். எவ்வளவோ கெஞ்சியும் அவர் வர மறுத்துவிடுகின்றார்.

தேவதத்தரின் பேத்தியான சிறுமி பவளம், தாத்தாவுக்கு அவருடைய தவறைப் புரிய வைத்துக் குழந்தைகளுக்கு வைத்தியம் செய்ய வைக்கின்றாள். கண் பாதிப்புற்ற குழந்தைகளுக்குப் பவளம் தந்த பரிசு இது. இத்தொகுப்பில் இதுவே மிகச் சிறந்த கதை.

நாட்டின் சட்டதிட்டங்கள் மக்களின் நலனுக்காகவே உள்ளன; சட்டத்துக்கு முன் யாவரும் சமம்; சட்டத்தை மதித்து நடப்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை, இக்கதை வலியுறுத்துகிறது. மேலும் காட்டின் வளமே நாட்டின் வளம்; காடழிந்தால் நாடழியும் என்ற இக்காலத்துக்கு மிகவும் தேவையான கருத்தையும், சிறுவர் மனதில் பதிய வைக்கிறது.

இரண்டாவது கதை ‘கண்மணி தந்த பரிசு’.

பொன்மணியும், கண்மணியும் அக்கா தங்கை. இருவரும் குணத்தில் நேர் எதிரானவர்கள். பொன்மணி செல்வசெருக்கோடு, இரக்கமில்லாமல் நடந்து கொள்வாள். கண்மணியோ கனிவும் இரக்கமும் கொண்டவள். துன்பப்படுவோர்க்கு உதவுவதே, அவள் வாழ்வின் இலட்சியம்.  

கண்மணி ஒரு நாள் அடிபட்டு மயக்கமாகிக் கிடந்த குரங்கு ஒன்றைத் தூக்கிவந்து சிகிச்சையளிக்கிறாள். அது நன்கு குணமானபிறகு, அவளுக்கு ஒரு மந்திர மண்குடுவையைத் தருகின்றது. அதில் நீர் நிரப்பிக் குடித்தால் எப்படிப்பட்ட நோயும் குணமாகும் என்று சொல்லிச் செல்கின்றது.

அவள் அந்தக் குடுவை நீர் மூலம், பலருடைய நோயைக் குணப்படுத்துகிறாள். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்த புவனகிரி மன்னரை, எழுந்து நடக்கவைக்கிறாள். சிங்கநாட்டு மன்னர் வீரப்பதேவரின் முடக்கு நோய்க்கும் சிகிச்சையளித்துக் குணமாக்குகிறாள். மேலும் தன் முன்யோசனையால் புவனகிரிக்கும் சிங்கநாட்டுக்கும் இருந்த பகைமையை நீக்கி, இரு மன்னர்களுக்கிடையில் பழைய நட்பு மலரச் செய்கிறாள். ‘கண்மணி இந்த நாட்டின் கண்மணி!’ என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

மூன்றாவது கதை ‘அம்பிகை தந்த பரிசு’.

விஜயபுரி மன்னர் விக்ரமன், நாட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாத கொடுங்கோலர். எந்நாளும் நிரம்பாத அந்நாட்டு அரசின் 8வது பிரும்மாண்ட பெட்டகத்தை நிரப்பி, பணக்கார அரசர் வரிசையில் தாம் முதலாவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால் மக்கள் பயன்படுத்தும் கிணற்று நீருக்கும், ஆற்று நீருக்கும் வரி விதிக்கிறார்.

ஒரு நாள் முனிவர் ஆற்றில் இறங்கிக் குளிக்கிறார். வரியோடு,அபராதமும் அவர் கட்ட வேண்டும் என்கிறார் அரசர். “ஆறு என்பது இயற்கையன்னையின் கொடை. அதற்கு வரி கட்ட முடியாது” என்கிறார் முனிவர். வாக்குவாதம் முற்றிக் கடைசியில் கோபமடைந்த முனிவர் ஒரு லட்சம் பொன் கொடுத்துவிட்டு, ஆற்றைத் தம் கமண்டலத்துக்குள் அடக்கிக் கொண்டு சென்று விடுகிறார்.

தன் பெட்டகம் நிரம்பியதையறிந்து மன்னருக்கு மகிழ்ச்சி. ஆனால் ஆறு இல்லாததால், மற்ற நீர்நிலைகளும் வற்றித் தாகத்துக்குக் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கூட இல்லாத நிலையில், மன்னருக்கு அறிவு வருகின்றது. ஆனால் மீண்டும் ஆறு அந்நாட்டில் ஓட மறுக்கின்றது. கடைசியில் அமைச்சரின் மகள் அம்பிகை சொன்ன யோசனையால் வறண்டு கிடந்த ஆறு, மீண்டும் இரு கரைகளையும் தொட்டபடி சுழித்து ஓடி, நாடு வளம் பெறுகின்றது. 

நான்காவது கதை – கமலம் தந்த பரிசு.

இளம் வயதிலேயே அரியணை ஏறிய காரணத்தால், மங்களபுரி மன்னர் சித்திரசேனருக்கு அனுபவமோ அறிவு முதிர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாய் நடந்து கொள்கிறார். இசையில் தேர்ச்சி பெறத் தேவையான குரல்வளமும், பொறுமையும் அவருக்கு இல்லை. தாம் கற்றுப் புகழ் பெற முடியாத இசையை, வேறு யாரும் பாடிப் புகழ்பெறக்கூடாது என்றெண்ணி  பாடுபவர்களுக்கு வரி விதிக்கிறார். அதனால் இசைவாணர்கள் அந்த நாட்டை விட்டே வெளியேறுகிறார்கள்.

கமலம் என்பவள் மிகவும் புத்திசாலிப்பெண். வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்தவள். நாற்று நட்ட போது, அவள் பாடிய பாட்டுக்கு வரி கட்டச் சொல்கிறார் அரசர். அவள் தன் புத்திசாலித்தனத்தால் மன்னருக்குப் புத்தி புகட்டிச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்கிறாள்.

ஐந்தாவது கதை – வாசுகி கேட்ட பரிசு

வைரபுரி எல்லா வளங்களும் நிறைந்த நாடு. செழிப்பான மலைப்பகுதியைத் தன்னகத்தே கொண்டது. மேலும் மன்னன் சிவபாலனும் குடிமக்களின் நலனில் மிகுந்த அக்கறையுள்ள நேர்மையான ஆட்சியாளன். கடந்த சில நாட்களாக யானைகள் காட்டைவிட்டு ஊருக்குள்ளே வந்து தோட்டங்களையும் பயிர் நிலங்களையும் பாழ்படுத்தியமைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விழைகிறான். காட்டிலிருந்த ஏரிக்கரையை உடைத்து நீரை வெளியேற்றிய தளபதியால் ஏரி வறண்டுவிட்டது என்ற உண்மையைக் கண்டுபிடித்து ஏரியின் கரையைப் பலப்படுத்துகிறான். தளபதி என்று சலுகை காட்டாமல், சிறைத்தண்டனை விதிக்கிறான்.

ஒரு மோதிரத்துக்கு இருவர் உரிமை கோரிய வழக்கு அவனிடம் வருகிறது. ஒரு மந்திரக்காரியும், இளம்பெண் ஒருத்தியும் மோதிரம் தன்னுடையது என வாதிடுகின்றனர். வழக்கைத் தீர விசாரித்து மோதிரத்தை வாங்கிச் சிறுமியிடம் கொடுப்பதால், மந்திரக்காரியின் சாபத்துக்கு ஆளாகிறான் சிவபாலன். அவன் முகம் பூதம் போல விகாரமாகிறது. மோதிரம் பெற்ற வாசுகி என்ற பெண்ணின் பார்வையும் மந்திரக்காரியின் சாபத்தால் பறிபோய்விடுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நீதிதேவதையின் அருளால் இருவரும் பழைய நிலைமைக்குத் திரும்புகிறார்கள்.

‘கொடுமையே உருவான மந்திரவாதி தயாபுரி, கடைசியில் உயிருக்குப் போராடுகிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டும்’ என்பதைத் தன் திருமணப் பரிசாகக் கேட்கிறாள் வாசுகி. பகைவரை மன்னிக்கும் குணமும், அன்பும்,கருணையும் கொண்ட மனைவி வாசுகியை, மன்னன் பாராட்டிப் புகழ்கின்றான்.

இக்கதைகளில் இடம் பெற்றுள்ள ஐந்து பெண் கதாபாத்திரங்களுமே  அறிவும்,முன்யோசனை உள்ளவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளமை சிறப்பு. அதிலும் நான்காவது கதையில் வரும் கமலம் என்பவள், வேளாண்மை குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண பெண் என்பது மிகவும் சிறப்பு.

எல்லாக்கதைகளிலும் மன்னர்கள் வருகின்றார்கள்; பெரும்பாலான மன்னர்கள், நாட்டுமக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி பாட்டுக்கும், கிணற்றுக்கும், ஆற்றுக்கும் வரிவிதிக்கும் மூடர்களாகவும், கோமாளிகளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசர்களுக்குப் புத்தி புகட்டுபவர்கள் அனைவருமே பெண்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இக்கதைகளை வாசிக்கும் போது, அதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு, மனம் போனபடி வரிவிதித்து நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கும் இம்மன்னர்களைத் தற்போதைய ஆட்சியாளர்களோடு நம்மால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.

தற்காலத்தில் மனிதன் பேராசை கொண்டு காட்டை அழித்ததன் விளைவாக, ஊருக்குள் நுழைந்து வயல்களைப் பாழ்படுத்தும் யானைகளின் செயலை, நம் ஊடகங்கள் ‘யானைகளின் அட்டகாசம்’ என்று விமர்சனம் செய்வதைப் பார்க்கிறோம்.  ஆனால் ‘வாசுகி கேட்ட பரிசு’ என்ற கதையில், யானைகள் ஊருக்குள் வருவதற்கான காரணத்தை மன்னன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. உணவும் நீரும் தேடியே யானைகள் ஊருக்குள் நுழைகின்றன என்றவுண்மையைச் சிறுவர்கள் மனதில் பதிய வைக்கின்றது இக்கதை.

இப்படைப்பு, கதைகளின் வழியே நல்ல எண்ணங்களையும், சேவை மனப்பான்மையையும், சிறுவர் மனதில் பதிய வைப்பதாக அமைந்துள்ளது சிறப்பு.

Share this: