அலையாத்திக் காடு

Alaiyathi_kadu_pic

இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப் பேசுகின்றது.

மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகப் புயலையும், கரையிலேயே தடுத்து, அதன் வேகத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டவை இக்காடுகள் என்று படிக்க வியப்பு மேலிடுகின்றது! நிலத்தாவரம் மண் துகளின் இடுக்குகள் வழியாக மூச்சு விடும்; நீரில் மூழ்கியுள்ள இத்தாவரத்துக்கு, இது முடியாதென்பதால், இயற்கை காற்றுவேர் என்ற மாற்று  ஏற்பாடு செய்துள்ளதாம்!

‘உயிர்ச்சூழல்’ என்ற கட்டுரையில், அலையாத்திக் காடுகளில் உள்ள உப்பங்கழிகளும், காயல்களும் எப்படிக் கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றுக்குத் தொட்டிலாக விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

மூன்றாவது கட்டுரை, பருவ காற்றுக் காலங்களில் அலையின் செயல்பாடு காரணமாக நடைபெறும் மணல் பெயர்ச்சிப் பற்றியும், அலையாத்திக் காடுகளில் கலக்கப்படும் வேதியுர நஞ்சுகளால் பாதிக்கப்படும் அதன் உயிர்ச்சூழல் பற்றியும், இதன் காரணமாக ஏற்கெனவே அழிந்து அருகி விட்ட பல தாவரங்கள் பற்றியும் பேசுகின்றது.

கடற்பகுதியில் அமைக்கப்படும் அனல்மின்நிலையங்களால் அலையாத்திக் காடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ‘கேரளச் சுற்றுச்சூழலின் தந்தை’ என்றழைக்கப்படும் ‘கண்டல் பொக்கூடன்’ குறித்தும், அடுத்த இரு கட்டுரைகள் விளக்குகின்றன.   

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான சூழலியல் நூல். 

வகைசூழலியல் கட்டுரை
ஆசிரியர்நக்கீரன்
வெளியீடு:காடோடி பதிப்பகம், நன்னிலம். (செல் +91 8072730977).
விலைரூ 30/-
Share this: