இன்று 26/09/2022 பெ.தூரன் பிறந்த நாள்!

writer Thooran photo

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987)

அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:-

நத்தையாரே நத்தையாரே

அத்தை வீடு பயணமோ?

அத்தை வீடு போக முதுகில்

தண்ணீர்க் குடம் வேணுமோ?

அத்தையார்க்கு நீர் சுமக்கும்

நத்தையாரே வாருங்கள்!

மெத்த வழியில் நீரும் சிந்தும்

மெல்ல மெல்லச் செல்லுங்கள்!”

இது ‘நல்ல நல்ல பாட்டு’ என்று, இவர் சிறுவர்க்காக எழுதிய பாடல் நூலில் இடம் பெற்றுள்ளது.

இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர்.  முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றி முதன் முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் என்பதால், தமிழிலக்கிய வரலாற்றில், தனிப்பெரும் சாதனையாளராக இவர் போற்றப்படுகின்றார்.  பின்னால் வெளிவந்த பொது அறிவு சார்ந்த பல்லாயிரம் நூல்களுக்கு, இவர் தொகுத்த கலைக்களஞ்சியமே, அடித்தளமாக அமைந்தது.

சிறந்த கவிஞரான இவர், சிறார் இலக்கியத்திலும், கதை, நாவல், சிறுவர் பாடல் எனச் சிறப்பான பங்களிப்பை நல்கியுள்ளார். இவர் எழுதிய முக்கியமான சிறுவர் கதைகள், ‘ஓலைக்கிளி’, ‘தம்பியின் திறமை’, ‘நாட்டிய ராணி’, ‘கடக்கிட்டி முடக்கிட்டி’, ‘மஞ்சள் முட்டை’, ‘நிலாப்பாட்டி’ ஆகியவை.

மாயக்கள்ளன்’, ‘சூரப்புலி’, ‘கொல்லி மலைக்குள்ளன்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்’, ‘தரங்கம்பாடித் தங்கப் புதையல்’ஆகிய சிறுவர் நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.  குழந்தைகளுக்காக மூன்று கவிதை நூல்களையும், தூரன் படைத்துள்ளார். அவை ‘ஆனையும் பூனையும்’, ‘நல்ல நல்ல பாட்டு’, ‘மழலை அமுதம்’ என்பனவாகும்.

‘ஓலைக்கிளி’ கதை உழைப்பின் உயர்வை எடுத்துரைக்கின்றது. ஊர் ஊராகச் சென்று கூடை, முறம் பின்னி விற்கும் ஒரு கூட்டத்தில் ஒரு பாட்டியும், தங்கவேல் எனும் பெயர் கொண்ட அவளுடைய பேரனும் இருக்கின்றனர். பனையோலையால் பாட்டி செய்த கிளி பொம்மையை வாங்க குழந்தைகள் போட்டி போடுகிறார்கள். நல்ல வருமானம் கிடைக்கிறது..ஆனால் பேரனுக்குப் பொம்மைகளை விற்பது பிடிக்கவில்லை. எல்லாப் பொம்மைகளும் தனக்கே வேண்டுமென்று அழுது அடம் பிடிக்கிறான். பொம்மை சோறு போடாது எனப் பாட்டி அவனிடம் சொல்கிறாள். கற்பனையில் கிளி பொம்மை மூலமாக அங்குமிங்கும் பறந்து செல்லும் பேரன், முடிவில் பாட்டி சொல்லுக்கு உடன்படுகிறான்.

‘நீலத்தாமரை’ கதையில் ஒரு பொற்றாமரை குளத்தில் அதிசய நீலத்தாமரை பூக்கிறது. அரசி காவலுக்கு ஆள் போட்டும், தினமும் அது திருட்டுப் போகின்றது. திருடனைப் பிடிக்க வேண்டும்; இல்லையேல் பாதாளச் சிறையில் அடைப்பேன் என அரசி, மகன்களை ஒவ்வொருவராகக் காவலுக்கு அனுப்புகிறாள் இரண்டு மகன்கள் திருட்டைத் தடுக்க முடியாமல், பாதாள சிறையில் அடைபடுகின்றனர். கடைசியாக மூன்றாமவன் விக்கிரமன் காவலுக்கு வருகின்றான். அவன் திருடனைப் பிடித்தானா? பூவைத் தினமும் பறிப்பவர் யார்? அரசி ஏன் தன் மகன்களைப் பாதாள சிறையில் அடைக்கிறாள்? என்பதைச் சுவாரசியமாக விளக்கும் கதை இது.

இவருடைய ‘நிலாப்பாட்டி’ சிறப்பான கதை. இதிலும் ஒரு ஏழை பாட்டி இருக்கின்றாள். அவள் எப்போதும் ராட்டினம் சுற்றிக் கொண்டிருப்பதால் எல்லோரும் நிலாப்பாட்டி என்று அழைக்கின்றனர். அடிபட்ட ஒரு குருவியை அவள் காப்பாற்றுவதால், குருவி அவளிடம் பாசமாக இருக்கின்றது.வயதாகி நோயுற்று, அவள் பட்டினி கிடக்கும் போது அவள் சாப்பாட்டுச் செலவுக்காகத் தினம் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து கொடுக்கிறது. அதைப் பாட்டி கொண்டு போய் அரசரின் உண்டியலில்  சேர்த்துவிடுகின்றாள். எங்கிருந்து அந்தக் காசைக் குருவி கொண்டு வருகிறது? என்பதை விளக்கும் கதையிது. சிறுவர்க்கு வாசிக்கப் பிடிக்கும்.

‘கடக்கிட்டி முடக்கிட்டி’யில் கால் வளைந்த கழுதை புத்திசாலியாகப் படைக்கப்பட்டுள்ளது.  உடல் ஊனம் ஒரு குறையில்லை என்பதையும் இக்கதை விளக்குகின்றது.   

‘பாரதியும் பாப்பாவும்’ என்ற நூலில், பாரதியின் வாழ்க்கை வரலாறு, வ.உ.சி க்கும், பாரதிக்கும் இடையே இருந்த தோழமை, பாரதி எழுதிய பாப்பா பாடல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிறுவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக எளிமையான நடையில் சுவையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

“முதலில் பூ மொக்காக இருக்கின்றது; பிறகு அது மலராகின்றது. அப்படி மலரும் போது, மிக அழகாக இருக்கின்றது அது போலத் தான் தமிழிலே ஒரு புதிய மலர்ச்சியையும், தமிழ்நாட்டு மக்களிடத்தே ஒரு புதிய சக்தியையும் உண்டாக்கிய பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி, ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். இவருடைய படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளதால் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.

இவரது பிறந்த நாளான இன்று, (செப்டம்பர் 26) இவரது சிறுவர் இலக்கியப் பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்வது நம் கடமை!

Share this: