இந்த மலையாள சிறார் அறிவியல் நாவலை எழுதியவர் சி.ஆர் தாஸ். திருச்சூரில் வசிக்கும் இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தை இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருக்கும் இவருடைய சிம்புவின் உலகம், பறந்து பறந்து ஆகிய குழந்தை இலக்கிய நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனை எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே காலக்கனவுகளைக் காண்பதன் மூலம், காலம் நண்பனாக நம்முடனே வரும் என்பதைக் குழந்தைகளுக்குக் கதை வழியே இந்நூல் சொல்கிறது. மிஸ் ஆனி என்ற பெண், லண்டனிலுள்ள பிரிட்டிஷ் விண்வெளி மையத்துக்கு ஒரே ஒரு நிமிடம் தாமதமாகச் சென்றதால் வேலை மறுக்கப்படுகின்றது. சிறுவயது கனவு வேலை கிடைக்காமல் போய்விட்டாலும், ஆனி சோர்ந்து விடவில்லை. வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை, ஆனியுடையது.
சூசியின் பெற்றோர் ஆசிரியர்கள். அறிவியல் ஆசிரியரான அவள் அப்பா மூலம், சூசி இயற்கையிலிருந்து நேர மேலாண்மை பாடங்களைக் கற்றுக் கொள்கின்றாள். நேர ஒழுங்கைக் கடைபிடிக்காத ஸ்டீபன், சிறிய தவறு கூட வாழ்வில் பெரிய தோல்விக்குக் காரணமாகும் என்பதைத் தன் அனுபவம் மூலம் கற்கிறான்.
நட்பும், சமாதானமும், ஆரோக்கியமும் , அன்பும் அடுக்களையிலிருந்து கிடைக்கின்றன என்ற விபரத்தை, சூசியின் அம்மா சொல்லிக் கொடுக்கிறாள். நேர மேலாண்மை குறித்த சூசியின் தேடல், இளம் வயதிலேயே அமெரிக்க அறிவியலாளர்களுடன் வீடியோ கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மிகப் பெரும் வாய்ப்பை அவளுக்கு அளிக்கின்றது. மேலும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குக் கனவுகளையும், அனுபவங்களையும் வழங்குகிறது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; நம் வேலைகளை சரியாக நிறைவேற்ற உதவுகிற ஒரு கோட்பாடு தான், நேர மேலாண்மை எனக் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில், கதை வழியாக நேர மேலாண்மை குறித்து, எளிமையாக விளக்கும் புத்தகம்.
நம் கனவை நனவாக்க காலக்கனவுகளைக் காணவேண்டும் என்பதைக் குழந்தைகள் மனதில் பதிய வைக்கும் சிறந்த புத்தகம்.
வகை | மொழிபெயர்ப்பு – சிறார் அறிவியல் நாவல் |
ஆசிரியர் (மலையாளம்) தமிழாக்கம் | சி.ஆர். தாஸ் உதயசங்கர் |
வெளியீடு | புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +044 24332424 செல் +91 8778073949 |
விலை | ₹ 70/- |