பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அகரம் அறக்கட்டளைக்காகத் திரைப்பட நடிகர் சூர்யா தி.நகரில் வாங்கியுள்ள புதிய கட்டடத்தில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இந்த 17 நூல்களும் 16/02/2025 மாலை நான்கு மணியளவில் வெளியிடப்பட்டன. பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் துணைவியார் லைலா தேவி அவர்கள் நூல்களை வெளியிட, திரைப்பட நடிகர் சூர்யா அவற்றைப் பெற்றுக் கொண்டார். ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

குழந்தைகளின் வாசிப்புத் திறன் மேம்பட வேண்டும் என்ற சமூக அக்கறையில் உருவாகியுள்ள 16 பக்கமுள்ள இந்நூல்களைப் பாரதி புத்தகாலயத்தின் ஃபுக்ஸ் பார் சில்ரன் பதிப்பகம், லாப நோக்கமின்றி மிகக் குறைந்த விலையில் ரூ.20/-க்கு வெளியிட்டுள்ளது.
இன்று வெளியான புதிய நூல்களும், அவற்றின் ஆசிரியர்களும்:-
1. நட்சத்திரக்குழந்தை – தேனி சுந்தர்
2. பூனையா? புலியா? – புவனா சந்திரசேகரன்
3. உதவி – ஜெயா சிங்காரவேலு
4. அகப்பை சூப் – லைலா தேவி
5. சிவி கேட்ட வரம் – பூர்ணிமா கார்த்திக்
5. வைக்கம் வீரர் பெரியார் – ஞா.கலையரசி
ஆன்லைனில் இந்நூல்களை வாங்குவதற்கான இணைப்பு:- https://thamizhbooks.com.
பேராசிரியரும், கல்வியியலாளருமான திரு ச.மாடசாமி அவர்களின் நேரடி வழிகாட்டலில் மிக எளிய மொழியில் இந்நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும், திக்கித் திணறி வாசிக்கும் குழந்தைகளுக்கும் இந்தக் கதை நூல்கள் மிகவும் ஏற்றவை.
அகரம் பவுண்டேஷன் மூலம் உதவி பெற்று உயர் கல்வி பெறும் மாணவ, மாணவியரும் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ், எழுத்தாளர்கள் அம்மு பிரியசகி, மோ.கணேசன், பாரதி புத்தகாலயத்தின் எம்டி திரு நாகராஜ், ஓவியர் ரோகிணி குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ச.மாடசாமி அவர்கள், தம்முரையில் “அகரத்திலிருந்து பல பேரை உருவாக்கியிருக்கிறீர்கள்; படைப்பாளிகளையும் நீங்கள் உருவாக்க வேண்டும்; முக்கியமாகப் பெண் படைப்பாளிகளை உருவாக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான கிராமப்புற ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து, அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கும் திரு சூர்யாவின் ‘அகரம்’ புதுக் கட்டடத்திறப்பு விழாவில், இந்நூல்கள் வெளியானது மிகவும் சிறப்புக்குரியது.