ஆண் உடல் பதின்மப் பயணம்

Aanudal_pic

இந்நூலின் ஆசிரியர் சாலை செல்வம். இவர் பெண்ணியலாளர், கல்வியாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். கல்வி, பெண்கள், குழந்தைகள் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர். சிறார் வாசிப்புக்காக 75க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும், மொழி பெயர்த்தும் இருக்கிறார்.

மரபணு, ஹார்மோன் ஆகியவை காரணமாகப் பதின்ம வயதில் பெண் குழந்தைகள் பருவம் அடைவது போலவே, ஆண் குழந்தைகளும் பருவம் அடைகிறார்கள். அச்சமயம் அவர்கள் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக அந்த உடல் மாற்றங்கள் குறித்து அவர்களை அரவணைத்து, அன்பாகப் பேசிக் குழப்பத்தை நீக்கும் நல்ல வழக்கம், நம் சமூகத்தில் அறவே இல்லை. அதற்கு மாறாகத் “தொண்டை துருத்திடுச்சி; குரல் உடைஞ்சி கரகரத்துடுச்சி” என்று கிண்டல் செய்து குழப்பத்தை அதிகப்படுத்துவோரே அதிகம்.

ஒரு குழந்தை அது ஆணோ, பெண்ணோ பருவமடையும் போது, மனநிலை சீராக இருக்கும் என்று சொல்ல முடியாது. அச்சமயம் ஹார்மோன் காரணமாக உடலில் மட்டுமல்லாது, மனநிலையிலும் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள் உண்டாகின்றன. தங்கள் சந்தேகத்தையும், உணர்வுகளையும் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பகிரத் தயங்கி, “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்று சிலர் மனதிற்குள் மருகலாம்.

பதின்பருவ உடல் மாறுபாடு குறித்து ஆண் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வார் யாருமில்லை; அறிவியல் பூர்வமாக விளக்கிப் பயத்தைப் போக்கும் நூல்களும் தமிழில் அதிகமில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளிவந்துள்ள இந்நூல், அவர்களது குழப்பங்களை நீக்கித் தெளிவைத் தரக்கூடியதாக அமைந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது!

பருவமடைதலால் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்கவும், பாலியல் சீண்டல்களைத் தைரியமாக எதிர் கொள்ளவும் இந்நூல் கற்றுத் தருகிறது. “அந்தச் சமயத்தில் மனதை ஒருமுகப்படுத்திப் பிடித்தமான வாசிப்பு, இசை, நடனம் போன்ற சிறந்த பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும்; உணர்வுகளை நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம்; சேர்ந்து செயல்படலும், சமூக நலனுக்கான செயல்பாடுகளும் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள்” என்றெல்லாம் சொல்லி நம்பிக்கையூட்டி, ஆண் குழந்தைகள் இந்தச் சிரமமான பருவத்தைத் தைரியமாகக் கடந்து, தங்கள் வருங்காலத்தை உறுதியாகக் கட்டமைக்க ஆக்கப்பூர்வமாக வழிகாட்டும் இந்நூல் சிறந்த முன்னெடுப்பு!

கருப்பு வெள்ளை ஓவியங்கள் வெகு சிறப்பு! எழுத்துரு மட்டும் கண்ணுக்கு உறுத்தலாக உள்ளது.  

வகைஇளையோர் கட்டுரை நூல்
ஆசிரியர்சாலை செல்வம்
வெளியீடு:-ஹெர் ஸ்டோரிஸ், 81, 4வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை-83. செல் +91 96003 98660
விலைரூ 80/-
Share this: