தமிழின் முன்னணி அறிவியல் புனைகதை எழுத்தாளர். இவரது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், டார்வின் ஸ்கூல், 1729 உட்பட அறிவியல் புனைகதை நூல்கள், பரிசுகள் பல வென்றவை. கடலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
மருத்துவத்துறை அற்புதங்களையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் உண்மைகளையும், ‘நவீன விக்ரமாதித்தன் கதைகள்’ வழியே சொன்ன நூலுக்கு, 2014 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்தது.
மாணவர்களுடைய அறிவியல் மனப்பன்மையை வளர்க்கும் விதத்தில், இன்றைய மனப்பாடக் கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த, இவரது குறுநாவல் ‘ஆயிஷா’ ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிப் பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது. அது முதல், இவர் ஆயிஷா இரா.நடராசன் என்றே அழைக்கப்படுகிறார். ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக அமைந்த இக்குறுநாவல், திண்டிவனம் அருகில் பாம்புக்கடிக்கு மருந்து கண்டிபிடிக்க ஒரு மாணவன் தன்னுடலையே சோதனைக்கு உட்படுத்தி இறந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியிருக்கும் இவர், அறிவியல் புனைகதைகள் எழுதுவதில், தமக்கென்று ஓர் இடம் பிடித்திருக்கிறார்.