எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!
உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது.
‘READ YOUR WAY’ என்பது இந்த 2024ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme)ஆகும். புத்தக வாசிப்புடன், பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவித்தலும், இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.
முதன்முதலில் ஸ்பெயினில் தான், இந்நாளைக் கொண்டாடத் துவங்கினர். ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொண்டனர்.
துவக்கத்தில் ஆண்கள், பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். ஆனால் நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்தில் அது தொடர்கிறது.
1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.
“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.
உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பல்வேறு அமைப்புகளால், தமிழ்நாடெங்கும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவது, மகிழ்ச்சியான செய்தி. சிறார் தாம் வாசித்த நூல்கள் குறித்துப் பேசுகின்றார்கள்; பெரியவர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எழுத்தாளர்களும், வாசகர்களும் கலந்துரையாடும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. பல புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன. பதிப்பகங்கள் புத்தக விலையில், சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன.
இந்த உலகப் புத்தக நாளில், புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்!
இனிய வாழ்த்துகளுடன்,
ஆசிரியர்.
(Pc Thanks:- Image by Mohamed Hassan from Pixabay)