சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
மைனா (Mynah) என்ற ஹிந்தி பெயரின் மூலம், சம்ஸ்கிருதம்(Madana). பழங்காலத்தில் நம் தமிழ் இலக்கியங்களில், இதன் பெயர் நாகணவாய்ப்புள். தமிழில் புள் என்றால், பறவை. தற்காலத்தில் மைனா என்ற பெயரே, இதற்கு நிலைத்து விட்டது.
இதன் உடல் காப்பிக் கொட்டை நிறம்; தலை கறுப்பு; கண்ணைச் சுற்றி மஞ்சளாகவும், வாலுக்கு அடியில் வெள்ளையாகவும் இருக்கும்.
இது பூச்சி, புழு, பழம், தேன் என எல்லாம் தின்னும். எனவே இது ஓர் அனைத்துண்ணி(omnivorous). புறா, காகம், சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்கும் இடங்களில் வாழும். காலத்துக்கு ஏற்றாற் போல், பெரிய நகரங்களிலும் வாழத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பறவை.
பழைய தாள், வைக்கோல், துணி ஆகியவற்றைக் கொண்டு, மரப்பொந்து, கட்டிட ஓட்டை, பாறை இடுக்கு ஆகியவற்றில் கூடு கட்டும். தென்னிந்தியாவில் ஏழு வகை மைனாக்கள் இருக்கின்றனவாம்.
சிலர் கிளி போலக் கூண்டில் மைனாவை வளர்ப்பது உண்டு. கிளி போலவே மைனாவும், நாம் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் திறன் படைத்தது.