விநோத விலங்குகள்-21 – பிளாட்டிபஸ்

Platypus_pic

சுட்டிகளே! பிளாட்டிபஸ் (Platypus)பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இதன் தலையின் முன்பக்கம் வாத்து போன்ற தட்டையான அலகு இருப்பதால், இதற்குத் தமிழில் ‘வாத்தலகி’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். நான் உங்கள் புரிதலுக்காக, ‘பிளாட்டிபஸ்’ என்றே குறிப்பிடுகிறேன்!

வாத்து போல அலகு இருந்தாலும், இது ஒரு பறவை அல்ல; இது ஒரு விலங்கு. ஆனால் மற்ற விலங்குகளைப் போல, இது குட்டி போடாது. பறவைகளைப் போல முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். ஆனால் குஞ்சுகளுக்குப் பறவைகள் போல், இரை கொண்டு வந்து வாயில் ஊட்டாது. விலங்குகளைப் போலப் பாலூட்டி வளர்க்கும். தலை சுற்றுகிறதா?

முதன்முதலில் இதனை ஆய்வு செய்த ஐரோப்பிய உயிரின  ஆய்வாளர்களும், ‘இப்படி ஓர் உயிரினம் இருக்க முடியுமா?’ என்று, சந்தேகப்பட்டார்களாம். ஆனால் இயற்கை அதிசயமும், அற்புதமும், பிளாட்டிபஸ் போன்ற விநோத விலங்குகளும் கொண்டது அல்லவா?

பிளாட்டிபஸ் கிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள நன்னீர் ஏரிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் எலி போல வளை தோண்டி வசிக்கின்றது. இரவு நேரங்களில் மீன் போல நீரில் நீந்தியபடி, லார்வா, புழு,பூச்சி, இறால் ஆகியவற்றைப் பிடித்து உண்கின்றது.

இதன் பாதங்களில் அமைந்துள்ள ஜவ்வுகள், நீரில் எளிதாக நீந்த உதவுகின்றன. அகலமான தட்டையான வால்பகுதி, உடலைத் திருப்பும் சுக்கானாக உதவுகின்றது. இந்த வால் பகுதியில் தான், உடலுக்குச் சக்தி தரும் கொழுப்பைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். இதன் கூர்மையான கால் நகங்கள் வளை தோண்டவும், நிலப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரவும் உதவுகின்றன.

ஆண் பிளாட்டிபஸ்ஸின் பின்னங்கால்களில், ஒரு விஷக் கொடுக்கு உள்ளது. இந்த விஷ முள்ளால் கடிபட்டால், மனிதரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், தாங்க முடியாத அளவுக்குக் கடுமையான வலி ஏற்படும். அது பல மாதங்களுக்கு இருக்குமாம்.

ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் கதைகளில், இந்த பிளாட்டிபஸ் இடம் பெற்றுள்ளது. நீர் எலிக்கும், வாத்துக்கும் பிறந்த பிள்ளையாம், இந்த பிளாட்டிபஸ்!

(Thanks Platypus Pic – Wikipedia Commons)

Share this: