தமிழ் ஒரு சூழலியல் மொழி

Tamilsoozhaliyal_pic

தமிழைப் பண்பாடு, வரலாறு, அரசியல், சமயம், அறிவியல், பகுத்தறிவு போன்ற பல்வேறு வகைமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்திருந்தாலும் சூழலியல் மொழியாகப் பார்ப்பது, இதுவே முதல் முறை. எனவே இத்தலைப்பில் வெளிவரும் முதல் நூல் என்ற பெருமை இதற்குண்டு.

.“ஒரு மொழியின் இலக்கியங்களில் சூழலியல் இருக்கும்;ஆனால் இலக்கணமே சூழலியலாக இருப்பது, தமிழ். அதை அமைத்துத் தந்தது தொல்காப்பியம். அது தான் இயற்கைக்கும், செயற்கைக்கும் வேறுபாடு சொல்லித் தருகிறது” என்று கூறும் ஆசிரியர் நக்கீரன், இதற்குத் தொல்காப்பியத்திலிருந்து சான்றுகள் தந்து, எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறார்.

‘உலகின் முதல் குரங்கு, தமிழ்க்குரங்கு அன்று’ என்ற இரண்டாவது கட்டுரை, அறிவியல் ஆதாரம் சிறிதுமின்றி, வெற்றுத் துதிபாடிகள் தமிழ் குறித்தும், தமிழினம் குறித்தும் வியந்து பேசும் பழம்பெருமைகளைப் பகடி செய்கின்றது. தமிழை அழிப்பதற்குச் சமஸ்கிருதமோ, இந்தியோ, ஆங்கிலமோ எதுவும் வேண்டாம். ‘முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை’ என்ற குழுவே போதும்’ என்று இவர் எழுதியிருப்பது, நல்ல நகைச்சுவை.

மொழியியல் உலகில் தமிழே முதல் மொழி என்பதற்குத் தரவுகள் இல்லை; ‘அனைத்து மொழிகளின் தாய்’ என்பது, அறிவியலும் இல்லை. அறிவியலின்படி, உலகின் முதல்மொழி ‘சைகை’ மொழியாகவே இருக்க முடியும்” என்ற ஆய்வாளர் கண்ணபிரான் ரவிசங்கர் கூற்று ஏற்புடையதாயிருக்கின்றது.

“உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமை ஒன்றுண்டு. அது தான் திணைக்கோட்பாடு. உலகில் முதல் சூழலியல் கோட்பாட்டை உருவாக்கிய மொழி, தமிழ்மொழியே. திணைக்கோட்பாட்டைத் தம் வாழ்வியலாகக் கொண்டிருந்தார்கள், பண்டைத் தமிழ் மக்கள். தற்கால அறிவியல் சூழல் அமைவை (Ecosystems), எப்படி வகைப்படுத்துகிறதோ, அதே வகைமையிலேயே, நம் திணைப்பகுப்பும் அமைந்துள்ளது” என்று ஆசிரியர் கூறியிருப்பது, தமிழர்களாகிய நாமெல்லாரும் பெருமையுடன் கொண்டாட வேண்டிய விஷயம்.

‘முதல் எனப்படுவது நிலமும், பொழுதும் என்று தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் இயம்புவது, இயற்கை அறிவியல்’ என்று சொல்லும் ஆசிரியர், தொல்காப்பியத்தில் சமயம், மதம் போன்ற சொற்கள் இல்லை என்பதையும் குறிப்பிடுகின்றார். ஆனால் உயிரினங்களின் ஆண் பெண் இளமை மரபுப் பெயர்களின் பட்டியலைக் கூறும் தொல்காப்பிய நூற்பாவில், பிற்காலத்தில் திட்டமிட்டு வர்ணக் கருத்துகள் இடைச்செருகலாக நுழைக்கப்பட்டுள்ளதையும், தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார். ‘சூழல் அழிந்தால், மொழியும் அழியும்’ என்ற கட்டுரை, சூழலுக்கும் மொழிக்குமான நெருக்கமான உறவினைப் பேசுகின்றது.

‘தொல்காப்பியம் ஒரு சுருக்கெழுத்துப் பிரதி’ என்ற கட்டுரையில் பழந்தமிழர் திணைகளுக்குப் பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளதையும், அந்தத் திணைப்பெயர்கள் நிலம், பொழுது ஆகியவற்றோடு, அழகாகப் பொருந்துவதையும், எடுத்துக்காட்டு தந்து விரிவாகவும்,சுவாரசியமாகவும் விளக்கியுள்ளார்.

‘இலக்கியத்தில் சூழலியல் எப்படி பதிவாகவேண்டும்?’ என்பதற்குச் சத்திமுற்ற புலவரின் ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ பாடலை உதாரணம் காட்டும் ஆசிரியர், இக்காலத்தில் செயற்கைக்கோள் போன்ற அதிநவீன அறிவியல் கருவிகள் வைத்திருந்தும், நம் ஊடகங்கள் உயிரினங்கள் பற்றித் தவறான தகவல்களை வெளியிடுவதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார்.

ஒரு காலத்தில் சிறப்பாக விளங்கிய நம் சூழலியல் சிந்தனை பிற்காலத்தில் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள், ‘கபிலர் ஏன் மருதம் பாடவில்லை?’ என்ற கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

வெப்ப மண்டலத்தில் வாழும் தமிழ் மக்கள், குளிர்ச்சியைக் கொணரும் கார்காலத்தை வரவேற்பது இயல்பு. வெப்பம் மிக்க வேனில் (வசந்தம்) காலத்தை வரவேற்பது, கடுங்குளிரில் அவதிப்படும் ஆங்கிலேயரின் இயல்பு. ஆனால் தமிழ் எழுத்தாளுமைகள் வேற்றுநிலப் பண்புகளை வேராகக் கொண்ட அந்நிய சொற்களை நம் மொழிக்குள் திணித்து வசந்தத்தை வரவேற்று எழுதுவதைத் ‘தமிழில் வசந்த காலக் குற்றங்கள்’ என்ற கட்டுரையில் சாடுகின்றார்.

பொருளாதார மேலாதிக்கத்துக்கு முனையும் ஆங்கிலத்தின் தாக்குதலால் தமிழுக்கும், நம் இயற்கை வளத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ஒரு கட்டுரை விளக்குகின்றது.

“நம் வாழ்வின் மீது மின்வெளிச்சம் பாய்ச்சியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதற்காக மின்சாரத்தை அரவணைத்துக் கொள்ள முடியாது. மின்தாக்குதலைத் தடுக்க வீட்டில் தடுப்பான் (Breaker) அமைத்திருப்பது போல, ஆங்கிலத்துக்கும் ஒரு தடுப்பான் தேவை” என்ற இவரின் எச்சரிக்கையை, நாம் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும்.

இந்நூலில் ‘நினைவேக்கம்’, ‘செய்மதி’, ‘ஆலி’, ‘பொழி’ ‘சூழல் அமைவு’ போன்று, பல புதிய சொல்லாக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் குறித்தும், சூழலியல் குறித்தும் புதிய சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

ஆதிக்க மொழிகளின் தொடர்ச்சியான தாக்குதலிலிருந்தும், உலகமயமாக்கலின் கொள்ளையிலிருந்தும், தமிழ் மொழியையும் சூழலையும் ஒருசேரக் காக்கும் அவசியத்தை, இது பேசுவதால் இக்காலத்துக்கு மிகவும் தேவையான நூலிது. நம் தாய்மொழி மீதும், நம் சூழலியல் மீதும் உண்மையான அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

வகைசூழலியல் கட்டுரை
ஆசிரியர்நக்கீரன்
வெளியீடு:-காடோடி, நன்னிலம். (+91 8072730977)
விலை:-ரூ 190/-
Share this: