இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11 கதைகளை எழுதியவர்கள், பெண் குழந்தைகள் என்றறிந்து வியப்பு!
இத்தொகுப்பில் கதைகளை எழுதிய சிறுவர்களே, அதற்கான ஓவியமும் வரைந்துள்ளனர். மேலும் கதாசிரியரே கதையைச் சொல்லும், காணொளியின் QR CODE உம் தரப்பட்டுள்ளமை, மிகச் சிறப்பு. பெற்றோரிடம் குழந்தைகள் கதை கேட்ட காலம் மாறி, அவர்களே கதை எழுதத் துவங்கியிருப்பது, சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சியைக் குறிக்கின்றது.
‘முள்ளில் மாட்டிய கீரிப்பிள்ளை’ என்ற முதல் கதையை எழுதியிருப்பவர், 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிநயா. சிறுவர் இதழ்களில் 100 க்கும் மேற்பட்ட கதைகளை, இவர் எழுதியுள்ளதோடு, கதைகளுக்குப் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இதில் ‘பகைவனான கீரிக்கு, உதவ நினைக்கிறது பாம்பு; ஆனால் கீரிக்கு, அதன் பிறவிக்குணம் போகவில்லை’ என்பதாகக் கதையை அமைத்துள்ளார்.
இரண்டாவதாக இடம் பெற்றுள்ள, ‘கதைச்சொல்லிக் கரடி’ என்ற கதையை, 6 வயது ஆயிஷா அஸ்ஃபியா எழுதியுள்ளார் என்றறிந்து வியப்பு. ‘குறும்புக்கார இண்டி’ கதையை எழுதியுள்ளவர், 5 வயது எம்.கே.ஏஞ்சல். அப்பா, அம்மா சொல்லைக் கேட்க வேண்டும் என்ற நீதியோடு முடித்துள்ளார் இவர்.
ஹ.தமீனா தஸ்வின் எழுதிய ‘மந்திர பூமி’யில், ‘காயம் பட்டால் விலங்கு சின்னதாகிவிடும்; காயம் ஆறியவுடன் பெரியதாகி விடும்’ என்ற விநோத கற்பனை சிறப்பு. குழந்தைகளால் மட்டுமே, இப்படிச் சிந்திக்க முடியும்.
எல்லாக் கதைகளின் களமாகக் காடும், காட்டு விலங்குகளும் இருக்கின்றன. விலங்குகள் அனைத்தும் பேசுகின்றன. இயற்கையின் மீதும், பிற உயிரினங்கள் மீதும், இவர்கள் கொண்டுள்ள அளவற்ற நேசம், இக்கதைகளில் வெளிப்படுகின்றது. இக்குழந்தைகளின் எல்லையில்லாக் கற்பனையில் உருவான கதைகளை, அவசியம் வாங்கிச் சிறுவர்களுக்கு வாசிக்கக் கொடுங்கள்!
வகை | சிறுவர் கதைகள் |
தொகுப்பாசிரியர் | உமையவன் |
வெளியீடு | நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல் 8939387276/ 89393 87296 |
விலை | ரூ 110/- |