கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ், இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’, ‘வண்ணக்கதிர்’, ‘குழந்தைகள் பூங்கா’ ‘வெற்றிப்பாதை’ ‘மாயா பஜார்’ போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுவர் நாவலுக்காக, 2021 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளார்.
இவரது ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’ ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்’ ‘நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை’ ஆகியவை, விருது பெற்ற சிறுவர் நூல்கள்.
கிராமப்புறக் குழந்தைகளின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தில் நோக்கில், 100 க்கும் மேற்பட்ட இரண்டு பக்க படக்கதை அட்டைகளைத் தயாரித்து அளித்திருக்கிறார். இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ‘புத்தகப் பூங்கொத்து’ திட்டத்தில் தேர்வாகி, 32000 அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
தமிழக அரசின் சமச்சீர் பாடத்திட்டத்திலும், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பிறந்த இவர், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார்.